இசையில் இணைந்தவர்களுக்கு,

இனிய வணக்கங்கள். இவ்வருடம் தொடர்ச்சியாக இயங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். பலரது ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. இனியும் தொடர்ந்து கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வருடம் நான் எனக்கான ‘கோட்டா’வை சற்று வித்தியாசமாக தொடங்க திட்டமிட்டிருந்தேன். தொடர்ந்து எதிர்பாராத சூழ்நிலைகளினால் எனது பாடல்கள் தள்ளிப் போகின்றன.

இன்று பிரபல பின்னணிப் பாடகர் யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள். இதற்காக இசைப்பாவில் என்ன பாட்டு போடலாம்? என அண்ணைக் கேட்டால் நீயே ஒரு பாடலை தேர்வு செய்து பதிவாக்கு என்றார். என்னிடம் சொற்பமான யேசுதாஸ் பாடல்கள்தான் இருக்கின்றன. அதில் அனைவருக்கும் பிடித்தமான (எனது கருத்து!) பாடல்தான் இது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.

வாலி-ராஜா!இளையராஜா-வாலி கூட்டணியில் பிறந்த பற்பல இனிய பாடல்களில் இதுவும் ஒன்று. ராஜா அவர்கள் பாடலை இரண்டாகப் பிரித்து இசையால் இணைக்கிறார்.

குறிப்பாக தபேலாவின் ராஜ்ஜியம் முடிந்த அடுத்த நொடியே ட்ரம்ஸ் இயங்கி உயிர் கொடுக்கிறது. ரொம்பவே புத்துணர்ச்சியான பாடல்.

வாலி மற்றும் யேசுதாஸ் ஆகிய இருபெரும் கலைஞர்களுக்கும் இது இசைப்பாவில் முதற்பாடல். இன்னும் நிறைய வரும். தொடர்ந்து இனிய பாடல்கள் உங்கள் இதயத்தையே வருடும்.

பரவசத்திற்கு தயாராகுங்கள்.

பாடல்: பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

படம்: வருஷம் 16

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: யேசுதாஸ்.

பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

படைத்தவன் படைத்தான் அதற்காகத் தான்!

நான்தான் அதன் ராகம் தாளமும்

கேட்டேன் தினம் காலை-மாலையும்.

கோலம்….அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்.

*****************************************

தூரத்தில் போகின்ற மேகங்களே!

தூறல்கள் பூமியில் போடுங்களேன்!

வேர் கொண்ட பூஞ்சோலை

நீர் கொண்டு ஆட!

ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே!

சிறகுகள் எனக்கில்லை தாருங்களேன்

ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட!

பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்

பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்

ஏதோ ஒரு போதை…….மனம் கொண்டாடுதே!

***********************************************

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்

நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்

நூலிழைபோல் இங்கு நெருங்கிய இதயங்கள்

பாலுடன் நெய்யென கலந்திடும் நாள்!

தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட உறவுகள் மேவி

பிள்ளைகள் பேணி வளர்ந்ததிங்கே!

மண்ணில் இதை விட சொர்க்கம் எங்கே?

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.

நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை -என்றும்

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை.

இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க

இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.- இசைப்பா குழுமம்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.- இசைப்பா குழுமம்!

இசையில் நனைந்தவர்களுக்கு, இதுபோல சிறப்பான பாடல்களைத் தொடர்ந்து தர எங்களுக்கு விருப்பம். உங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றன.  தகவல் பிழைகள், புதிய யோசனைகள், புதிய பங்களிப்புகள், நேயர் விருப்பம் ஆகியன இருப்பின் மறுமொழியாகப் பதியலாம்.

4 thoughts on “பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்!

  1. இன்று பிறந்தநாள் காணும் திரு யேசுதாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    இலக்கியம் போல் இசைப்பா குடும்பமும் விளங்க வாழ்த்துக்கள்.

    1. எப்போதுமே வாழ்த்துகள் என்றே பயன்படுத்துங்கள். வாழ்த்துக்கள் என்பது தவறான புரிதல். #கண்டிப்பான தமிழ் ஆசிரியர் என்றுதானே சொன்னீர்கள்!

      தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி. விரைவில் இக்குடும்பத்துள் நீங்களும் இணைய வாழ்த்துகள்.

  2. சரிங்க தமிழ் ஐயா! இனிமேல் தவறு நேராது.

    கற்றல் என்பது புதிதாகக் கற்பது மட்டுமல்ல, தவறாக புரிந்து கொண்டதை சரியாக கற்றலும் கூட, இல்லையா? (Learn and unlearn) என் மாணவர்களுக்கு நான் சொல்லும் வார்த்தைகள் இவை.

    இன்று ஒரு பதிவில் கருப்பு/கறுப்பு என்பதற்கு அர்த்தத்தில் வித்தியாசம் பற்றிப் படித்தேன். தமிழ் புலவர் (தமிழண்ணல்) எழுதி இருக்கிறார்.

    இதோ இணைப்பு:http://engalblog.blogspot.in/2013/01/blog-post_9.html

    உங்களிடமிருந்தும் புதிதாக ஒன்றை கற்றேன் இன்று!

    இணைந்து விட்டேனே!

  3. வணக்கம்

    அருமையான பாடல்கள் அனைவருக்கும் இன்பம் ஊட்டக்கூடிய வகையில் நல்ல விளக்கத்துடன் பாடல்கள் அமைந்துள்ளது,இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள் பார்க்க

    http://blogintamil.blogspot.com/
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி