வாலி என்னும் அற்புதக் கலைஞன் – கவிஞன்

வாழ்க வாலி !
வாழ்க வாலி !

திருச்சி ரயில் நிலையம். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை அணுகுகிறார் ஒரு இளைஞர். அவரது கையில் அவர் எழுதிய பாடல் அடங்கிய தாள். அந்த வண்டியில் உட்கார்ந்திருக்கும் பிரபலப் பின்னணிப் பாடகரை தயங்கித் தயங்கி அணுகி, தான் எழுதிய பாடலைக் காண்பிக்கிறார். வாங்கிப் பார்த்த பிரபல பாடகருக்கு முகம் மலருகிறது. அவருக்குப் பிடித்த அழகன் முருகனைப் பற்றிய பாடல். அங்கேயே இசை அமைத்து பாடலை மெல்லப் பாடிப் பார்க்கிறார். பாடலில் உள்ள சந்தம் கருத்தைக் கவர்ந்தது.

ஆரம்ப வரிகளே மனதை கொள்ளை கொண்டது:

‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’

பாடல் மிகவும் படித்துப் போக தானே இசையமைத்து பாடினார் டி.எம்.எஸ்.

அந்த இளைஞர் திரு வாலி. பிரபலப் பாடகர் : திரு டி.எம்.எஸ். இன்று இந்த இருவருமே இல்லை. ஆனாலும் அவர் எழுதி இவர் பாடிய பாடல் என்றென்றைக்கும் தமிழ் கூறும் நல்ல நெஞ்சங்கள் எல்லாவற்றிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

வாலி தான் எழுதிய பக்திப் பாடல்களால் புகழ் பெறவில்லை என்றாலும் அவருக்கு அதுவும் கைவந்த கலைதான். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம் ஆகியவை அவர் எழுதிய பக்தி கதைகள். அதிலும் அவர் தனது தனி முத்திரையைப் பதித்தார்.

இராமாயணம் பற்றி சொல்லும்போது எழுதுகிறார்:

தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள் !

என்ன ஒரு வியக்க வைக்கும் சொல்லாடல் பாருங்கள்!

வாலிக்கு முருகன் மேல் தீராத பக்தி. எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் கொடுப்பார்.

பாடல்: கற்பனை என்றாலும்
எழுதியவர்: வாலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி

பல்லவி :
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் – நீ (கற்பனை)

அனுபல்லவி:
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே –நீ சரணம்:

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே (கற்பனை)

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதை எத்தனை எளிமையாக விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

பாடல் வரிகளுக்கு தன் ‘கணீர்’ குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் டிஎம்எஸ்.

இந்தப் பாடல் இறவா வரம் பெற்ற பாடல்.

இசைப்பா இந்தப் பாடல் மூலம் திரு வாலிக்கு தன் அஞ்சலியை பகிர்ந்து கொள்ளுகிறது.

இசைப்பா +

`எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்.

ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்’ –
கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

இறையுடன் இணைத்த இயல்பு கவிஞர் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து ஏழு நாட்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தும் முறையில் இசைப்பாவில் தந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவரது பாக்கள் பல இன்னும் வர உள்ளன.  எங்களை ஊக்குவித்த இசை மற்றும் வாலி நேசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்.

இசைப்பா குழுவினர்

இசைப்பாவில் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540

2 thoughts on “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

பின்னூட்டமொன்றை இடுக