நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் – பாரதி

முதலில் இசைப்பா ஒரு லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன்.

செப்டம்பர் என்றால் பாரதியார், விவேகானந்தர் என்று பலரின் நினைவு வரும்.

இசைப்பாவில் இந்த வருட செப்டம்பர் மாதம் பாரதியுடன் இணைந்து உலா வரப்போவது எம்.எஸ்.எஸ். பாட்டுக்கென்று பிறந்தவர் பாரதி என்றால் பாடுவதற்கென்று பிறந்தவர் எம்எஸ். பாரதியின் பாடல்கள் எம்எஸ் அவர்களின் தேன் குரலில்  புது உற்சாகம் புது அர்த்தம் கொடுப்பவை அல்லவா?

bharathi artஎம்எஸ் அவர்கள் பதினோரு மொழிகளில் பாடிய பாடல்களில் தமிழ் பாடலாக இடம் பெறுவது தான் பாரதியின் இந்த பாடல் – ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்’.

பாடுபவர்களுக்கு எப்போதுமே மொழி ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. தங்களது ‘பாவம்’ மூலம் எந்தப் பாட்டையும் ரசிக்க வைத்துவிடுவார்கள். இந்தியா போன்று பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில் பிறந்த எம்எஸ் எப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக, தமிழ் பாட்டுக்களைப் பாடுபவராக மட்டும் இருக்க முடியும்? அவரது இசைக்கு இமயம் முதல் குமரி வரை ரசிகர்கள் இருக்கிறார்களே. உலகம் முழுக்க அவரது இசைக்கு மயங்குமே.

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதிக்கும் எம்எஸ்எஸ் – க்கும் சிந்தனை செயல் இவற்றில் இருக்கும் ஒற்றுமை இந்தப் பாடலில் தெரிவதுதான் அந்த வியப்பான விஷயம்.

இந்திய பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத ஒரு வெகுமதியாக உலக அமைதிக்காக, நல்லிணக்கத்திற்காக எம்எஸ் ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார். இந்தக் கருத்தையே பாரதியும் இந்தப் பாடலில் ‘வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்’ என்று கூறுகிறார்.

MS amma

அதுமட்டுமல்ல – கவிதை எழுதியவரின் உள்ளக்கிடக்கையும், பாடியவரின் உள்ளக்கிடக்கையும் ஒன்றாக இருக்கிறது பாருங்கள்: ‘காணி நிலம் வேண்டும்’ என்று கேட்டார் பாரதி. பராசக்தி மறுத்துவிட்டாள். ஆனால் இந்தப் பாட்டில் பாரதி கேட்டதை பாரதிக்கு மட்டுமில்லாமல், எம்எஸ்எஸ்-க்கும் சேர்த்து வாரி வழங்கிவிட்டாள் சக்தி! என்ன அற்புதம் இது!

தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.

இந்த வரிகளைப் பாருங்கள் :

வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொரு ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன் .

 ‘எள்ளத்தனைப் பொழுதும்
பயனின்றி இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்….’ 

இருவருக்கும் பொழிந்தே விட்டாள்சக்தி. பாட்டை அனுபவிப்போம், வாருங்கள்

பாடலாசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி
இசையமைப்பு : (தெரியவில்லை)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்

நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி .
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .

எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!

 

இன்னுமொரு இனிய தமிழ் பாவுடன் விரைவில் இணைவோம்.

பிரேமையில் யாவும் மறந்தேனே…

இசைப்பாவில் பாடல்கள் அடிக்கடி வெளிவராவிட்டாலும், பார்வைகள் என்னவோ பிரமிக்க வைக்கிறது. நீங்கள் தரும் உற்சாகத்தின் மிகுதியால் தான் , ஆர்வமுடன் பாடல்கள் வெளியிட முடிகிறது. சினிமா பாடல் தான், ஆனாலும் சுதந்திர காலத்து பாடல். இசை எங்கும் இனிக்கட்டும்.

எம் எஸ் அம்மா குரலில் ரொமான்ஸ்…… கேக்கவே இனிக்குதுல. 1945ல் வெளிவந்த சகுந்தலை படப்பாடல் உங்கள் செவிக்கு. எம் எஸ் அம்மாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராயல் டாக்கிஸ் தயாரித்த படம். ஹீரோ ஜி.என்.பி அவர்கள். படத்தில் மொத்தம் 24 பாடல்கள். கிராமோ-போன் கம்பனி வெளியிட்ட சில பாடல் மட்டுமே நமக்கு மிஞ்சி உள்ளது.

