பாடல் சொல்கிற கதை

தவமாய்த் தவமிருந்து படத்திலிருந்து ரெண்டு பாடல்கள் 

ஒரே மெட்டு, வெவ்வேறு வரிகள், ரெண்டு பாடல்களிலும் ஒரே கதை மாந்தர்கள் ஆனால் இரு வேறுபட்ட சூழல்கள்

பாடலைத் தேன்மொழி என்கிற கவிதாயினி எழுதி இருக்கிறார். சபேஷ் முரளி இசை அமைத்து, பிரசன்னா பாடி இருக்கிறார்

முதல் பாடல் –  நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே 

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே
காதல் நுழைந்த வழி கண்டறிவாய் காதலியே

விண்ணில் மழைத் துளிகள் மின்னலாய் நின்றுவிட
மண்ணில் எனது நிழல் உன்னைப்போல மாறி விட
விரலோரம் கவிதை ஊறியதே
விழியோரம் காதல் கசிகிறதே
நதி மேலே ஓற்றைக் காலில் மழை ஆடும் ஆனந்தமாய்
கனவு ஊறும் மனசுக்குள்ளே
காதல் வந்து ஓற்றைக் காலில் சுற்றி சுற்றி மூழ்கடிக்குதே

நானே தொலைந்த கதை நானறியேன் கண்மணியே

உன் இதயம் நான் படிக்க கள்வனாய் மாறி வந்தேன்
என்னைப் போல நீயும் ஓரு கள்ளி என கண்டு கொண்டேன்
என் விரலை உன் விரலால் இரவினில் தீண்டுகிறேன்
முத்தமென்று தண்ணீரை முகத்தினில் ஊற்றுகிறேன்
உன் முகம் தேடி காலையில் வெயிலாகிறேன்
உன் குரல் தேடி சாலையில் குயிலாகிறேன்

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

கண்கள் எனை மறந்து உன்னையே தேடியது
சுவாசம் உன் பெயரை என்னுள்ளே பாடியது
லேசாக சண்டை போடவா
பேசாமல் முத்தம் கேட்கவா
வெயில் காயும் சாலையிலே மழை தூவும் ஆனந்தமாய்
தனிமை நீங்கும் வேளையிலே
காதல் நம்மை காற்றைப் போல எங்கோ எங்கோ கொண்டு செல்லுதே….

கல்லூரிக் காலத்தில் பூக்கிற காதல், காதலனின் மனதில் பொங்குகிற எண்ணங்கள், அவனுக்குள்ளே காதல் ஏற்படுத்துகிற மாற்றங்கள், அந்த மாற்றங்களை அவன்  வெளிப்படுத்துகிற விதம்,  காதலியின் பார்வைக்காக, அவள் காட்டுகிற அன்புக்காக அவன் ஏங்குகிற ஏக்கம், அவளைக் காண வேண்டும் என்கிற  தவிப்பு எனப் பல்வேறு உணர்ச்சிகளின்  கலவை இந்தப் பாடல்.

இந்த ரெண்டு வரிகள் போதும்  காதலை, அதன் வீரியத்தை, அவன்

பிரிவுத்துயரைச் சொல்ல:

தேர்வு அறை முழுதும் தேவதையே உன் நினைவு
நாளை விடுமுறையாம் காதல் வதை உன் பிரிவு

அவளைப் பிரிந்திருப்பதின் வேதனையை  அறிந்தவன் அவன் மட்டுமே. இதைக் கல்லூரிக் காலத்துக் காதலன்கள் எவரும் உணராது போனதில்லை. ரெண்டு காய்ந்த ரொட்டித் துண்டுகளுக்கு இடையே இருக்கிற சுவையான பழ  ஜாம்  மாதிரி இருக்கிறது  இந்த சனி ஞாயிறு விடுமுறைக்கும் அடுத்த சனி  ஞாயிறு நடுவில் உள்ள கல்லூரி வேலை நாட்கள் அவனுக்கு.

