மேலே மேலே தன்னாலே…

நாயகியை பலத்த எதிர்பார்ப்புடன் காணும், நாயகனின் உணர்வுகளை பதிவு செய்யும் பாடல். அவள பாத்துடாதடா.. பாத்தா அப்படியே (காதல்ல) விழுந்திடுவ – என அனைவரும் சூளுரைக்க, சும்மா இருப்பாரா நம்ம வாரிசு. நான் எல்லாம் அனுமார் பக்தர்…. எங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது, என்ற ஏத்தத்துடன் கண்டு, மேலே மேலே போறார்… காதல் வானில் விழுந்த தேனியாய், மயங்கி, கிறங்கி, ஆட்டம் போடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசை இனிமையாக உள்ளது. பல நாட்களுக்கு பின் ஒலிக்கும் கார்த்திக்கின் குரல், இன்னுமும் அதே வசீகரத்துடன் உள்ளது. தாமரையின் எளிய வரிகள், எதுகை மொவனை எல்லாம் மிகவும் பொருத்தமாக வந்துள்ளது : தூறல், சாரல், ஈசல், ஆவல், மோதல், ஏஞ்சல் ! இன்னும் ஒன்று : கொடும, அரும, பெரும, இனிம, பொறும, தெறம !

பாடல் : மேலே மேலே தன்னாலே
படம்: இது கதிர்வேலன் காதல்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டு போனாளே
அந்த புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாள்

மேலே மேலே….

ஆள திண்ணு போனாளே,
ஆட்டம் போடா வச்சாளே,
அந்தரத்தில் என்ன தான்
பத்த வச்சுட்டாளே !

அவன் தூர நின்னா தூறலு,
என் பக்கம் வந்தா சாரலு,
அவளாலே நான் ஆனா ஈசலு !

அவ மேலே ரொம்ப ஆவலே,
அதனாலே உள்ளே மோதலு,
அவன என்னோட காதல் ஏஞ்சலு !

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
பாடாதே நீயும் லூசா லூசா

அவ ஒரு அழகிய கொடும,
அத பொலம்பிட பொலம்பிட அரும,
நிதம் என்ன பாத்ததும் ஏறிப்போச்சு பெரும!

அவ ஒரு வகையில இனிமை,
அத அறிஞ்ஜிட அறிஞ்ஜிட புதும,
என்ன தொட்டு பேசிட கூடிப் போச்சு திறம !

அவ நேருல வந்தா போதும்,
தெருவெல்லாம் தேரடியாகும்,
அவ கண்ணாலே பேசும் தீபம் !

மேலே.. மேலே….

கடவுள துதிப்பவன் இருப்பான்,
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்,
அட அவல பாத்திட எல்லாத்தையும் மறப்பான் !

ஒலகத்த ரசிப்பவன் இருப்பான்,
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்,
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான் !

அவ ஒரு முற வச்ச காரம்,
என் உசுருல நித்தம் ஊரும்,

அவ தீராத நீராகாரம் !

மேலே… மேலே…
வா ராசா ராசா…

நல்ல பாடல். படத்தை ஒரு முறை பார்க்கலாம். இசை எங்கும் பரவட்டும். இனிமை எங்கும் பொங்கட்டும். வாழ்த்துக்கள்

கனிமொழியே….

இசை வணக்கம் நண்பர்களுக்கு,

                                         வைரமுத்து  அவர்களின் பாடலுடன் இப்பதிவில் சந்திப்பது மகிழ்ச்சி.  என் பாடல் பட்டியலில் பெரும்பாலும் வைரமுத்து அவர்கள் எழுதிய பல பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். வரிகளை ரசிக்க பாடல் கேட்பது  தனி இன்பமே !  பாடலை ரசிப்பது பல வகை உண்டு நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பது பொறுத்து பாடல்வரிகளையும் ரசிப்போம்.

                                        இரண்டாம் உலகம் படத்தில் இடம் பெற்ற பாடல்  அண்மையில் ரொம்பவும் பிரபலமான பாடலும் கூட. கார்த்திக் குரலில் ரிங்காரம் போல் நம்மையும் பாட வைக்கும் பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் , அனிருத் ரவிச்சந்திரன்  இசையை பாராட்டியே ஆகவேன்டும். பாடலின் பேக்கிரவுண்ட் கரோக்கேவும் அருமை. இசை வடிவமைத்த விதமும் அழகு ,சினிமாட்டோகிராபியும் அருமை.