பாடல்கள் அனைத்தும் பாபநாசம் சிவம் எழுதியது. மனதை ஈர்க்கும், கொஞ்சும் தமிழ், அதே சமயம் மனதை வருடும் வரிகள். படாடோபம் இல்லாத, பாமரர்களுக்கும் எளிதில் புரியும் தமிழ். இசையோ மெல்லிய மேன்மை. வரிகளை மெருகூட்டும் ராக தாளத்தில். குரல் ஸ்பஷ்டமாக கேட்கும் அளவுக்கு பிரமாதமான ரெகார்டிங். எம்.எஸ் அம்மாவின் குரல் பத்தி சொல்லியே ஆக வேண்டும் : தான் பாடும் பாடலின் கருவாக விளங்குவது அவர்களுக்கு அனிச்சையான விஷயம். எந்த ஒரு உணர்வானாலும், அவர்கள் கீதத்தில், மேதமை பெருகிறது. இன்றும் என்றும் இன்பம் தரும் இறைக் குயில் எம்.எஸ் !

இசைப்பாவில் ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவர்களின் அறிமுக பாடல் இது. அவரது தனிப்பாடல்களில் அவரை பற்றி மேலும் பேசுவோம்.

பாடல் : பிரேமையில் யாவும் மறந்தேனே
பாடியவர்கள் : எம் எஸ் சுப்புலட்சுமி, ஜி என் பாலசுப்பிரமணியன்
படம் : சகுந்தலை (1945)
இசையமைப்பு : எஸ் வி வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பிரேமையில் யாவும் மறந்தேனே….
பிரேமையில் யாவும் மறந்தேனே….
பிரேமையில்….

ஜீவனம் உனதன்பே
ஜீவனம் உனதன்பே – என் அன்பே
வானமுதும் விரும்பேனே
பிரேமையில் யாவும் மறந்தோமே…

பிரேமையில்…

பிரேமை வெண்ணிலா ஜோதி வீச…
…என் உள்ளம் பரவசமாக
பிரேமை வெண்ணிலா ஜோதி வீச…
…என் உள்ளம் பரவசமாக

என்னை மறந்தேன் மதனமோகனா….
என்னை மறந்தேன் மதனமோகனா…!

நான் உன்னை மறவேன் ! 
உம்மை நான் பிரியேன் !

நான் உன்னை மறவேன்
உம்மை நான் பிரியேன்

வானோர்க்கும் அரிதாம்
குறைவில்லாத பிரேமையில்
யாவும் மறந்தோமே

பிரேமையில் யாவும் மறந்தோமே !

சிறிய பாடலானாலும், சிலிர்க்க வைக்கும் ! மீண்டும் ஒரு இனிய பாடலில் இணைவோம். உங்கள் கருத்துகள், விருப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

இசை தீயின் வணக்கங்கள். இன்று ஒரு பாரதி பா. இசைபாவில் இந்த சிறு பாடலுடன் ஒரு மிக பெரும் கவிஞனின் அறிமுகம். புத்தாண்டுக்காக அவர் எழுதிய வாழ்த்து பா ! இந்த பாடலில் உள்ள கருத்துகள் வேதத்தில் இருந்து வந்தவை. எஸ்.எஸ் அம்மா குரலுக்கு எந்த வித முன் அறிமுகம் தேவை இல்லை !

மஹாகவி பாரதியார் பாடல் 

பாடியர் : எம்.எஸ்.சுபலட்சுமி. 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

{இப்பாடலின் தலைப்பு 1937 ஆம் வருடப் பதிப்பில் ‘புது வருஷம்’ என உள்ளது.}

நன்றி : தமிழ் இணைய பல்கலைகழகம் (tamilvul.org)

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

மூதறிஞர் திரு இராஜகோபாலாச்சாரியாரின் பாடல் வரிகள் இவை. திருமதி எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களால் ஐ.நா. சபையில் முதல் முதல் பாடபெற்ற தமிழ் பாடல் இது.

எல்லோருக்கும் தெரிந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். மனதை உருக்கும் பாடல். கண்களில் நீரை வரவழைக்கும் பாடல்.

எத்தனையோ பாடகர்கள் பாடியிருந்தாலும் எம்.எஸ். குரலில் கேட்கும்போது உண்டாகும் மன உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகள் கிடையாது.

எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன் எங்கள் அம்மா வாங்கித்தந்த புத்தகங்கள் வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும்தான். எளிய தமிழில் ராஜாஜி அவர்களின் கதை சொல்லும் பாணி மிகவும் நன்றாக இருக்கும். எத்தனை முறை படித்திருப்போம் என்ற கணக்கே இல்லை.

