கண்கள் நீயே..காற்றும் நீயே…..!

வணக்கம்.
இசைப்பா-வில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வு இப்பாடலுக்குதான் நிகழ்ந்துள்ளது. ஒரே பாடலை பல பங்களிப்பாளர்கள் பதிந்து வைத்தது இதுவே முதல் முறை. எனவே அனைத்து பதிவுகளையும் ஒருங்கிணைத்து இங்கே தருகிறோம்.
***************
நீண்ட நாட்களுக்கு பின் நான் எழுதும் பதிவு. இது என் அம்மாவை நினைத்து எழுதுவது.  தமிழில் பல தாலாட்டு ஆண் கவிஞர்களால்  எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜ வாழ்வில் தாலாட்டு தாய்க்கு உரியது. முதன் முதலாக பெண் கவிஞரால் எழுதப்பட்ட தாலாட்டுப்பாடல்  இதுவே .

உணர்வுகளை உணர்ந்து கொள்ள தாயை தவிர வேறு எவரும் இந்த உலகில் இல்லை. ஒரு தாய்க்கு தன் குழந்தையே உலகமாகிறது – அக்குழந்தையின் பிறப்புக்கு பின். ஒரு தாய் தான் தன் குழந்தையை எல்லாவுமாய் பாவிக்கிறாள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்.

-குழலினி

***********

இந்த பாடலை பாடியது சித்தாரா அவர்கள் என்று இன்றுதான் தெரிய வந்தது. சமீபத்தில் அவரை இசைப்பாவில் ‘அம்மாடி நான்..'(ஜெ.சி.டேனியல்) பாடல் மூலம் அறிமுகம் செய்ய இருந்தோம். இருந்தும் இதுவும் ஒரு இனிய பாடல், வளமான குரல். சேர நாட்டு பெண் அவுங்க. உணர்வுகளை, ஏக்கங்களை பளிச்சென நெஞ்சில் பதிய வைக்கும் அவரின் குரலில் தாயின் உள்மனதின் ஈரம் வடிகிறது. தெரிகிறது.

இப்பாடலுக்கு 2012ஆம் ஆண்டின் சிறந்த பாடல் – என்று விஜய் டிவி நிறுவனத்தின் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய தாமரை (காணொளி). தமிழ் மொழி வார்த்தைகளை மட்டுமே கொண்டு, ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தம் இல்லாமல், எழுதும் கவிஞர் தாமரை என பலருக்கு தெரியாது.

-ஓஜஸ்

****************

மிக எதேச்சையாக, இப்படத்தின் பாடல்கள் வெளிவந்த சில நாட்களிலேயே எல்லா பாடல்களையும், கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என் தோழர் ஒருவர் நடுநிசியில் உறக்கம் வராமல் தவித்திருக்கிறார். மொபைலில் ஏற்றி வைத்த பாடல்களை துழாவியிருக்கிறார். இப்படம் புதிதாக இருக்கவே, கண்கள் நீயே பாடலை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.கேட்ட மாத்திரத்தில் பாடலுக்குள் வீழ்ந்த அவர் 2-3 முறை கேட்டுவிட்டு தானாகவே உறங்கி விட்டார். மறுநாள் எங்களிடமும் ”என்னா பாட்டுடா!” என வியந்து அதைப் பகிர்ந்து பல தோழர்களுக்கும், இப்பாடலை ரசிக்க தூண்டினார். உங்களுக்கும் உறக்கம் வராது தவிக்கும் தருணம் கிட்டினால் முயன்று பாருங்களேன்!

குழந்தையை மையப்படுத்தி பாடும் தாயின் உணர்வுகளை அப்படியே எழுத்துக்குள், பாட்டுக்குள் வைத்ததுதான் பாடலின் வெற்றி. இவ்வரியை வாசிக்கையிலே எத்துணை இன்பம்.

முகம்  வெள்ளைத்  தாள்.
அதில்  முத்தத்தால்,
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே!
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்,
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே!

பாடலுக்குள்ளும் அழகாக அமரும் மற்ற வரிகளும் அருமையோ அருமை!

