புல்லாய் பிறவி தர வேணும்…..

தமிழகத்தின் மிகப் பெரும் பாக்கியம் – கம்ப ராமாயணம் என்ற ராம காதை. கண்ணனைப் பாட, வில்லிபுத்தூரார் பாரதம் எழுதினாலும், அது ஏனோ சோபித்து விளங்கவில்லை. தென்னகத்தில் கண்ணன், கர்நாடக இசை வழி வலம் வர திருவுள்ளம் கொண்டான் போலும். ஊத்துக்காடில் பிறந்த வேங்கட சுப்பையரை ஆட்கொண்டான். அவரது கீர்த்தனங்கள் ஒலிக்காத மேடைகளே இல்லை என்பது சத்தியம். அலைப்பாயுதே கண்ணா… பாடல்களைக் கேட்காத செவிகளே உலகில் இல்லை என சொல்லலாம்.

கண்ணனைப் பாட இவரைப் போல் எவருள்ளார் ?

கொஞ்சல், கெஞ்சல், வேண்டுதல், ரசித்தல், அவதானிப்புகள் என கண்ணனை இவர் அணுகாத பரிமாணங்களே இல்லை என நிச்சயம் சொல்லலாம். பாரதிக்கு முன்பே கண்ணனை எளிய தமிழில், எழில் மிகு நாயகனாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பாரதியே இவரது கீர்த்தனைகளை முழுமையாக உள்வாங்கி கொண்டு, கண்ணன் கவிகள் பாடி இருப்பான் என்று நான் எண்ணமிடுவது உண்டு.

அவரின் பிரபலமான பாடல்கள் பல இருப்பினும், மேடைகளில் அதிகம் இடம்பெறாத பாடலை இங்கே முதலில் அறிமுகம் செய்கிறோம். புதுக்கவிதை வடிவில் அவரது ஆசையை அடுக்கிறார். தமிழ் மொழிக்கு உரிய அழகான அடுக்குகளில், இவரது பாடல்கள் அமையும். கேட்டும் / படித்தும் பார்த்து ரசிக்க கூடிய பாடலிது. செஞ்சுருட்டி ராகம், ஆதி தாளம். உருகி உருகி, மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் சுதா ரகுநாதன். தமிழ் சொற்கள் அனைத்தும் சரியான, உச்சரிப்புடன் காதில் ஒலிக்கின்றன. வேகம் குறையாமல், பொங்கும் உற்சாகம் அவர் குரலில் இனிக்கிறது.

Sri Krishna with flute 9

பாடல்: புல்லாய் பிறவி தர வேணும்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பாடியவர்: சுதா ரகுநாதன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
இசை: தெரியவில்லை

பல்லவி :

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா

புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….

அனுபல்லவி :

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென

சரணம் :

ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென  மலரடி பெய்துன்னை

தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே

சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !

தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்….

இந்த பாடலை, இசைப்பாவின் மூத்த பதிவர்: ரஞ்சனி அவர்களுக்கு Dedicate செய்கிறோம். சுதா ரகுனாந்தனின் தீவிரமான ரசிகை அவர்கள்.

மீண்டும் ஒரு இனிய கீதத்துடன் சீக்கிரம் இணைவோம்.

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்

நீண்டதொரு பயணம், கேட்டுப் பார்க்க வேண்டிய புதிய பாடல்களை சேமித்து கொண்டேன். படம் படமாக, வரிசையாக இசை ஓ(ஆ)டியது. குறிப்பிட்ட பாடல் எந்த படம், யார் பாடியது என்று எல்லாம் சிந்திப்பதற்குள், கேட்டவுடன் காதல் வந்தது. இசையும் வரிகளும் சேர்ந்த ரம்யம்.

