ஒரே ஒரு ஊரிலே…!

இசை வணக்கம்.

”நாம எப்பவாவது, பஸ்ல பயணம் பண்ணும்போது, நம்ம பக்கத்துல உட்கார்ந்து, நம்ம தோள்ல தூங்கி விழுந்து, அடிக்கடி position-ஐ மாத்தி இம்சை பண்ணுவாங்க. இப்படி அரைமணிநேரம், ஒருமணிநேரம்  நீடிக்கிற பயணத்துல சக மனிதனை சகிச்சுக்க முடியாத நாம,  வாழ்க்கை பயணத்துல, உறவு சொல்லும் மனிதர்களை மட்டும்  எப்படி  சகிச்சுக்கிறோம்?

ஒரே வார்த்தை. குடும்பம்…… ” என்றபடி பாடல் குறித்து அறிமுகம் செய்துவைக்கிறார் பிரகாஷ்ராஜ்.

வித்யாசாகர் இசையில் ஒரு குதூகலாமான பாடல். குடும்பம் குறித்த பாடல்.

abhiyum naanumபிள்ளைகள் பிறப்பதை வரமாகவே பெற்றோர்கள் நினைத்து மகிழ்வதுண்டு. அவர்களுடனே வளரவும் செய்கின்றனர். ஒவ்வொரு நிலையிலும் பிள்ளைகள் பக்குவம் அடைவதுடன், அவர்களுடன் பெற்றோர்களும் பக்குவமுமடைந்து  வாழ்வின் சின்ன சின்ன பகுதிகளை ரசிக்கவும் செய்கின்றனர். பெரும்பாலும் தந்தைகளுக்கு மகள்கள் மேல் பாசம் அதிகமே மகள்களின் ஆசைகளை அழகுடனே நிறைவேற்ற தந்தைகளுக்கு கொள்ளை ஆசை. அன்பெனும் கூட்டினுள் அடைக்கலம் புகும் குஞ்சின் சின்ன சின்ன முயற்சிகளும் அதன் தாய் தந்தை பறவைகளிடையே பெரிய சாதனைகளாகவே தெரியும் ஊக்கமும் கிடைக்கும் . பிள்ளைகள் பாசத்திற்கு ஏற்ப பெற்றோர்களின் நேசமும் அதிகமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கும். சின்ன சின்ன நிகழ்வுகளும், பிள்ளைகளின் சுவடுகளும் பெற்றோர்களின் சரித்திர குறிகளில் அழகுடனே பதிக்கப்படுகின்றது.

எளிய வரிகளில் வளம் சேர்க்கும் பாடல். ஆர்பாட்டமில்லாத வைரமுத்துவின் வரிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை இசையும், கைலாஷ் கெரின்  குரலும் பாய்ச்சுவது மட்டும் மெய்!

பிரகாஷ்ராஜ் மேலும் சொல்கிறார்….
”ஒரு அப்பாவையும், மகளையும் பத்தின படத்தோட நமக்கு என்ன சம்பந்தம்-னு நினைக்கிறீங்களா?  உங்க அம்மா, தோழி, காதலி, மனைவி,  இப்படி நீங்க வாழ்க்கையில சந்திக்கிற எல்லா பெண்களுமே யாரோ ஒருத்தரோட மகள்தானே?

அன்பான அப்பா. அறிவான அம்மா. அன்பும், அறிவும், அழகும் இருக்கிற மகள். இந்த குடும்பம் எப்படியிருக்கும்?

கேளுங்க…”

படம்: அபியும் நானும்
பாடல் : ஒரே ஒரு ஊரிலே …
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
பாடியவர்: கைலாஷ் கெர்

ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு அய்யா
ஒரே ஒரு அய்யாவுக்கு
ஒரே ஒரு அம்மா
ஒரே ஒரு அம்மா பெத்தா
ஒரே ஒரு பொண்ணு
அவ
பொண்ணு இல்ல பொண்ணு இல்ல
கடவுளோட கண்ணு

அய்யா இருக்காரே…. அய்யா!

பாசம் இல்லாம பலரு
பைத்தியமா ஆனதுண்டு
பாசத்தினாலே இவரு
பைத்தியமா ஆவதுண்டு

காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிப்பாரு
காத்தடிச்சா சூரியன கைது செய்ய பாப்பாரு
மக மட்டும் மக மட்டும் உசுரு…..
மத்ததெல்லாம் மத்ததெல்லாம்……
இவருக்கு கொசுறு!

(ஒரே ஒரு ஊரிலே)

அக்கா இருக்காங்களே….. எங்க அக்கா

பூச்சிய பாத்தாலே சிலரு புத்திமாறி போவாங்க
பூகம்பமே வந்தாலும் அக்கா பூத்தொடுத்து நிப்பாங்க

கொண்டதுவும் ஒரு குழந்தை
கொடுத்தவனும் ஒரு குழந்தை
தொலையட்டும் கழுதைகனு
தொல்லை எல்லாம் பொறுப்பாங்க!

எங்க அக்கா எங்களுக்கு பரிசு!
எங்க அக்கா மனசோட இமயமலை சிறிசு!

அம்மா இருக்காங்களே…. எங்க அம்மா
பொறந்து வரும் போதே சிலரு வரம் வாங்கி வருவாங்க
பொறந்து வரும் போதே சிலரு வரம் தரவே வருவாங்க

வரமாக வந்தம்மா வாஞ்சை உள்ள தங்கம்மா
சிட்டெறும்ப நசுக்காத  சிங்கம் தான் எங்கம்மா

மறுபிறவி உண்டுன்னா எனக்கென்ன வேணும்?
இந்த மகளுக்கோ, தாய்க்கோ
நான் மகனாக வேணும்!

(ஒரே ஒரு ஊரிலே)

இசைப்பா+
அபியும் நானும் படத்தை கன்னடத்தில் பிரகாஷ்ராஜே பின்னர் இயக்கினார்.

மற்றுமொரு இனிய பாடலோடு மீண்டும் விரைவில் இணைவோம்.