                                       கதாநாயகன் தன் காதலை ஏற்றுக்கொள்ள நாயகியை சுற்றி சுற்றி வருகிறான். நாயகி அவன் மீது காதல் கொண்டும்  அவள் அழகுற மறைத்து இருப்பதை நாயகன் கூறுகிறான். அவள் காதல் வேண்டும் என்பதற்காக அவள் மனதை இலகச் செய்ய கடைக்கண் பார்வை போதும் என்றும்….ஒரு சிறு பார்வை போதும் என்று மன்றாடி உருகுகிறான். பாடலை ரசித்த வண்ணம் வரிகளையும் ரசிப்போம் வாருங்களேன் !…

படம்: இரண்டாம் உலகம்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: கார்த்திக்,ஹரிணி ராமசந்திரன்

கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்

கனிமொழியே என்னை ….

இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்

ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறு பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..

நான் எட்டு திக்கும் அலைகிறேன்…

ஊ….ஊ…ஊ….. ஹா..ஹ ஹ ஹ…..ஹா

உந்தன் கன்னத்தோடு எந்தன்
கன்னம் வைத்தால்
நானும் மண்ணில்
கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்

அடி உந்தன் கன்னக்குழியில்
என்னை புதைத்து வைத்தாய்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்..

ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
(ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…)
சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..
(சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..)

நான் தேடித் திரியும்
வான்மீன் நீதானே தென்றலே….
வா முன்னே முத்தமா கேட்கிறேன்?
உருவம்தான் கேட்கிறேன்

கனிமொழியே…ம்குமும்ம்ம்
கடைவிழியாய்…ம்குமும்ம்ம்

ம்ம்ம்ம்முஹு ஹே ஹே…

பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவைமீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என்கண்கள் உந்தன் மீதே விழிந்திருக்கும்

என்னைக் கட்டிப்போடும் காந்தச்சிமிழே…
ஓ..ஹோ..
ஒரு பாட்டுப் பாடும் காட்டுக்குயிலே
ஹா…ஹா..ஹ ஆ
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே
வலதுகால் எடுத்துவை
வாழ்க்கையை காட்டவை

கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்

(பெண்…)

இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்

(ஆண்…)

ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறுப் பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா…

இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். மேலும் இனிய பாடல்களுடன் விரைவில் வருகிறோம். இசையுடன் ஆனந்தம் பெருகட்டும்.

ஒரு நிலா ஒரு குளம்

வணக்கம்.

காதல் பாடல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்னுமொரு இனிய பாடல். ஏற்கனவே மழையில் குளித்த மலர்வனம் பாடலைத் தந்தோம். அதே பாணியில் இன்னுமொரு காதல் பாட்டு. வித்யாசாகர்+பா.விஜய் கூட்டணியில்.

பாடகர்களும் சும்மா இல்லை. கார்த்திக், ஷ்ரேயா கோஷல். சற்றே பெரிய அணி இப்பாடலில் இணைந்திருக்கிறது.  பாடல் குறித்து கவிஞர் சொல்கிறார்..

”இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது  என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாடல்! எனவே இதை படமெடுக்க ரோம், வெனீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று  முடிவெடுத்தோம்.

பாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின!

ஆண்:     ஒரு நிலா.. ஒருகுளம்!
ஒரு மழை.. ஒரு குடை!
நீ‡ நான் போதும் ஒரு விழா!

பெண்:     ஒரு மனம்.. ஒரு சுகம்!
ஒரு இமை.. ஒரு கனா!
நீ ‡நான் போதும் ஒரு யுகம்! “

ஆம். ஹைக்கூ வடிவத்தை அடியொற்றி, சந்தச் சுவை கூட்டி, தமிழோடு விளையாடும் வார்த்தைக் குவியல்கள்தான் பாடல். பாடலுக்கேற்ற ஈர்ப்பைக் கொடுக்கிறது இசை. தெளிவாக வார்த்தைகள் விழுகின்றன. இதுவே பாடலைக் கேட்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது. வரிகளை வாசித்தாலே ஒரு உற்சாகம் பிறக்கும். யூட்யூப்-ல் இப்பாடலின் வீடியோவும் இல்லை! வழக்கம்போல் பாடலைக் கேட்டு ரசிக்க செவிகளைத் தயார்படுத்துங்கள்!