இசைப்பாவில் இன்னுமொரு அறிமுகம், இசையமைப்பாளர் ஜிப்ரான், வாகை சூட வா வில் தொடங்கிய அவரது பயணத்தின் புதிய வெளியீடு. ’சரசர சாரக் காத்து’.. ‘செங்கல் சூளக்காரா’வை விட்டு விட்டு அவருக்கு ஒரு புதிய பாடல் உங்களுக்காக

உன்னை காணாமல் போன்ற வசீகரிக்கும் கண்ணன் பாடல். சாருலதா மணி (ஜில்லாக்ஸ், ஜில்லாக்ஸ் பாடிய அதே குரல்) மற்றும் கணேஷ் அவர்களின் கர்நாடிக் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் / பரிச்சியம். மேல் ஸ்தாயியில் விஜய் பிரகாஷ்சின் குரல் மிகவும் பொருத்தம். சாதனா சர்கம் குரலில் உச்சரிப்பு பொருத்தமாக இல்லை (என்று எனக்கு தோன்றுகிறது). அதையும் ஏன் சருலதா அவர்களே பாடவில்லை ? படக்காட்சியில் வித்தியாசம் இருக்க கூடும்

Kannukul potthi vaipen

வரிகளை கேட்டமாத்திரத்தில், மனத்தினுக்குள் சின்னக் கண்ணனை படம் பிடிக்க முடிகிறது, அவன் ஓடுவதும், அவன் டூ காட்டுவதும்… வாலிப கண்ணனுடன் கை கோர்த்து நடக்கும் ஆசை…. ஆஹா பாடலின் ஸ்பரிச பாதங்கள், நெஞ்சில் படும் தருணங்கள்.

ஜலதரங்கத்தின் தொடக்க இசை மிகவும் நேர்த்தி. அதே கோர்வையுடன் கடமும், வயலினும், பின்னணியில் வரும் மெல்லிய சங்கதிகளும் பரவசம். இசைக்கு புதிய நம்பிக்கை தருகிறார் ஜிப்ரான். முகாரி ராகத்தில் வந்துள்ள இனிய மெலோடி பாடல். எதோ ஒரு வகை இனிய மகிழ்ச்சி மயக்கம் தரும் பாடல் (#InLoops)

அடங்காத வியப்பு தருவது வரிகள் தான்! இப்படி ஒரு உன்னிப்பான, பல வித்தியாசங்கள் கொண்ட இசைக்கு எப்படி இவ்வளவு அழகான வரிகள் ?

thirumanam ennum nikkha nazriya

பாடலாசிரியர் : பார்வதி
பாடல் : கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
படம் : திருமணம் என்னும் நிக்காஹ் 
இசையமைப்பு : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா !
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா !
விஷம கண்ணனே வாடா வா !

கண்ணுக்குள்….

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற,
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர.
மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேன,
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாய்.
செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாய்.
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன் !

கண்ணுக்குள்…

உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்,
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்.

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்,
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்,
முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்,
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள்….

பாடலின் வரிகளுடன் வந்துள்ள இந்த காணொளி இன்னுமொரு நேர்த்தி, வார்த்தைகளின் Transition மற்றும் Font Face ஈர்க்கும் படி, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் இன்னும்
இனிய பாடல்கள்
இங்க வரும் !

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

இசை வணக்கம்,
இன்று மகாகவி பாரதியார்  பிறந்தநாள். அந்த மகாகவிஞனுக்கு இது இசைப்பாவின் அஞ்சலி. அத்தோடு இன்று 11-12-13. நூறாண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ தினம். எனவே இசைப்பாவின் பரவசத்திற்கு தயாராக இருங்கள்.
மகாகவி

சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், “நீ அடுத்த பிறவியில் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்… பிறந்திடுவாய்” என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது. மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்.

*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.

* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.

*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.

*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய்.

*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.

* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.

*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.

*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.

*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.

படம்: பாரதி
பாடலாசிரியர்: மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
************************************

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

(நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..)

 

இசைப்பா +
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      – பாரதி.

நன்றி:
தினமணி சிறுவர்மணி
நாற்சந்தி

இசைப்பாவின் இதர பாரதியார் பாடல்களுக்கு.

நன்றி

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

இசை தீயின் வணக்கங்கள். இன்று ஒரு பாரதி பா. இசைபாவில் இந்த சிறு பாடலுடன் ஒரு மிக பெரும் கவிஞனின் அறிமுகம். புத்தாண்டுக்காக அவர் எழுதிய வாழ்த்து பா ! இந்த பாடலில் உள்ள கருத்துகள் வேதத்தில் இருந்து வந்தவை. எஸ்.எஸ் அம்மா குரலுக்கு எந்த வித முன் அறிமுகம் தேவை இல்லை !