-தமிழ்

*******

அன்னையின் பாசமும், தன் குழந்தையை வளர்க்கும் துணிவுடனும் தன் வாழ்வையை அழகாக எடுத்துரைக்கும் தாமரை அவர்களின் வரிகள் இசைக்கும் வேளைகளில் நமக்கும் தாய்மை உணர்வை ஏற்ப்படுத்தும் வரிகள். வாழ்வில் தாயின் நேசம் அது மனிதனை முழுமை படுத்துவதாக அமைகிறது. அவளின் ஒவ்வொரு அசைவிலும் தன் பிள்ளை எதிர் காண இருக்கும் காலம் பற்றி அவள் சிந்திப்பதையும் பாடல் வரிகளின் வடிவில் அருமையாக எடுத்துரைக்கிறார் பாடல் ஆசிரியர்.சில சமயங்களில் பிள்ளைகளால் தாய்க்கு தரப்படும் நேசம் அவளின் தவம் புரியா வரமாக அமைகிறது. பிள்ளையின் கண்களில் பாசமும் பெற்றவள் கண்ணில் நேசமும் அவர்களுக்கிடையில் இசையான வாழ்க்கை சுழற்சி அழகாக வரிகளாக உருப்பெற்றுள்ளது.
-பவானி
***********

thamaraiவாழ்த்துகள் கவிதாயினி தாமரை.

ஒரே ஒரு குறைதான்! பாடல் வரிகளின் முழுத் தாக்கமும் காட்சிகளில் இல்லை என எண்ணுகிறோம். உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் பாடல் வரிகளின் ஆழத்தை உணருங்கள். இசையோடு இணையுங்கள்.

************

பாடல் : கண்கள் நீயே காற்றும் நீயே
படம் : முப்பொழுதும் உன் கற்பனையில் 
பாடலாசிரியர் : தாமரை
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர் : சித்தாரா

கண்கள்  நீயே..காற்றும்  நீயே

தூணும்  நீ ..துரும்பில் நீ

வண்ணம்  நீயே ..வானும்  நீயே

ஊனும் நீ ..உயிரும்  நீ

பல  நாள்  கனவே
ஒரு  நாள் நனவே
ஏக்கங்கள்  தீர்த்தாயே
இடையில்  பிழிந்து  உன்னை  நான்  எடுத்தேன்
நான் தான்  நீ ..வேறில்லை
முகம்  வெள்ளைத்  தாள்
அதில்  முத்தத்தால்
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே

(கண்கள்  நீயே..காற்றும்  நீயே)

இந்த  நிமிடம்  நீயும்  வளர்ந்து
என்னை  தாங்க  ஏங்கினேன்
அடுத்த  கணமே  குழந்தையாக
என்றும்  இருக்க  வேண்டினேன்
தோளில்  ஆடும்  சேலை
தொட்டில்  தான்  பாதி  வேலை
சுவர்  மீது  கிறுக்கிடும்போது
ரவிவர்மன்  நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன்
ஈடில்லா  என்  மகன்

எனைத்  தள்ளும்  முன்
குழி  கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன்  கண்ணே
எனை கிள்ளும் முன்
விரல்  மெத்தைக்குள்
என் முத்தத்தை  நான் தந்தேன்  கண்ணே

என்னை  விட்டு  இரண்டு  எட்டு
தள்ளிப்  போனால்  தவிக்கிறேன்
மீண்டும்  உன்னை  அள்ளி  எடுத்து
கருவில்  வைக்க  நினைக்கிறேன்

போகும்  பாதை  நீளம்
கூரையாய்  நீல  வானம்
பல  நூறு  மொழிகளில்  பேசும்
முதல்  மேதை  நீ
பசி  என்றால்  தாயிடம்  தேடும்
மானிட  மர்மம்  நீ
நான்  கொள்ளும்  கர்வம்  நீ

கடல்  ஐந்தாறு
மலை ஐநூறு
இவை  தாண்டித்  தானே
பெற்றேன்  உன்னை
உடல்  செவ்வாது  பிணி  ஒவ்வாது
பல  நூறாண்டு  நீ ஆள்வாய் மண்ணை

(கண்கள்  நீயே..காற்றும்  நீயே)

இசைப்பா+

தமிழ்த் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தான்!

கருத்துக்கள் மற்றும் திருத்தங்களை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம்.