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்

நெடும்பகல்…. நீண்ட கனவு!
நிஜமாகுமா?

ஒரு நிலா ஒரு குளம்
ஒரு மழை ஒரு குடை
நீ..நான் போதும்
ஒரு விழா!

ஒரு மனம் ஒரு சுகம்
ஒரு இமை ஒரு கனா
நீ..நான் போதும்
ஒரு யுகம்!

ஒரு கணம் இரு இதழ்
ஒரு நிழல் இரு தடம்
நீ..நான் போதும்
ஒரு தவம்!
(ஒரு நிலா ஒரு குளம்..)

காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!

சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!

நீ..நான் போதும்
முதல் தனிமை!
(ஒரு நிலா ஒரு குளம்..)

மஞ்சம் கொஞ்சிய மன்மதம் நீ!
கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்!
மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ!
மௌனம் மலர்கிற கவிதை நான்!

ஓவியம் எழுதும் அழகியல் நீ!
உன்னை வரைகிற தூரிகை நான்!
உயிரை மீட்டிய விழிவிசை நீ!
உன்னுள் பூட்டிய இதழிசை நான்!

நீ..நான் போதும்
புது உணர்வு!

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

சித்திரையில் என்ன வரும்?

வணக்கம்.

அதென்னமோ தெரியவில்லை. வித்யாசாகர் + கரு.பழனியப்பன் கூட்டணியில் பாடல்கள் அனைத்தும் கேட்கிற ரகமாக, இன்னும் சில ஈர்க்கிற ரகமாக அமைந்துவிடுகிறது. இப்பாடலும் விதிவிலக்கல்ல. இதற்கு முன் இப்பாடலைக் கேட்டவர்களுக்கு இது இன்னுமொரு கொண்டாட்டம். முதல்முறை கேட்பவர்களுக்கு மனதினுள் ஒரு குதூகலம் பிறக்கும்.

பாடல் வரிகளுக்கு முழு இடம் கொடுத்து, மெலிதாக வரி நோகாமல் பின் தொடரும் இசை ரொம்பவே அருமை. கவிஞர் யுகபாரதி கடந்த ஒன்றரை வருடங்களாக முன்னணியில் இருக்கிறார். ஆனால் இப்பாடல் அதற்கெல்லாம் முன்பு எழுதப்பட்ட ஒன்று. ஒரு பாட்டில் யாரும் புகழடைவதில்லை என்பதற்கு ஒரு உதாரணம் இப்பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம்!

ஏற்கனவே உவமை வகையில் பிரிவோம் சந்திப்போம் படப் பாடலைத் தந்திருந்தோம். அதே கவிஞர் அதே கூட்டணியில் எழுதிய பாடல். நாட்டுப்புற பாடலொன்றின் அடியொற்றி காதல் பேசும் பாட்டு. ஒரு வினா.. அதற்கொரு விடை என்று தொடரும் பல்லவி,  சரணத்தில் இன்னும் கொஞ்சம் காதலைக் கொஞ்சி செல்கிறது.

போல எனும் உவம உருபைப் பயன்படுத்தி கொஞ்சம் உதாரணங்கள் தருகிறார் கவிஞர். ஆவிப்புகை, நூல், தாய், காதல் (!),   மாவிளக்கு, ஊற்று என சற்றே காதலைத் தொட்டுக் காட்டுகிறார். பாடலின் சந்தச் சுவை எவ்விடத்திலும் இறங்கவே இல்லை என்பது இன்னும் சிறப்பு. வாசிக்கவே தோதான வரிகளுக்குள் இசையும், குரலும் கலந்தால் கேட்க இனிக்காதா என்ன?

படம்: சிவப்பதிகாரம்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: கார்த்திக், சொர்ணலதா

அப்படியோர் ஆணழகன்
என்ன(னை) ஆள வந்த பேரழகன்!
செப்புக் கல்லு சீரழகன்!
சின்னச் செம்பவள வாயழகன்!
இப்படியோர் தேரழகன்! –இல்ல!
இன்னுஞ் சொல்லும் ஊரழகன்!
அப்புறம் நான் என்ன சொல்ல?
என்ன(னை)க் கட்டீட்டான் கட்டழகன்!