மஹாகவி பாரதியார் பாடல் 

பாடியர் : எம்.எஸ்.சுபலட்சுமி. 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

{இப்பாடலின் தலைப்பு 1937 ஆம் வருடப் பதிப்பில் ‘புது வருஷம்’ என உள்ளது.}

நன்றி : தமிழ் இணைய பல்கலைகழகம் (tamilvul.org)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

மூதறிஞர் திரு இராஜகோபாலாச்சாரியாரின் பாடல் வரிகள் இவை. திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா. சபையில் முதல் முதல் பாடபெற்ற தமிழ் பாடல் இது.

எல்லோருக்கும் தெரிந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். மனதை உருக்கும் பாடல். கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்.

எத்தனையோ பாடகர்கள் பாடியிருந்தாலும் எம்.எஸ். குரலில் கேட்கும்போது உண்டாகும் மன உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் எங்கள் அம்மா வாங்கித்தந்த புத்தகங்கள் வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும்தான். எளிய தமிழில் ராஜாஜி அவர்களின் கதை சொல்லும் பாணி மிகவும் நன்றாக இருக்கும். எத்தனை முறை படித்திருப்போம் என்ற கணக்கே இல்லை.

அதே அவரது பாணியிலேயே எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல் இது.

இறைவனிடம் எதுவுமே கேட்கக்கூடாது; அவருக்கு நமக்கு என்ன தேவை என்று தெரியும். நமக்குப் பிடித்ததைவிட, நமக்கு தேவையானவற்றை அவரே தருவார் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பாடல் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இராக மாலிகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்

இசை ரத்தினம் எம்.எஸ் அம்மா
பாடலாசிரியர் : சக்கரவர்த்தி ராஜாஜி

பாடியவர் : எம்.எஸ்.சுபலட்சுமி

இசை அமைத்தவர் : தெரியவில்லை

ராகம்: சிவரஞ்சனி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்-4
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா 

ராஜாஜி

இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.

நான்கு வருடங்களுக்கு முன் பொங்கல் சமயத்தில் என் மகள், என் பேரன்கள்  மூவருமே அம்மை நோயால் பாதிக்கப் பட்டனர். நான் உதவி செய்ய அங்கு போயிருந்தேன். கடைசி பேரனுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு நாள் என் கைபேசியில் இந்தப் பாடலை போட்டேன். ஒருமுறை கேட்டவன் திரும்ப அதே பாட்டைப் போடு பாட்டி என்றான். திரும்ப, திரும்ப, திரும்ப என்று கேட்டுக் கொண்டே குழந்தை தூங்கி விட்டான். எழுந்திருந்தவன், அந்த பாட்டை போடு என்றான். உடல் வேதனையால் உறக்கம் வராமல் தவித்த  அவனுக்கு இந்தப் பாடல் மனதுக்கு ஒரு வித அமைதியைக் கொடுத்திருக்க வேண்டும். எப்போதும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பான். அப்படியே தூங்கியும் விடுவான்.

என் மாப்பிள்ளைக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது. என்னை இந்தப் பாடலின் அர்த்தத்தை கன்னட மொழியில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். என்னால் முடிந்த வரை எழுதிக் கொடுத்தேன். மொழிபெயர்ப்பு என்பது மிகவும் கடினம் அல்லவா? அர்த்தம் தெரிந்து உருகியே போய்விட்டார். அவருக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்தப் பாடலையும், அதன் அர்த்தத்தையும் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். கேட்டவர்கள் எல்லோருமே திருமதி எம்.எஸ். ஸின் குரலில் மயங்கினர்.

இசைப்பா குழுவிலிருந்து :
 • இது போலவே ஒரு திருவாசகம் உள்ளது :
  வேண்டதக்கது அறிவோய் நீ !
  வேண்டும் முழுதும் தருவோய்  நீ !
  வேண்டியே என்னை நீ ஆட் கொண்டாய்
  ………………………………………
  ………………………………………
  வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
  அதுவும் உந்தன் விருப்பமன்றே !

