மூதறிஞர் திரு இராஜகோபாலாச்சாரியாரின் பாடல் வரிகள் இவை. திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா. சபையில் முதல் முதல் பாடபெற்ற தமிழ் பாடல் இது.

எல்லோருக்கும் தெரிந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். மனதை உருக்கும் பாடல். கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்.

எத்தனையோ பாடகர்கள் பாடியிருந்தாலும் எம்.எஸ். குரலில் கேட்கும்போது உண்டாகும் மன உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் எங்கள் அம்மா வாங்கித்தந்த புத்தகங்கள் வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும்தான். எளிய தமிழில் ராஜாஜி அவர்களின் கதை சொல்லும் பாணி மிகவும் நன்றாக இருக்கும். எத்தனை முறை படித்திருப்போம் என்ற கணக்கே இல்லை.

அதே அவரது பாணியிலேயே எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல் இது.

இறைவனிடம் எதுவுமே கேட்கக்கூடாது; அவருக்கு நமக்கு என்ன தேவை என்று தெரியும். நமக்குப் பிடித்ததைவிட, நமக்கு தேவையானவற்றை அவரே தருவார் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பாடல் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இராக மாலிகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்

இசை ரத்தினம் எம்.எஸ் அம்மா
பாடலாசிரியர் : சக்கரவர்த்தி ராஜாஜி

பாடியவர் : எம்.எஸ்.சுபலட்சுமி

இசை அமைத்தவர் : தெரியவில்லை

ராகம்: சிவரஞ்சனி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்-4
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா 

ராஜாஜி

இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.

நான்கு வருடங்களுக்கு முன் பொங்கல் சமயத்தில் என் மகள், என் பேரன்கள்  மூவருமே அம்மை நோயால் பாதிக்கப் பட்டனர். நான் உதவி செய்ய அங்கு போயிருந்தேன். கடைசி பேரனுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு நாள் என் கைபேசியில் இந்தப் பாடலை போட்டேன். ஒருமுறை கேட்டவன் திரும்ப அதே பாட்டைப் போடு பாட்டி என்றான். திரும்ப, திரும்ப, திரும்ப என்று கேட்டுக் கொண்டே குழந்தை தூங்கி விட்டான். எழுந்திருந்தவன், அந்த பாட்டை போடு என்றான். உடல் வேதனையால் உறக்கம் வராமல் தவித்த  அவனுக்கு இந்தப் பாடல் மனதுக்கு ஒரு வித அமைதியைக் கொடுத்திருக்க வேண்டும். எப்போதும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பான். அப்படியே தூங்கியும் விடுவான்.

என் மாப்பிள்ளைக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது. என்னை இந்தப் பாடலின் அர்த்தத்தை கன்னட மொழியில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். என்னால் முடிந்த வரை எழுதிக் கொடுத்தேன். மொழிபெயர்ப்பு என்பது மிகவும் கடினம் அல்லவா? அர்த்தம் தெரிந்து உருகியே போய்விட்டார். அவருக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்தப் பாடலையும், அதன் அர்த்தத்தையும் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். கேட்டவர்கள் எல்லோருமே திருமதி எம்.எஸ். ஸின் குரலில் மயங்கினர்.

இசைப்பா குழுவிலிருந்து :
  • இது போலவே ஒரு திருவாசகம் உள்ளது :
    வேண்டதக்கது அறிவோய் நீ !
    வேண்டும் முழுதும் தருவோய்  நீ !
    வேண்டியே என்னை நீ ஆட் கொண்டாய்
    ………………………………………
    ………………………………………
    வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
    அதுவும் உந்தன் விருப்பமன்றே !

