இசை வணக்கம்.

சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற இந்த பாடல் இளையராஜா அவர்கள் ஆரம்பகாலகட்டத்தில் இசையமைத்த பாடல். இணையத்தில் எங்கெங்கோ கேள்விப்பட்டு, கேட்டு ரசித்த பாடல். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், இப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்று இணையம் முழுக்க பரவிக் கிடக்கிறது. ஆனால் எழுதியவர் பஞ்சு.அருணாச்சலம் அவர்கள் தான். திரு என். சொக்கன் அவர்கள் இதை உறுதி செய்தார்.

பாடலின் Prelude-ஐக் கேட்ட மாத்திரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் வெற்றியடைந்த ஒரு பாடல் உங்கள் மனக்கண்ணில் வந்தால் நலமே! அப்பாடலும் இதே ராகத்தில் அமைந்ததே!

பாடலைப் பாடியிருப்பவர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள். இணையத்தில் ஆங்காங்கே பாடல் குறித்து சேகரித்த தகவல்கள் இவை.

Balamuralikrishnaபாடலைப் பாடிக் காட்டவா என்று இளையராஜா கேட்டு விட்டுப் பாட ஆரம்பிக்கிறார். சினிமாப் பாடல் என்றால் ஒரு மோகனம், ஒரு சிந்துபைரவி இல்லை கல்யாணி ராகத்தில் ஒரு பாடல் போட்டிருப்பார்.அதுவும் இளையராஜா அப்போது முழுதாய் பத்துப் படங்கள் கூட பண்ணியிருக்கவில்லை.இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்திருந்த பாலமுரளிகிருஷ்ணா மெட்டைக் கேட்டதும்  திகைத்துப் போய் ஒருகணம் வாயடைத்துப் போனார்.

’ஸகரிகமநிநிஸா சின்னக் கண்ணன் அழைக்கிறான்‘ என்று ராஜா போட்ட மெட்டு அதுவரை திரையில் யாருமே போட்டிராத ராகம். ரீதிகௌளை என்று பெயர்.

“சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடலில் சில சிறப்புகள் உண்டு. தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா. பிற்பாடு ஆயிரக்கணக்கான பாடல்களில் அவர் இதைச் செய்திருந்தாலும், இந்த உத்தியின் மூலம் நம் மனதின் ரசனைக்கு உற்சாகமூட்ட‌ அவர் முயன்ற ஆரம்ப கட்ட நாட்களில், வெளிவந்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவற்றை ஒன்றுடன் மற்றொன்று ஒத்து, பின் தொடர்ந்து வருமாறு வைப்பது தான் இளையராஜா வழக்கம். இந்தப் பாடலின் இரண்டு சரணங்களுக்கு முன்னரும் ஒரு புல்லாங்குழல் மற்றொரு புல்லாங்குழலையே தொடர்வது நமக்கு வித்தியாசமான உணர்வு தரும் – ஒரு பாம்பின் மேல் மற்றொரு பாம்பு ஊர்வதை பார்ப்பது போல….

PAR

ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் பல்லவிக்குள் நுழைகையில் கிடார் “கண்ணன் அழைக்கிறான்” என்ற வார்த்தைக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி அடங்கும்.

சின்னக் கண்ணன் அழைக்கிறான்” பாடல் தமிழில் வந்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. பாரம்பரிய இசைத்தனம் சிறிதுமில்லாத ஒரு மெல்லிசைப் பாடலை முதன்முதலில் திரையிசையில் பாட வைத்தது இளையராஜாதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

அழகான ராட்சசியே! (முதல்வன்) பாடல் மூலம் ஏ.ஆர் ரஹ்மானும், காதலித்துப் பார்! (தம்பி) பாடல் மூலம் வித்யாசாகரும், கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்) பாடல் மூலம் ஜேம்ஸ் வசந்தனும் இதே ராகத்தை பயன்படுத்தியுள்ளதாக அறிகிறோம். அரிதாகக் கையாளப்படும் இந்த ராகத்தில் வெளியாகும் பாடல்கள் எல்லாமே வெற்றிப்பாடல்களே! வேறு பாடல்கள் இருப்பின் குறிப்பிடலாம்.

 படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
பாடியவர்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: பஞ்சு.அருணாச்சலம்
ராகம்: ரீதி கெளளை

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

இளமையான கண்ணன் குரலில்!

புதுக்கருவிகளில் இப்போதும்…

இசைப்பா + 

பஞ்சு.அருணாச்சலம் அவர்கள் தயாரிப்பாளர், கதை-வசன கர்த்தா, பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். இளையராஜா அவர்களை திரையில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் இவரே!

இசைப்பா-வில் பாலமுரளி கிருஷ்ணா, பஞ்சு.அருணாச்சலம் இருவருக்கும் இதுவே முதல் பாடல்.

இசைப்பா-வுக்கு இன்றோடு வயது ஒன்று!

இதுவரை ஒத்துழைப்பு நல்கிய பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றி.

 பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் மனதார நன்றியை இங்கு பதிவு செய்ய விருப்பம். உங்கள் அனைவராலும் இம்முயற்சி தொடர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டு இன்னும் இன்னும் சிறப்பான பாடல்களை வெளிக்கொணர்வோம்.

நன்றி.

Advertisements

8 thoughts on “சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

 1. அதற்குள் ஒரு வயதா? ஒரு வயது குழந்தைக்கு (சின்ன கண்ணன்) என்ற பாடல் ரொம்பவும் சரியான தேர்வு!)
  இசைப்பா என்னும் இந்த ஒரு வயதுக் குழந்தை, பங்களிப்பவர்கள் எல்லோருடைய அன்பிலும், அரவணைப்பிலும் சிறந்து வளரட்டும்.
  ‘தலையை குனியும் தாமரையே’ பாடலும் ரீதிகௌளை தான்.

  மனமார்ந்த வாழ்த்துகள் தமிழ், ஓஜஸ், மற்ற பங்களிப்பாளர்கள் அனைவருக்கும்! (எனக்கும் சேர்த்து ஹி…ஹி…..!)

  1. நன்றி..

   தலை குனியும் தாமரையே பாடல் எந்த படத்தில் இடம் பெறுகிறது என்பதையும் குறிப்பிடவும்.

  2. ஒரு ஓடை நதியாகிறது திரைப்படப் பாடல்…. விரைவில் இசைப்பாவில் இணையும் என நம்புகிறேன்.

 2. ஒரு ஓடை நதியாகிறது என்ற படம். ரஜனிகாந்த், பூர்ணிமா ஜெயராம் நடித்த பாடல் காட்சி இது. SPB யுடன் ராஜேஸ்வரி என்ற கர்னாடக இசை பாடகி பாடிய பாடல் இது.

 3. ஒரு ஓடை நதியாகிறது என்கிற படம் ஸ்ரீதர் இயக்கி 1983 – ஆம் ஆண்டு வந்த படம். ரகுவரன் மற்றும் சுமலதா நடித்த படம். இளையராஜா இசை.

 4. தவறான நடிகர் நடிகை தகவலுக்கு மன்னிக்கவும். சரியான தகவல் கொடுத்த திரு பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s