  (பல நாட்களுக்கு முன் படித்தது, தவறு இருந்தால் பொருத்தருள்க

 • ராஜாஜி மற்றும் எம்.எஸ் அவர்களை தமிழ் எழுதவும், தமிழ்ப் பாடவும் வைத்த எம் ஆசான் கல்கி அவர்களை வணங்குகிறேன் !
 • ஐநா சபையில் எம்.எஸ் அம்மா பாட வேண்டிய பாடல்களை தேர்ந்தெடுத்தவர் யார் தெரியுமா ? காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதிகள்.
 • ராஜாஜி பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவரை மூதறிஞர் என்றே அழைப்பர். அரசியல் சாணக்கியன் மற்றும் ஆன்மீக ஞானி. அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகள் மற்றும் வியாசர் விருந்து இதற்கு சான்று.  கல்கி தந்த ஊக்கத்தில், இவைகளை கல்கி இதழில் தொடராக எழுதினார். பின்னர் தமிழ் மற்றும் (அவரே எழுதிய) ஆங்கில புத்தகமாக வெளிவந்தது.
 • மங்களம், அடக்கம், இனிமை, தெளிவு, கம்பீரம் போன்ற பல சொற்களின் மறு உருவம் எம்.எஸ்.அம்மா. உண்மையிலேயே ஒரு பாரத ‘இசை’ ரத்தினம். இந்த பாடலின் நான்காவது சரணத்தை ‘கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி…‘ பாடும் பொழுது எம்.எஸ் அம்மாவின் முக பாவத்தை கவினிக்கவும். கண்களை மூடி, மனமுருகி, அவன் திரு காட்சிக்காக கைகளை ஏந்துப் பாடுவார். அவர் உடன் இருந்த சிலர் சொல்லிக் கேட்டு உள்ளேன் : இந்த பாடலின், இந்த சரணத்தை பாடும் பொழுது, எம்.எஸ் அம்மா பல ஆன்மீக அனுபவங்களை பெற்றதாகவும், கண்ணுக்குள்ளே, கண்ணை கண்டதாகவும் சொல்கின்றனர். இசையால் இன்பம் மட்டுமல்ல, இறைவனை காணலாம் !

ரஞ்சனி மாமி :

உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டுப் போனோம். அவர் எங்களைத் தொடர்பு கொண்டபோது. நானும் பங்களிக்கலாமா? என்றபோது எங்களுக்கு வேறேதும் தோன்றவில்லை. சரி என்று சொன்னோம். உடனே களத்தில் இறங்கிவிட்டார். கொஞ்சம் தாமதமாக பதிவை வெளியிட வேண்டியதாய்ப் போய் விட்டது. மிகுந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் அவருக்கு.

அதிகம் அவர் குறித்து சொன்னால், ‘எங்களூரிலே’ நன்றாக குளிர்கிறது. ஐஸ் வேண்டாம் என்கிறார்.

அவரின் அனுபவங்களுக்கு முன் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பது மிகவும் அபூர்வமானது. நன்றிங்மா!

அவரின் தளங்கள் மட்டும் இங்கே….அவரின் வார்த்தைகள் அங்கே!

http://ranjaninarayanan.wordpress.com/

http://pullikkolam.wordpress.com

உங்கள் கருத்துகள், இசை பாடல்ப் விருப்பங்கள் அனைத்தையும் எங்களுக்கு சொல்லுங்கள், கமெண்ட்-டாக. நீங்கள் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இயற்கை / இறை சூழ, இசை வாழ்க ! இன்பம் பெருக !