அடுத்த பாடல்: உன்னைச் சரணடைந்தேன் உன்னுள்ளே நான் கலந்தேன் 

உன்னைச்  சரணடைந்தேன்

உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உறைந்திருந்தென்
உன்னுள்ளே நான் கரைந்தேன்
கண்கள் இமையை விட்டு உன்னையே நம்பி நிற்க
ஸ்வாசம் காற்றை விட்டு உன்னையே தேடி செல்ல
தாயாக மாறிப் போனாயே
வேராகத் தாங்கி நின்றாயே
அயராது ஒடும் நெஞ்சின் இசையாக நீ இருக்க
கண்ணீர் ஊறும் ஆழத்திலே காலமெல்லாம் உப்பைப் போலே
உந்தன் உள்ளே நான் இருப்பேனே

உன்னைச் சரணடைந்தேன்
உன்னுள்ளே நான்பிறந்தேன்

தினம்தொறும் சாமிகிட்ட
தீராத ஆயுள் கேட்டேன்
நீ பார்க்கும் பார்வை போல
பூவெல்லாம் பூக்க கேட்டேன்
நீ நடக்கும் நிலத்தினிலும் நிம்மதி வளர்த்திடுவேன்
நீ அருந்தும் நீரினிலும் தாய்மையைத் தந்திடுவேன்
உன் உலகத்தின் மீது நான் மழை ஆகிறேன்
உன் விருப்பங்கள் மீது நான் நதி ஆகிறேன்

உன்னைச் சரணடைந்தேன்
உன்னுள்ளே நான்பிறந்தேன்
என்னில் உறைந்திருந்தென்
உன்னுள்ளே நான் கரைந்தேன்
காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்
வாழும் வாழ்க்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடை காக்கும் தாய்க்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டைக் கூட்டின் ஓடுடைத்து
முட்டி மோதும் குஞ்சைப் போல தினமும் புதிதாய் நான் பிறப்பேன்

திருமணம் முடிந்தது, தாய் தந்தையரைப் பிரிந்து அவனுக்கு  இவள் தாயாய், இவளுக்கு அவன் தந்தையாய் வாழ்கிற வாழ்வைச் சொல்லும் பாடல்.

இந்தப் பாடலில் ‘காதல் என்னும் சொல்லில் காதலே இல்லை என்பேன்‘ என்று ஒரு வரி.  காதல் என்பது வார்த்தைகளில் இல்லை. வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது என்பது  புரிந்து விட்ட பிறகு அவனுக்குத் தோன்றுகிற எண்ணம் இது. எத்தனயோ ஆயிரம் சொற்கள் இருக்கிற ஒரு மொழியில், தன் அன்பைச் சரிவர விளக்க ஒரு தமிழ்ச் சொல் கிடைக்காது தடுமாறுகிற  கணம் அது. சொற்களற்ற மவுனத்தில் கூட காதலைச் சொல்ல முடியும். ஆனால் இருப்பதிலேயே சிறந்த வழி காதலாய் வாழ்வதுதான் என்கிறது இப்பாடல்.

ஒரு பாடலைத் துளியும் சிதையாது காட்சிப்படுத்துவதில்தான் இயக்குனரின் திறமை வெளிப்படும். சேரனுக்கு அது கை வந்த கலை.  முதல் பாடலில் காதலில் தவிக்கும் ஒரு காதலனாய் , அடுத்த பாடலில் ஒரு கணவனாய், ஒரு தப்பனாய், வாழ்வின் பொருள் உணர்ந்து கொண்டவனாய், காதலின் எல்லாப் பரிமாணங்களையும் புரிந்தவனாய்த் தன்  கதாபாத்திரத்தைக் குறைவறச் செய்திருக்கிறார். நல்ல பாடல், கேட்டு/பார்த்து  மகிழுங்கள்.