******
சித்திரையில் என்ன வரும்?
வெயில் சிந்துவதால் வெக்க வரும்.
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்.

கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்.

(சித்திரையில்)

பாவிப் பயலால இப்ப நானும்
படும் பாடு என்ன?
ஆவிப் புகைபோலத் தொட்டிடாம
இவ போவதென்ன?

கண்ணுக்குக் காவலா
சொப்பனத்தில் கூடுற!
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்களப் பூசுற!

நூலப் போல சீல!
பெத்தத் தாயப் போல காள!
யாரு போல காதல்?
சொல்ல யாருமே இல்ல!
(சித்திரையில்….)

கேணிக் கயிறாக உங்க பார்வ
என்ன மேலிழுக்க!
கூனி முதுகாகச் செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க!

மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற!
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற!

யாரும் இறைச்சிடாத
ஒரு ஊத்தப் போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி

(சித்திரையில்…)

இசைப்பா தளம் 50,000 பார்வைகளை இப்பதிவில் கடக்கிறது. இதுகாறும் ஆதரவு தந்த, இனிமேலும் தரப்போகிறவர்களுக்கு நன்றி. பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

அனார்கலி..அனார்கலி..

இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம்,

                               காதல் என்றாலே தனி உலகமாக வாழும் காதலர்கள் தங்கள் காதலை ரசிப்பதும் அழகே அந்த வகையில் அனார்கலி பாடல் வரிகளும் இசை அமைத்த விதமும் மனதை கவர்ந்த வண்ணம் என்றே கூறலாம்.

                                 ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க பா.விஜய் அவர்களின் வரிகள் இணைந்து காதல் கசியும் அருவியாகவே பாடல் இருக்கிறது.பாடியவர்களின் மென்மைகலந்த குரலும் நம்மையும் காதல் வலைக்கு ஈர்ப்பது போன்று அமைந்து இருக்கிறது.

                                காதல் என்னும் அழகிய உலகிற்குள் சென்ற இரு மனங்கள் ஒருவரை ஒருவர் வருணித்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர் . ஒருவரை ஒருவர் ரசித்தும் தங்களின் அழகிய உணர்வுகளை பகிர்ந்தும் காதலில் கரைகின்றனர். காதலில் இணைந்த மனங்கள் தங்கள் முகவரியாக  இடமாற்றிக்கொள்கின்றனர், தத்தம் முகவரியாகவே ரசிக்கின்றனர்.

படம்: கண்களால் கைது செய்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் ,
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்

கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா

ஆனார்கலி…. ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சின்ஞ்சுற நதியும் நீயடி…
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…

ஆனார்கலி… ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
குளிர் காற்று நீ …நான் பாய்மரம்
நதி காற்று நீ நான் தாவரம்..
ஆனார்கலி…ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

இயந்திர மனிதரைப்போல் உன்னையும் செய்வேனே…
இருவிழி பார்வைகளால் உன்னையும் ரசித்தேனே

அழகிக்கு யெல்லாம் துணிவதிகம்
அழகியின் திமிரில் ருசியதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

நடைநடந்து போகையில்…நீ இலக்கணமே
நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமே
ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என்மனம் என்பதற்கு முகவரி நீத்தானே…
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீ தான்…
இரவுகள் தோன்றும் கனவுகெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீ தான்….
மழைத்துளிக்கு மேகமே முதல் வரி
உன்னிதழிலில் மௌனமே உயிர் வரியோ..

ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…

உசுரே போகுது உசிரே போகுது…

கடத்தி வந்த (மணமான) பெண்ணைப் பார்த்து, மயங்கி கிறங்கும் நாயகனின் எண்ண அலைகள் சுமந்து வரும் பாடல். ஒரு ஆணினுடைய காதல், கொஞ்சம் காமம், கொஞ்சம் விரக்தி, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏமாற்றம் இப்படியான பல உணர்வுகள் இந்த பாடலில் உள்ளன . கொஞ்சம் இடறினாலும் பொருந்தா காமத்தில் சேரக்கூடிய பாடல்

இசை வெளியீடு
இசை வெளியீடு

பாடலை பற்றி அதன் ஆசிரியர் சொல்லும் சில கருத்துகள் :

எனக்கு ரொம்ப பிடித்ததே ரஹ்மான் போட்டு குடுத்த மெட்டு தான்! அந்த இடத்துக்கு இதை விட வலியோடு ஒருவன் பாட முடியாது. தனக்கு உரிமை இல்லாத பெண் மீது அவன் காதல் கொள்கிறான். மாற்றான் மனைவி மீது கொண்ட காதலும், காமமும் சரி விகிதத்தில் சங்கமிக்கும் போது மொழி கையாளப்படுகிறது, கத்தி மேல் நடப்பது மாதிரி.

