கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி

நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa
நா முத்துகுமார் அஞ்சலி

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

இசைப்பா+

நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்

  1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்

  2. அழகே… அழகே… – சைவம்

மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்

na muthukumar isaipaa banner 2
நா மு பாடல்கள்

 

தேவனின் கோவில்

இசை வணக்கம்.

பாடல் குறித்து எழுத்தாளர் சுகா சொன்னது முதலில்:

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

 

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’.

கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா.

பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின்முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள்.

ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

மேலும்: http://solvanam.com/?p=22579

Ilayarajaa ang gangaiamaran

பாடல்: தேவனின் கோவில்
படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

ப்ரேமம் ப்ரேமாதிப் ப்ரேமப்பிரியம் ப்ரேம வஷ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதிப் ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீத்திவஷ்ய ப்ரீத்தம்
ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா மமஜீவனம் மமஜீவனம் மமஜீவனம்
மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமஜீவிதம் மமஜீவிதம் மமஜீவிதம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!

தேவனின் கோவில் மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே?
இன்று என் ஜீவன் தேயுதே!
என் மனம் ஏனோ சாயுதே!

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி!

இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி!

(தேவனின் கோவில்)

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர்க் கண்ணீர்க் காதலி!

(தேவனின் கோவில்)

இன்னுமொரு இனிய பாடலோடு மீண்டும் இணைவோம்.

கண்ணாம்பூச்சி ஏனடா…

இசை வணக்கம்.

சினிமா பாடல் தான் என்றாலும் சில பாடல்கள் மிகுந்த சிறப்புடன் அமைகின்றன. கண்ணன் மீதும் கந்தன் மீதும் தான் அதிகமாக தமிழ் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. வைரமுத்து வரிகளில் ஒரு கண்ணன் காதல் ரசவாதம் இது. கர்நாடக சங்கீதத்தை ரசிக்க கூடிய எவரும் இந்த பாடல் ஊத்துக்காடு வேங்கடய்யர் எழுதியதா ? என்றே கேட்கும் அளவுக்கு சிறப்பான வரிகள் மற்றும் இசை. இந்த பாடல் ஏதேனும் ராகத்தில் அமைந்திருக்கக் கூடும் என் நம்புகிறேன் தெரிந்தால் சொல்லுங்கள்.

Krishna with gopis 7படத்தில் வரும் ஒரு விழாவில் நாயகனும் நாயகியும் ஒளிந்து ஒளிந்து பார்க்கும் போது வரும் பாடலிது. ஆனாலும் இயக்குனர் இப்படி சொல்லிப் பாடல் வாங்கி இருக்கலாம் என தோன்றுகிறது : கொலுவில் பாடும் நாயகியை, மறைந்திருந்து பார்க்கும் காதலனுக்கு பாடப்படுவது.

பிருந்தாவனத்து கோபிகைகள் பாடியது போல உள்ளது இப்பா : கண்ணனை எங்கெங்கும் தேடி, இதயத்தில் காணுதல் ! ஏன் என்னை உன் நினைவால் படுத்துகிறாய் – என வினவுதல், என்னை ஏன் இன்னும் வந்து சேரவில்லை என விசனப்பட்டு வசைப்பாடுதல், நீ வந்து என் உயிரை தீண்டிக் காப்பாயோ என இறைஞ்சுதல்… என கோபாலனின் திவ்ய வதனமும் வனப்பும் தலைக்கிறுக்கேறிய கோதை பாடுவது போலவே எனக்கு தோன்றுகிறது.

சித்திராவின் ‘காந்தக்’ குரல் என்றுதான் சொல்ல வேண்டும், கண்ணனைக் காணாத ஏக்கம் குரலில் இழைந்தோடுகிறது :
வான்மழை விழும் போது
மலை கொண்டு காத்தாய் ! – வரிகளில் மிகவும் செறிவான உச்சரிப்பு, ஏற்ற இறக்கங்கள் மற்றும் சில மென்மையான அசைவுகள். இசை மிகப் பெரும்பலம். கோபிகைகளின் ஒய்யார நடனத்துக்கு ஏற்ற ஜதிகள். முதல் Interludeலில் வரும் வயலினும் (யார் வாசித்தது ?), இரண்டாவதில் வரும் வீணையும்… யமுனை பாய்வதைப் போல இனிமையாக மெய்மறக்க செய்கிறது. கண்ணன் இதழ்களின் மன்னன் போலும்…. தேடித் தேடி கடைசியில் பார்க்க…
இறுதியில் உன்னைக்கேட்டேன்
இருதயப் பூவில் கண்டேன் – வைரமுத்து அவர்களின் கவிமிகு கண்கள், நேர்த்தி. புலவருக்கு புல்லாங்குழல் மீது என்ன கோவமோ, வரிகளில் இல்லாவிடிலும். ரஹ்மான் விடை சொல்லி உள்ளார். படமாக்கப்பட்ட அரங்கமெங்கும் கண்ணன் வாசம் : மயில் பீலி, புல்லாங்குழல் என அழகாக இருக்கும்.

