நீ வந்து போனது நேற்று மாலை – யான்

இசை வணக்கம்

ஹாரிஸ் ஜெயராஜ் பாடலுடன் இன்று உங்களை சந்திக்கிறோம். யான் ஓடத்தில் வந்த நெஞ்சே நெஞ்சே பாடல், ஏற்கனவே இசைப்பாவில் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு துள்ளலான பாடல். கேகே-வின் குரல் உற்சாக பிழம்பாக குதிக்கிறது, இசைக் கோர்வை அதி வேகத்தில் மோகம் கொள்ளச் செய்கிறது. நடு நடுவே என்.எஸ்.கே ராம்மியாவின் இடைக்குரல் பாடலுக்கு ஒரு முழுமையை தருகிறது.

பாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை எழுத முற்பட்டேன். சுத்தமான தமிழில், செமையான கவிதை என்றே சொல்ல வேண்டும். தாமரையின் தனி அடையாளம் ! குந்தக பூமியில், கற்கண்டு மாமழை என்று அழகான வெளிப்பாடுகள். நுதரும், கமரும் என்ற சொற்களை இதுவரை கேட்டதில்லை, பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

படம் : யான்
பாடல் : நீ வந்து போனது…
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, கே கே,
என் எஸ் கே ரம்யா

நீ வந்து போனது
நேற்று மாலை
நான் என்னை தேடியும்
காணவில்லை
வெண்பனி மூடத்தின்
போர்வையாக
எங்கும் வெள்ளை….

என் மனம் தேடிய
வானவில்லை
என் காது ஏங்கிய
வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட
அசை வில்லை….

சொப்பனம் கண்ட பின்
கண்ணைக் காணோம்
சொல்லிய வார்த்தையில்
மொழியை காணோம்
கற்பனை செய்த பின்
காண நீயில்லையே

குந்தக பூமியில்
மேகமானாய்
கற்கண்டு மாமழை
தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே

நீ வந்து போனது….

திங்கள் செவ்வாய்
இன்றே நகரும்
என்நாளென்று
இன்பம் நுதரும்
நான் கண்டேன்…
என் மரணம்

நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும்
பஞ்சை பற்றி
செந்தீ பரவும்
ஓ எங்கே…
என் அமுதம் ?

திரை சீலைகள்
இல்லாத
என் ஜன்னல் ஊடாக
தேடினேன்

வெளி ஓசைகள இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்…

என்னை உன்
உள்ளம்கை மீது
நீ தாங்கி தாலாட்டு,
ஆடினேன் !

சாகாவரம்…
நீ தந்தால்
நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது…

விண்ணை விட்டு
செல்லும் நிலவே
பெண்ணை கண்டு
நின்றால் நலமே
ஓ இங்கே…
நான் தனியே

முன்னும் பின்னும்
முட்டும் அலையே
எங்கே எங்கே
எந்தன் கரையே
நீ சொன்னால்…
சேர்த்திடுவேன்

கடல் கண்ணாலே
நீ பார்த்த
பார்வைகள் போதாமல்
ஏங்கினேன்

சிறு ஓசைகள்
கேட்டாலும்
நீ தானே என்றே
நான் தேங்கினேன்

வெறும் பிம்பத்தை
நீ என்று
கை நீட்டி ஏமாந்து
போகிறேன் !

கள்ளம் இல்ல
வெள்ளை நிலா
நீதானடி

நீ வந்து போனது…

இன்னுமொரு இனிய பாடலுடன் களம் காண்கிறோம். இசை எங்கும் இனிக்கட்டும், தமிழ் எங்கும் பரவட்டும்.

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது…!

இசை வணக்கம்.

தொடர்ந்து மெல்லிசைப்பாடல்கள் இசைப்பாவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் இன்று இன்னுமொரு மெல்லிசையில் வருடும் பாடல். வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில்….

                            வைரமுத்து அவர்களின் இனிமையான காதல் கலந்த வரிகளில் இப்பாடலும் ஒன்று.வித்யாசாகர் இசையில் மென்மை கலந்த மெல்லிய மௌன வரிகளும் அசத்தலே ! பாடல் கேட்க கேட்க குரலின் மென்மையும் காதலை உணரச்செய்வதாய் இருக்கிறது.

vairamuthu

வித்யாசாகர்காதலன் காதலை எப்படியேனும் தன் காதலிக்கு சொல்லிவிடவேண்டும் என்ற அழகிய அவஸ்த்தையை  சொல்லி மாளாது தான் இருக்கும் இடத்தையே அழகு சொர்க்கம் ஆக்கிக் கொண்டு தன் காதலை வருணிக்க ஆரம்பிக்கிறான்.தான் கடக்கும் ஒவ்வொரு நாளையும் திருநாளாகவே எண்ணி ஒவ்வொரு நாளும் காதலை தெரிவிக்க காத்திருக்கிறான்.சொல்ல எண்ணியும் எப்படி தன் காதலை சொல்வதென்று அறியாது காதல் வலைக்குள் மேலும் பின்னிக்கொள்கிறான்.

வைரமுத்து பாடல்களில் பிடித்த ஒன்று என்றால் “பூவுக்கெல்லாம் சிறகு..”  இப்பாடலும் கண்டிப்பாக இடம் பெறும் எனது விருப்பப் பட்டியலில். அத்தோடு இசையமைப்பாளர் வித்யாசாகர் நீண்டகாலமாக தமிழ்த் திரையிசையில் பாடல்கள் அமைக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது மீண்டும் தமிழ்த் திரையிசையிலும், கூடவே நமது இசைப்பாவிலும் இணைந்துள்ளார். இரு தளங்களிலுமே தொடர்ந்து இனிய பாடல்கள் வருமென நம்புவோம்! இசைப்பாவில் பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், கே.கே இருவருக்கும் இது முதல் பாடல்,

படம்:உயிரோடு உயிராக
பாடலாசிரியர்:வைரமுத்து
இசை:வித்யாசாகர்
பாடியவர்கள் :ஸ்ரீநிவாஸ்,கே கே

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முதூர்தமானது எந்தன் மாதத்தில்
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம் ….(2)

(பூவுக்கெல்லாம் சிறகு ….)

நிலவை பிடித்து எறியவும் முடியும்
நீல கடலை குடிக்கவும் முடியும்
காற்றின் திசையை மாற்றவும் முடியும்
கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா ?
இது தான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்து
கற்றை குழல் கயிறு செய்தது
மோதும் ஆடை முத்தமிட்டது
ரத்தம் எல்லாம் சுட்டுவிட்டது

I love you love you சொல்லத்தானே
ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை குளிர்ந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது

காதல் என்பது சரியா தவறா?
இது தான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம் சிறகு …)

இசைப்பா +

இசையமைப்பாளர் வித்யாசாகர் 3 வயதிலிருந்து இசையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார்.

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்!