அதே அவரது பாணியிலேயே எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல் இது.

இறைவனிடம் எதுவுமே கேட்கக்கூடாது; அவருக்கு நமக்கு என்ன தேவை என்று தெரியும். நமக்குப் பிடித்ததைவிட, நமக்கு தேவையானவற்றை அவரே தருவார் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

இந்தப் பாடல் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இராக மாலிகையில் அமைந்துள்ளது இந்தப் பாடல்

இசை ரத்தினம் எம்.எஸ் அம்மா
பாடலாசிரியர் : சக்கரவர்த்தி ராஜாஜி

பாடியவர் : எம்.எஸ்.சுபலட்சுமி

இசை அமைத்தவர் : தெரியவில்லை

ராகம்: சிவரஞ்சனி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்-4
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா 

ராஜாஜி

இந்தப் பாடலை கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.

நான்கு வருடங்களுக்கு முன் பொங்கல் சமயத்தில் என் மகள், என் பேரன்கள்  மூவருமே அம்மை நோயால் பாதிக்கப் பட்டனர். நான் உதவி செய்ய அங்கு போயிருந்தேன். கடைசி பேரனுக்கு மிகவும் அதிகமாக இருந்தது. ஒரு நாள் என் கைபேசியில் இந்தப் பாடலை போட்டேன். ஒருமுறை கேட்டவன் திரும்ப அதே பாட்டைப் போடு பாட்டி என்றான். திரும்ப, திரும்ப, திரும்ப என்று கேட்டுக் கொண்டே குழந்தை தூங்கி விட்டான். எழுந்திருந்தவன், அந்த பாட்டை போடு என்றான். உடல் வேதனையால் உறக்கம் வராமல் தவித்த  அவனுக்கு இந்தப் பாடல் மனதுக்கு ஒரு வித அமைதியைக் கொடுத்திருக்க வேண்டும். எப்போதும் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருப்பான். அப்படியே தூங்கியும் விடுவான்.

என் மாப்பிள்ளைக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்துவிட்டது. என்னை இந்தப் பாடலின் அர்த்தத்தை கன்னட மொழியில் எழுதிக் கொடுக்கச் சொன்னார். என்னால் முடிந்த வரை எழுதிக் கொடுத்தேன். மொழிபெயர்ப்பு என்பது மிகவும் கடினம் அல்லவா? அர்த்தம் தெரிந்து உருகியே போய்விட்டார். அவருக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்தப் பாடலையும், அதன் அர்த்தத்தையும் எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார். கேட்டவர்கள் எல்லோருமே திருமதி எம்.எஸ். ஸின் குரலில் மயங்கினர்.

இசைப்பா குழுவிலிருந்து :
 • இது போலவே ஒரு திருவாசகம் உள்ளது :
  வேண்டதக்கது அறிவோய் நீ !
  வேண்டும் முழுதும் தருவோய்  நீ !
  வேண்டியே என்னை நீ ஆட் கொண்டாய்
  ………………………………………
  ………………………………………
  வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில்
  அதுவும் உந்தன் விருப்பமன்றே !

  (பல நாட்களுக்கு முன் படித்தது, தவறு இருந்தால் பொருத்தருள்க

 • ராஜாஜி மற்றும் எம்.எஸ் அவர்களை தமிழ் எழுதவும், தமிழ்ப் பாடவும் வைத்த எம் ஆசான் கல்கி அவர்களை வணங்குகிறேன் !
 • ஐநா சபையில் எம்.எஸ் அம்மா பாட வேண்டிய பாடல்களை தேர்ந்தெடுத்தவர் யார் தெரியுமா ? காஞ்சி மஹா பெரியவர் சந்திரசேகர சரஸ்வதிகள்.
 • ராஜாஜி பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவரை மூதறிஞர் என்றே அழைப்பர். அரசியல் சாணக்கியன் மற்றும் ஆன்மீக ஞானி. அவர் எழுதிய சக்ரவர்த்தி திருமகள் மற்றும் வியாசர் விருந்து இதற்கு சான்று.  கல்கி தந்த ஊக்கத்தில், இவைகளை கல்கி இதழில் தொடராக எழுதினார். பின்னர் தமிழ் மற்றும் (அவரே எழுதிய) ஆங்கில புத்தகமாக வெளிவந்தது.
 • மங்களம், அடக்கம், இனிமை, தெளிவு, கம்பீரம் போன்ற பல சொற்களின் மறு உருவம் எம்.எஸ்.அம்மா. உண்மையிலேயே ஒரு பாரத ‘இசை’ ரத்தினம். இந்த பாடலின் நான்காவது சரணத்தை ‘கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி…‘ பாடும் பொழுது எம்.எஸ் அம்மாவின் முக பாவத்தை கவினிக்கவும். கண்களை மூடி, மனமுருகி, அவன் திரு காட்சிக்காக கைகளை ஏந்துப் பாடுவார். அவர் உடன் இருந்த சிலர் சொல்லிக் கேட்டு உள்ளேன் : இந்த பாடலின், இந்த சரணத்தை பாடும் பொழுது, எம்.எஸ் அம்மா பல ஆன்மீக அனுபவங்களை பெற்றதாகவும், கண்ணுக்குள்ளே, கண்ணை கண்டதாகவும் சொல்கின்றனர். இசையால் இன்பம் மட்டுமல்ல, இறைவனை காணலாம் !