இந்த பாட்டுக்கு ஒரு விமர்சனம் வந்தது.  உசுரே போகுது உசிரே போகுது – னு எழுதி இருக்கீங்களே, பிறர் மனைவியை பார்த்து ஒருவன் இப்படி பாடலாமா ? இவ்வளவு வலியோடு எழுதலாமா. நான் சொன்னேன்  : உரிமை இல்லாத பெண்ணின் மீது காதல் கொள்ளும் எவனுக்கும் உசிரு போய் விடும் என்பதற்காக தான் இப்படி எழுதினேன்.

பாடல் சாமர்த்தியமாக எழுதப்பட்டது என்றே சொல்ல வேணும். அதில் ஒரு வரி, பல பேர் என்னை விமர்சித்த வரி

இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதிசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல

உரிமை இல்லாத பெண்ணோடு காதல் கொள்வது ஒன்னும் உலகத்தில் புதுசு இல்ல. ‘ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுகத்துல’ அங்கு தான் நான் தப்பித்துக் கொண்டேன். அந்த விதிவிலக்கு விதியாக முடியாது என்பது தான் நான் இந்த பாடலில் நான் தந்து இருக்கும் மிகப்பெரும் செய்தி

ராவணன் சீதை மேல் ஆசை பட்டு பாடினால் எப்படி இருக்கும் ? என்பது தாம் இந்த பாட்டுக்கு மூலம். இதில் கம்பன் பாடாத குரலில், இன்னொரு எதிரொலி என்று தான் சொல்ல வேண்டும்

ravanan 2

பாடலாசிரியர் : வைரமுத்து
பாடல் : உசுரே போகுது….
படம் : ராவணன்
இசையமைப்பு : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர் : கார்த்திக்

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச – அடி
தேக்கு மரக்காடு பெரிசு தான்
இந்த தீக்குச்சி உசரம் சிறிசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந் தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுது உசிரே போகுது
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே

ஓ மாமேன் தவிக்குறேன்,
மடி பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கரச்சீமையில் நீயிருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குத்தடி
அக்கனி பழமுனு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு
உசிர் தடங்கெட்டு திரியுதடி
தைலாங் குருவி என்ன தள்ளி
நின்னு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா ?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா ?
என் மயக்கத்த தீர்த்துவச்சு மன்னிச்சிருமா

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும் இப்ப தல சுட்டி கெடக்குதே

உசுரே போகுது உசிரே போகுது…

இந்த உலகத்தில்
இது ஒன்னும் புதிசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
விதி சொல்லி வலி போட்ட மனசுக்குள்ள
விதிவிலக்கில்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

பாம்பா?விழுதா? ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினக்கலையே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன்ன முகம் போகுமா ?
நான் மண்ணுக்குள்ள – உன்
நினைப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்….

உசுரே போகுது உசிரே போகுது…

பாடல் படமாக்கபட்ட பிரம்மாண்டம் பற்றி சொல்லவே வேண்டாம், நீங்கள் அறிந்ததே. கார்த்திக் குரல் மிகவும் பொருத்தம். உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். வரிகளை கெடுக்காத மெல்லிய இசை, ஏக்கத்தை கூட்டுகிறது.

இசைப்பா++

ராவணன் படத்திற்கு முதலில் ஒளிப்பதிவு செய்ய அழைக்கப்பட்டவர் பி.சி.ஸ்ரீராம். ஆனால் கடைசியில் ஒளிப்பதிவு செய்தவர்கள் சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன்.வி 

இன்னும் ஒரு இனிய பாடலில் சந்திப்போம். இசையின் இன்பம் பரவட்டும்.உங்கள் கருத்துகள், விருப்பங்கள் எப்பொழுது போல வரவேற்கப்படுகின்றன 🙂

மழையில் குளித்த மலர்வனம்!

இசை வணக்கம்.