    (பல நாட்களுக்கு முன் படித்தது, தவறு இருந்தால் பொருத்தருள்க

  • ராஜாஜி மற்றும் எம்.எஸ் அவர்களை தமிழ் எழுதவும், தமிழ்ப் பாடவும் வைத்த எம் ஆசான் கல்கி அவர்களை வணங்குகிறேன் !
  • ஐநா சபையில் எம்.எஸ் அம்மா பாட வேண்டிய பாடல்களை தேர்ந்தெடுத்தவர் யார் தெரியுமா ? காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதிகள்.
  • ராஜாஜி பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவரை மூதறிஞர் என்றே அழைப்பர். அரசியல் சாணக்கியன் மற்றும் ஆன்மீக ஞானி. அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகள் மற்றும் வியாசர் விருந்து இதற்கு சான்று.  கல்கி தந்த ஊக்கத்தில், இவைகளை கல்கி இதழில் தொடராக எழுதினார். பின்னர் தமிழ் மற்றும் (அவரே எழுதிய) ஆங்கில புத்தகமாக வெளிவந்தது.
  • மங்களம், அடக்கம், இனிமை, தெளிவு, கம்பீரம் போன்ற பல சொற்களின் மறு உருவம் எம்.எஸ்.அம்மா. உண்மையிலேயே ஒரு பாரத ‘இசை’ ரத்தினம். இந்த பாடலின் நான்காவது சரணத்தை ‘கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி…‘ பாடும் பொழுது எம்.எஸ் அம்மாவின் முக பாவத்தை கவினிக்கவும். கண்களை மூடி, மனமுருகி, அவன் திரு காட்சிக்காக கைகளை ஏந்துப் பாடுவார். அவர் உடன் இருந்த சிலர் சொல்லிக் கேட்டு உள்ளேன் : இந்த பாடலின், இந்த சரணத்தை பாடும் பொழுது, எம்.எஸ் அம்மா பல ஆன்மீக அனுபவங்களை பெற்றதாகவும், கண்ணுக்குள்ளே, கண்ணை கண்டதாகவும் சொல்கின்றனர். இசையால் இன்பம் மட்டுமல்ல, இறைவனை காணலாம் !

ரஞ்சனி மாமி :

உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டுப் போனோம். அவர் எங்களைத் தொடர்பு கொண்டபோது. நானும் பங்களிக்கலாமா? என்றபோது எங்களுக்கு வேறேதும் தோன்றவில்லை. சரி என்று சொன்னோம். உடனே களத்தில் இறங்கிவிட்டார். கொஞ்சம் தாமதமாக பதிவை வெளியிட வேண்டியதாய்ப் போய் விட்டது. மிகுந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் அவருக்கு.

அதிகம் அவர் குறித்து சொன்னால், ‘எங்களூரிலே’ நன்றாக குளிர்கிறது. ஐஸ் வேண்டாம் என்கிறார்.

அவரின் அனுபவங்களுக்கு முன் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பது மிகவும் அபூர்வமானது. நன்றிங்மா!

அவரின் தளங்கள் மட்டும் இங்கே….அவரின் வார்த்தைகள் அங்கே!

http://ranjaninarayanan.wordpress.com/

http://pullikkolam.wordpress.com

உங்கள் கருத்துகள், இசை பாடல்ப் விருப்பங்கள் அனைத்தையும் எங்களுக்கு சொல்லுங்கள், கமெண்ட்-டாக. நீங்கள் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இயற்கை / இறை சூழ, இசை வாழ்க ! இன்பம் பெருக !

18 thoughts on “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

  1. அன்பு ஓஜஸ், அன்பு தமிழ்,
    வெளியே போய்விட்டு இப்போதுதான் வந்தேன். எனது எழுத்துக்களிலேயே எனது விருப்பத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்தேன்.

    என்னுடைய தளத்தில் இதனை ரீப்ளாக் செய்திருக்கிறேன்.

    இசைப்பா மேலும் மேலும் மேன்மை பெற வாழ்த்துகள்!

    1. அன்பு ஓஜஸ்,
      நீங்கள் இந்தப் பாட்டைப் பற்றி எழுதியிருக்கும் விஷயங்கள் இந்தப் பதிவுக்கு தனிப் பொலிவை ஊட்டுகின்றன.

      திருமதி எம். எஸ். தனது வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்தவர். இசைக்கு இசைவாகவே வாழ்க்கையை வாழ்ந்தவருக்கு என்ன குறை இருக்க முடியும்? இதைதான் அவரது முகபாவம் காட்டுகிறது என்று தோன்றுகிறது.

      இந்தப் பாட்டைக் கேட்கும் எல்லோருமே ‘குறை ஒன்றுமில்லை’ என்பதை உணருவார்கள்.

      நன்றி!

  2. மிகவும் அருமையாக் இருக்கிறது இந்தப் பதிவு. பாட்டை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால் எத்தனை முறை கேட்டாலும் திகட்டவே திகட்டாது. நீங்கள் சொல்வது போல் உருகித் தான் போகிறோம்.
    ஒரு அதிசயம் .இப்பொழுது தான் ரமணி சார் பதிவில் திருப்பதி பற்றி படித்தேன். அதைப் படித்து முடித்து விட்டு உங்களுடைய பதிவைத் திறந்தால் உள்ளம் உருகும் பாட்டு.

    மனம் நெகிழ்ந்தேன் என்பதே உண்மை.

    ஒரு சின்ன சந்தேகம். தவறாயிருந்தால் மன்னிக்கவும்.
    இந்த வலைத்தளம் உங்களுடையது தானே.நான் நினைப்பது சரியா? எனக்குப் புரியவில்லை.அதனால் தான் கேட்கிறேன்.கேட்பதில் தவறில்லையே.?