ரஞ்சனி மாமி :

உண்மையிலேயே ஆச்சர்யப்பட்டுப் போனோம். அவர் எங்களைத் தொடர்பு கொண்டபோது. நானும் பங்களிக்கலாமா? என்றபோது எங்களுக்கு வேறேதும் தோன்றவில்லை. சரி என்று சொன்னோம். உடனே களத்தில் இறங்கிவிட்டார். கொஞ்சம் தாமதமாக பதிவை வெளியிட வேண்டியதாய்ப் போய் விட்டது. மிகுந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் அவருக்கு.

அதிகம் அவர் குறித்து சொன்னால், ‘எங்களூரிலே’ நன்றாக குளிர்கிறது. ஐஸ் வேண்டாம் என்கிறார்.

அவரின் அனுபவங்களுக்கு முன் எங்கள் முயற்சிகளை தொடர்ந்து ஆதரிப்பது மிகவும் அபூர்வமானது. நன்றிங்மா!

அவரின் தளங்கள் மட்டும் இங்கே….அவரின் வார்த்தைகள் அங்கே!

http://ranjaninarayanan.wordpress.com/

http://pullikkolam.wordpress.com

உங்கள் கருத்துகள், இசை பாடல்ப் விருப்பங்கள் அனைத்தையும் எங்களுக்கு சொல்லுங்கள், கமெண்ட்-டாக. நீங்கள் பங்கு பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இயற்கை / இறை சூழ, இசை வாழ்க ! இன்பம் பெருக !

மாலைப் பொழுதினிலே…

இணைய வழி இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். இசையுடன் நித்தம், நித்தம் பழகி, மகிழ்ந்து வந்தும், இங்கு பாக்களை வெளியிட தாமதம் ஏற்பட காரணம் ஒன்று வந்து விட்டது. அதை பற்றி பதிவுன் இறுதியில் சொல்கிறோம். முதல் வாசகர் விருப்பதை இந்த முறை பதிவு செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்கள் முதல் வாசகர், திருமதி.ரஞ்சனி அவர்கள் ‘மாலைப் பொழுதினிலே’ பாடலை கேட்டு இருந்தார். அவர் தளம் : ranjaninarayanan.wordpress.com இரண்டாம் ஆண்டில் நுழைந்துள்ளது, வாழ்த்துகள் மாமி. அதற்காக எங்கள் பரிசு இந்த பதிவு. இது நிற்க. பாக்கு வருவோம் : மிகுவும் அழகியப் பாடல், அதே சமையத்தில் பழையப் பாடல். ஆசான் கல்கி அவர்களின் அற்புத வரிகள். வள்ளி தன் காதலானான முருகனை எங்கும் காண்கிறாள். கனவில் கூடத் தான். இது தான் சூழ்நிலை. கல்கி அவர்கள் முருகனையும், அவர் அழகையும், வள்ளியின் மன நிலையையும் ஒன்று சேர முருகு(அழகு) தமிழில் கவிதையாக வடித்துள்ளார்.

இதே போல தான் ராதை, கண்ணை நொடிக்கு நொடி, நினைத்து வாடி இருப்பாள். பெண்ணின் மனதை புரிந்து கொள்வது மிக கடினம், என்று, அன்று முதல் இன்று வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள். ஆனால் கல்கி மட்டும், வள்ளியின் மனத்தில் இருந்து படம் பிடித்தார் போல பாடல் எழுதியுள்ளார். அதுவும் வள்ளி வெட்கத்தால் நானும் இடங்கள், அற்புதம்! மர தமிழ்ச்சியின் உணர்வுகள் ! எழுத்துக்கு ஒலி வடிவம் கொடுத்தவர், இசையின் முடிசூடா ராணி எம்.எஸ் அவர்கள். குரலில் என்ன ஒரு பாவம், சொன்னால் புரியாது, பாடலை இணைத்துள்ளோம், செவி மடுத்து மகிழுங்கள்.