ஒரு மென்மையான பாடல். இதுவும் அதிகம் அறியப்படாத பாடல். ஆனால், வழக்கம்போல இனிய பாடல்! தொடக்கத்தில் அதிர ஆரம்பிக்கும் இசை 10 நொடிகளில் மனதிற்குள் நிறையத் தொடங்குகிறது. பாடகர் தொடங்கியதும் பாடல் வரிகளும் அப்படியே! பா.விஜய்யின் சந்த நயங்கள் பெரும்பாலும் அறிந்ததே. அது இப்பாடலில் இன்னொரு முறை வெளிப்படுகிறது. இனிய காதல் பாடல். கவிஞரின் வருணனைதான் பாடலின் சிறப்பு. தமிழுக்கு தேவையும் அதுதானே!

விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி

கற்பனை எண்ணங்களுக்கு கொஞ்சமாய் வண்ணம் குழைத்து வார்த்தைகளில் விளையாடும் பாடலுக்கு, நேர்த்தியாக, பக்கபலமாக இணைந்து ஒலிக்கத் துவங்குகிறது இசை. ஒவ்வொரு இடையிசையும் அருமையே!குறிப்பாக இரண்டாம் இடையிசை நடனமாடத் தூண்டும் வேகம்! அதன் தொடர்ச்சியாக கார்த்திக்கின் குரல் ரம்மியம்.

அடடா! பாடல் பாடல்!
அதுதான் பாடல் பாடல்!

தொடங்கிய கம்பீரத்துடனே பாடலும் முடிவுக்கு வருகிறது. இன்னும் சில தகவல்கள். பாடலை எழுதிய கவிஞரே இப்படத்தின் நாயகன்! ஆம். பா.விஜய் நாயகனாக நடித்த இரண்டாம் படம். பெரும் பொருட்செலவில், முன்னணி நாயகர்களின்  படத்தைக் காட்டிலும் அதிக செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம். ஒரு இனிய பொங்கல் திருநாளுக்கு வெளியாகிய படம். இன்னும் இன்னும் இனிய பாடல்களை தன்னகத்தே கொண்ட படம். படத்தின் கதையின் மூலம் இன்னும் வியப்பானது! இருக்கட்டும் இன்னொரு பாடலில் பார்க்கலாம். இன்னொரு தகவல் பாடலின் காணொளி youtube-ல் காணவில்லை. ஒலி மட்டும் இருக்கிறது. ஒளி இல்லை. அதுவும் வசதிதானே! பாடலை மட்டும் சுகமாக கேட்கலாம்!!

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், அன்விஷா

மழையில் குளித்த மலர்வனம்
மாலைநேரக் கடல் நிறம்
ஒற்றைக் கவிதை வெண்ணிலா
அற்றைப் பூக்களின் திருவிழா

அடடா! அழகு அழகு!
அதுதான் அழகு அழகு!
அடடா! அழகு அழகு!
அதுதான் அழகு அழகு!

(மழையில் குளித்த…)

கொஞ்சம் தாராள காதலி
புலனில் தேனூற்றும் கொலுசொலி
விடிந்தும் விடியாத மார்கழி
உலகெங்கும் கேட்கும் தமிழ்மொழி

அடடா! கனவு கனவு!
அதுதான் கனவு கனவு!
அடடா! கனவோ கனவு!
அதுதான் கனவோ கனவு!

ஈரம் உலராத இதழ்ச் செடி
இறங்கி முன்னேறும் கழுத்தடி
ஒட்டி உடையாத இடைக்குடம்
கொட்டி உதிராத கால்தடம்

அடடா! இளமை இளமை!
அதுதான் இளமை இளமை!
அடடா! இளமை இளமை!
அதுதான் இளமை இளமை!

மூடி வைக்காத எழுதுகோல்
மூச்சு இல்லாத உணர்வுபோல்
தரையில் மிதக்கும் கனவுகள்
எழுதி முடியாத கடிதங்கள்

அடடா! காதல் காதல்!
அதுதான் காதல் காதல்!
அடடா! காதல் காதல்!
அதுதான் காதல் காதல்!

(மழையில் குளித்த)

இசைப்பா+

இத்திரைப்படம் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் 50-வது திரைப்படம்

மற்றுமொரு இனிய பாடலோடு மீண்டும் விரைவில் இணைவோம்.