    ராஜி

    1. வருகைக்கும், பாட்டை ரசித்துக் கேட்டதற்கும் நன்றி ராஜி.
      நானும் இந்த வலைதளத்தில் ஒரு பங்களிப்பாளர். என்னைபோல இன்னும் நிறையப்பேர்கள் இருக்கிறார்கள்.

      நீங்களும் சேரலாம். உங்களுக்குப் பிடித்த பாடலை இதேபோல எழுதி அனுப்பலாம்.

      இசைக்கு மயங்குபவர்கள் எல்லோருமே இசைப்பாவின் அங்கத்தினர்கள் தான்!

      நன்றி ராஜி!

      1. கர்நாடக சங்கீதம் மட்டும் தானா .மற்ற பாடல்கள் சினிமா பாடல்கள் ,devotional songs எல்லாமே அனுப்பலாமா.
        எப்படி அனுப்புவது? மறு மொழி மூலமா? அல்லது வேறு மெயில் மூலமா?

        ராஜி

        1. உங்கள் பாடலை இ-மெயில் மூலமாக அனுப்பலாம். சற்று நேரத்தில் உங்களுக்கு Format அனுப்பப்படும்.
          நன்றி.
          உங்களுக்கும், ரஞ்சனி அம்மாவிற்கும்.

        2. என்னங்க இப்படி சொல்லிடீங்க, இதுவரை இங்கு வந்துள்ள திரை இசைப் பாடல்கள் தான் அதிகம். சென்றுப் பார்க்க. (இன்னும் கொஞ்ச நாட்களில், இந்த இசைப்பாவில், பன்மொழி பாடல்களும் வெளி வர உள்ளன ). உங்கள் ஈ-மெயில் இலக்கு வேண்டும், நீங்களும் Contributorராக எழுதலாம் !

  3. சந்தோஷமாக இருக்கும்போதும் ‘குறையொன்றுமில்லை’ என்று ஆனந்தமாகப் பாடலாம்.

    நன்றி சித்திரவீதிக்காரரே!

  4. அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.. பகிர்வுக்கு நன்றிம்மா.

  5. ரொம்ப அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது எம் எஸ் உருகி உருகி பாடியிருப்பார் அந்த மாதிரி இனி யாராலும் பாட முடியாது என்பது என் எண்ணம்

    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். அந்தப் பாடலும் திருமதி எம்.எஸ் ஸும் ‘made for each other!’

      நன்றி விஜயா!

  6. hi,

    வணக்கம். இன்றுதான் முதல் முறையாக இங்கு வந்தேன். (ரஞ்சனி மாம் அவர்களின் பதிவு மூலமாக). இசை பற்றி அதிகம் எதுவும் தெரியாது ஆனால் தமிழ் பாடல் கேட்கும்பொழுது அதன் வார்த்தைகளுக்காகவே ரசிப்பவள். ரசித்து மறந்து போன பல நல்ல பாடல்களை இங்கு மீண்டும் கேட்பதில் மிகவும் சந்தோசம்.

    நம் விருப்பமான பாடலை கூறினால் போதுமா இல்லை அதை பற்றி எழுதவும் வேண்டுமா.

    பாடல் என்றால், பாம்பே சிஸ்டேர்ஸ் பாடிய கல்யாண பாடல்கள் தொகுப்பு இங்கு தர முடியுமா. மிகவும் அதிகம் என்றால் மன்னிக்கவும்.

    Thanks & Regards

  7. குறை ஒன்றும் இல்லை பாடலுக்கு இசை அமைத்தவர் கடயநல்லூர் வெங்கடராமன் அவர்கள். செம்மங்குடி அவர்களின் சீடர். சென்னை வானொலியில் தம்பூரா கலைஞராக பணிபுரிந்தவர். ஸ்ரீமதி எம் எஸ் அவர்கள் பாடிய பல பாடல்களுக்கும் ( பாவயாமி கோபாலபாலம்- யமுனா கல்யாணி, சந்திரசேகர கிருபாநிதே- சங்கராபரணம் இன்னும் பல…) இசை தொகுப்புகளுக்கும் ( ராதாமாதவம், கம்பன் கவியமுதம்) இசை அமைத்தவர். வெளி உலகுக்கு தெரியமலேயே அடக்கமாக வாழ்ந்து மறைந்தவர். ஸ்ரீமதி எம் எஸ் அவர்கள் மிகவும் வற்புறுத்தியதால் மட்டுமே தன்னுடைய பெயரை, இசை அமைப்பளர் என்று இசை தட்டுகளில் வர சம்மதித்தார்.

  8. இந்த பாடல் தமிழறிஞர் மீ ப சோமசுந்தரம் எழுதி கல்கியில் ராஜாஜி பெயரில் வெளியிட பட்டது

பின்னூட்டமொன்றை இடுக