மாலைப் பொழுதினிலே…

இணைய வழி இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இசையுடன் நித்தம், நித்தம் பழகி, மகிழ்ந்து வந்தும், இங்கு பாக்களை வெளியிட தாமதம் ஏற்பட காரணம் ஒன்று வந்து விட்டது. அதை பற்றி பதிவுன் இறுதியில் சொல்கிறோம். முதல் வாசகர் விருப்பதை இந்த முறை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் முதல் வாசகர், திருமதி.ரஞ்சனி அவர்கள் ‘மாலைப் பொழுதினிலே’ பாடலை கேட்டு இருந்தார். அவர் தளம் : ranjaninarayanan.wordpress.com இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ளது, வாழ்த்துகள் மாமி. அதற்காக எங்கள் பரிசு இந்த பதிவு. இது நிற்க. பாக்கு வருவோம் : மிகுவும் அழகியப் பாடல், அதே சமையத்தில் பழையப் பாடல். ஆசான் கல்கி அவர்களின் அற்புத வரிகள். வள்ளி தன் காதலானான முருகனை எங்கும் காண்கிறாள். கனவில் கூடத் தான். இது தான் சூழ்நிலை. கல்கி அவர்கள் முருகனையும், அவர் அழகையும், வள்ளியின் மன நிலையையும் ஒன்று சேர முருகு(அழகு) தமிழில் கவிதையாக வடித்துள்ளார்.

இதே போல தான் ராதை, கண்ணை நொடிக்கு நொடி, நினைத்து வாடி இருப்பாள். பெண்ணின் மனதை புரிந்து கொள்வது மிக கடினம், என்று, அன்று முதல் இன்று வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். ஆனால் கல்கி மட்டும், வள்ளியின் மனத்தில் இருந்து படம் பிடித்தார் போல பாடல் எழுதியுள்ளார். அதுவும் வள்ளி வெட்கத்தால் நானும் இடங்கள், அற்புதம்! மர தமிழ்ச்சியின் உணர்வுகள் ! எழுத்துக்கு ஒலி வடிவம் கொடுத்தவர், இசையின் முடிசூடா ராணி எம்.எஸ் அவர்கள். குரலில் என்ன ஒரு பாவம், சொன்னால் புரியாது, பாடலை இணைத்துள்ளோம், செவி மடுத்து மகிழுங்கள்.

கல்கி அவர்களின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. அவர் எழுதிய புதினங்கள் மற்றும் கதைகள் மட்டுமே பிரபலமாகியுள்ளது. இது போல பல பாடல்கள் எழுதி உள்ளார். தமிழ் மீதும் தமிழ் கடவுள் முருகன் மீதும் அவருக்கு அபார பக்தி என்று சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மேலும் எங்களுக்கு தெரிந்த பாடல்கள் சில உள்ளன. அவைகளும் இசைப்பாவை அலங்கரிக்கும். இந்தப் பாடல், திரைபடத்தில் வந்து இருக்கும், என்று தோன்றுகிறது, ஆனால் அதை பற்றி விபரம் எதுவம் தெரியவில்லை. அதே போல இசை அமைத்தவர் பாற்றியும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

வள்ளி முருகன் !
வள்ளி முருகன் !

பா – 04

பாடல் : மாலைப் பொழுதினிலே
ஆசிரியர் : கல்கி – ரா.கிருஷ்ணமூர்த்தி
பாடியவர் : எம்.எஸ். சுபலட்சுமி
இசையமைப்பு : (தெரியவில்லை)

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்
மலர்ப் பொழிலினிலே
கோலக் கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே

மாலைக் குலவு மார்பன் மறுவில்
மாமதி போல் முகத்தான் – வேலொன்று
கையிலேந்தி என்னையே விழுங்குவான் போல் விழித்தான்

நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம் நிமிர்ந்து பொங்கிடவும்
நாலு புறம் நோக்கி நாணினான் யாரிங்கு வந்ததென்றேன்
ஆலிழை மேல் துயின்று புவனம் அனைத்துமே
கணிக்கும் மாலின் மருமகன்யான்
என் நெஞ்சே வேலன் முருகன் என்பான்

சந்திரன் வெட்கமுறும் உன் முகத்தில் சஞ்சலம் தோன்றுவதேன்
தொந்தம் இல்லாதவலோ புதிதாய் தொடர்ந்திடும் உறவோ
முந்தை பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்
எந்தன் உயிரல்லவோ கண்மணி ஏனிந்த ஜாலம் என்றான்

உள்ளம் உருகிடினும் உவகை ஊற்று பெருகிடினும்
கள்ளத்தனமாக கண்களில் கனல் எழ விழித்தேன்
புள்ளி மயில் வீரன் மோகன புன்னகைதான் புரிந்தான்
துள்ளி அருகில் வந்தான் என் கரம் மெல்ல தொடவும் வந்தான்

பெண் மதி பேதமையால் அவன் கை பற்றிடுமுன்
பெயர்ந்தேன். கண் விழித்தே எழுந்தேன் துயர கடலில் விழுந்தேன்
வண்ண மயில் ஏறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்
கண்கள் உறங்காதோ அக்குறை கனவை கண்டிடேனோ

மாலைப் பொழுதினிலே ஒரு நாள் மலர்ப் பொழிலினிலே!