கல்கி அவர்களின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு விட்டன. அவர் எழுதிய புதினங்கள் மற்றும் கதைகள் மட்டுமே பிரபலமாகியுள்ளது. இது போல பல பாடல்கள் எழுதி உள்ளார். தமிழ் மீதும் தமிழ் கடவுள் முருகன் மீதும் அவருக்கு அபார பக்தி என்று சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை. மேலும் எங்களுக்கு தெரிந்த பாடல்கள் சில உள்ளன. அவைகளும் இசைப்பாவை அலங்கரிக்கும். இந்தப் பாடல், திரைபடத்தில் வந்து இருக்கும், என்று தோன்றுகிறது, ஆனால் அதை பற்றி விபரம் எதுவம் தெரியவில்லை. அதே போல இசை அமைத்தவர் பாற்றியும் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

வள்ளி முருகன் !
வள்ளி முருகன் !

பா – 04

பாடல் : மாலைப் பொழுதினிலே
ஆசிரியர் : கல்கி – ரா.கிருஷ்ணமூர்த்தி
பாடியவர் : எம்.எஸ். சுபலட்சுமி
இசையமைப்பு : (தெரியவில்லை)

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்
மலர்ப் பொழிலினிலே
கோலக் கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே

மாலைக் குலவு மார்பன் மறுவில்
மாமதி போல் முகத்தான் – வேலொன்று
கையிலேந்தி என்னையே விழுங்குவான் போல் விழித்தான்

நீலக் கடலினைப் போல் என் நெஞ்சம் நிமிர்ந்து பொங்கிடவும்
நாலு புறம் நோக்கி நாணினான் யாரிங்கு வந்ததென்றேன்
ஆலிழை மேல் துயின்று புவனம் அனைத்துமே
கணிக்கும் மாலின் மருமகன்யான்
என் நெஞ்சே வேலன் முருகன் என்பான்

சந்திரன் வெட்கமுறும் உன் முகத்தில் சஞ்சலம் தோன்றுவதேன்
தொந்தம் இல்லாதவலோ புதிதாய் தொடர்ந்திடும் உறவோ
முந்தை பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்
எந்தன் உயிரல்லவோ கண்மணி ஏனிந்த ஜாலம் என்றான்

உள்ளம் உருகிடினும் உவகை ஊற்று பெருகிடினும்
கள்ளத்தனமாக கண்களில் கனல் எழ விழித்தேன்
புள்ளி மயில் வீரன் மோகன புன்னகைதான் புரிந்தான்
துள்ளி அருகில் வந்தான் என் கரம் மெல்ல தொடவும் வந்தான்

பெண் மதி பேதமையால் அவன் கை பற்றிடுமுன்
பெயர்ந்தேன். கண் விழித்தே எழுந்தேன் துயர கடலில் விழுந்தேன்
வண்ண மயில் ஏறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்
கண்கள் உறங்காதோ அக்குறை கனவை கண்டிடேனோ

மாலைப் பொழுதினிலே ஒரு நாள் மலர்ப் பொழிலினிலே!

செவிக்கு உணவு :

[பாடலை பதிவிறக்க ‘Download’ பட்டனை சொடுக்கவும்.]

பல நாள் கனவு தான் இந்த இசைப்பா தளம். எந்த வித முன் ஏற்படுமின்றி தொடங்கி விட்டோம். வாசகர் விருப்பங்களும் வந்து விட்டது. இந்த பாடலின் ஒலி வடிவும் மட்டுமே எங்களிடம் இருந்தது. எத்தனை முயற்சி செய்தும், வரிகள் அனைத்தையும் சரியாக எழுத முடியவில்லை. எழுதி முடித்தாலும், ஒரு வித திருப்தி இல்லை. இணையத்தில் கொஞ்சம் தேடி, வரிகளை சரிப்பார்த்து கொண்டோம். இந்த முயற்சிக்கு இடையில், வேறு பல பாடல்கிளின் வரிகளை எழுதி விட்டோம். ஆனால் தமிழ் அவர்கள், வாசகர் விருப்பதை பூர்த்தி செய்து விட்டு தான், அடுத்த பாடல் வர வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். இதுவே தமாதத்துகான மூலக் காரணம்.

மேலும் வாசகர் விருப்பங்கள் எதிர்பாரக்கப்படுகின்றன. உங்கள் மேலான கருத்துகளையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். இசை என்பது வாழ்க்கை என்றான பின், துக்கம் எல்லாம் தூர தான் போக வேணும். வாழ்க தமிழ் ! வாழ்க இசை !