செவிக்கு உணவு :

[பாடலை பதிவிறக்க ‘Download’ பட்டனை சொடுக்கவும்.]

பல நாள் கனவு தான் இந்த இசைப்பா தளம். எந்த வித முன் ஏற்படுமின்றி தொடங்கி விட்டோம். வாசகர் விருப்பங்களும் வந்து விட்டது. இந்த பாடலின் ஒலி வடிவும் மட்டுமே எங்களிடம் இருந்தது. எத்தனை முயற்சி செய்தும், வரிகள் அனைத்தையும் சரியாக எழுத முடியவில்லை. எழுதி முடித்தாலும், ஒரு வித திருப்தி இல்லை. இணையத்தில் கொஞ்சம் தேடி, வரிகளை சரிப்பார்த்து கொண்டோம். இந்த முயற்சிக்கு இடையில், வேறு பல பாடல்கிளின் வரிகளை எழுதி விட்டோம். ஆனால் தமிழ் அவர்கள், வாசகர் விருப்பதை பூர்த்தி செய்து விட்டு தான், அடுத்த பாடல் வர வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். இதுவே தமாதத்துகான மூலக் காரணம்.

மேலும் வாசகர் விருப்பங்கள் எதிர்பாரக்கப்படுகின்றன. உங்கள் மேலான கருத்துகளையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இசை என்பது வாழ்க்கை என்றான பின், துக்கம் எல்லாம் தூர தான் போக வேணும். வாழ்க தமிழ் ! வாழ்க இசை !

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில்…

தமிழ் என்னும் பதத்துக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அதில் அழகு , முருகன் இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்த பொருள். தமிழ் கடவுள் முருகப் பெருமான். இவர் தமிழ் மக்களின் மனத்தை கவர்ந்தவர், காப்பவர் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இசை என்பது மொழியுடன் சேர்ந்த வளர்கிறது! முதல் பாடலாக கல்கி ரா.கிருஷ்ணமுர்த்தி எழுதிய முருகன் கவி உங்களுக்கு, குறிப்பாக உங்கள் உள்ளத்துக்கும் செவிக்கும் தூய தமிழ் இசை விருந்தி .

வருணனை:

முருகனைச் சிறப்பித்து கவிஞர் எழுதியிருக்கிறார். எளிய வரிகள்தாம். ஆனாலும் பாடலின் ஒலிநயம் பாடுதற்கேற்ற தன்மையைத் தந்துள்ளது.

பூங்குயில் – மாமயில்

பொன் முகம் – இன்னமுது – மின்னல்

னிமலர் – வானில் – தேனிசை – தனிமை

வருவான் – மறவான்

பேரருளாளன் – பெருமிதத்தால்.

முதற்பாடலாக எந்த பாடல் வருவது என்பது பற்றி பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு இந்த பாடலைக் கொண்டு வந்துள்ளோம். உங்கள்  கருத்துகள் தேவை.

பா – 1 

பாடலாசிரியர் : கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
பாடியவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
இசையமைப்பு : (தெரியவில்லை)
ராகம் : காபி

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்.

பொன்முகம் அதனில் புன்னகை பொங்க
இன்னமுதென்ன இன்மொழி பகர்ந்தொரு
மின்னலைப் போலே மறைந்தான்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன்
தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன்
தனிமையில் இனிமை கண்டேன்

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்….

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்
வள்ளி மணாளன் என்னை மறவான்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்
பேரருளாளன் எனக்கருள்வான் எனும்
பெருமிதத்தால் மெய்மறந்தேன்.

அடுத்த அடுத்த பாடல்கள் விரைவில் வெளி வரும்! உங்கள் விருப்பங்களையும் கருத்துகளையும் கமெண்ட் செய்யுங்க. தளம் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளது!!!