பாடல் : கண்ணாம்பூச்சி ஏனடா
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடலாசிரியர் :  வைரமுத்து
இசை: எ.ஆர்.ரஹ்மான்
பாடகர்கள் : சித்ரா

கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?

கண்ணாம்பூச்சி ஏனடா
என் கண்ணா ?
நான் கண்ணாடிப்
பொருள் போலடா

கண்ணாம்பூச்சி ஏனடா…

அந்த நதியின் கரையை
நான் கேட்டேன்
அந்த காற்றை
நிறுத்தியும் கேட்டேன்

வான்வெளியைக் கேட்டேன்
விடையேயில்லை
இறுதியில் உன்னைக்கேட்டேன்
இருதயப் பூவில் கண்டேன்

கண்ணாம்பூச்சி ஏனடா…

என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா ?
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா ?
நெஞ்சின் அலை உறங்காதோ ?

உன் இதழ் கொண்டு வாய்
மூட வா என் கண்ணா…
உன் இமைக் கொண்டு விழி
மூட வா என் கண்ணா…
உன் உடல் தான்
என் உடையல்லவா….!

பாற்கடலில் ஆடிய பின்னும்,
உன் வண்ணம் மாறவில்லை இன்னும்.

என் நெஞ்சில் கூடியே
நிறம் மாறவா.
என் உயிரில் நீ
வந்து சேர்க்க
உதடுகள் ஈரமாய் வாழ்க !
கலந்திட வா….

கண்ணாம்பூச்சி ஏனடா…

வான்மழை விழும் போது
மலை கொண்டு காத்தாய் !
கண்மழை விழும் போது
எதில் என்னைக் காப்பாய் ?

பூவின் கண்ணீரை ரசிப்பாய்.
நான் என்ன பெண்ணில்லையா
என் கண்ணா ?
அதை நீ காண
கண்ணில்லையா ?
உன் கனவுகளில்
நான் இல்லையா ?

தினம் ஊசலாடியது
எம் மனசு.
அட ஊமை யல்ல
என் கொலுசு.

என் உள் மூச்சிலே,
உயிர் நீங்குதே !
என் உயிர் துடிக்காமலே
காப்பது உன் தீண்டலே !
உயிர் தர வா….

கண்ணாம்பூச்சி ஏனடா………….

 

இசைப்பா +
கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் ஆங்கிலத்திலும் (A drop in Search of the Ocean: Best Poems of Vairamuthu) ஹிந்தியிலும் (Bindu Sindhu Ki Oar), மொழியாக்கம் செய்து நூல்களாக வெளிவந்துள்ளன.

இன்னுமொரு இனிய பாடலில் மீண்டும் இணைவோம். கருத்துகள், விருப்பங்கள், இப்பாடலின் ராக விடைகள் வரவேற்கபடுகின்றன.

புல்வெளி புல்வெளி தன்னில்…

இசை வணக்கம்.
—  —பூமியின் அழகினை எடுத்துரைக்கும் பல அழகில் இயற்கையின் விந்தை ஆச்சரியமே !  வைரமுத்து அவர்களின் வரிகள் இயற்கையின் அழகையும் சொற்களின் நடையையும் பிணைத்து ஒன்றாய் புலப்படுகிறது.புல்லின் மீது பனித்துளியின் வருணனையைக் கொண்டு அழகுற  வருணித்தும் இன்னிசை பாடலாக அழகாக அமைத்துள்ளது .
devaஇசைப்பாவில் இந்தப்பாடலின் மூலம் இசையமைப்பாளர் தேவா அவர்கள் முதல்முறையாக இணைகிறார். ஐம்பதை நெருங்கும் இசைப்பா பாடல்களில் இவ்வளவு தாமதமாக இணைய வைத்தமைக்கு முதலில் வருத்தங்கள். இளையராஜா அவர்களின் இசைப்பிரவாகத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கும் இடையே ஒரு இடைவெளியை உண்டாக்கினால், அதில் தேவாவின் பெயரையே அழுத்த்மாக நம்மால் பதிய இயலும். தனக்கென தனி பாணியில் ரசிகர்கள் விரும்பும் வகையில் பாடல்கள் கொடுத்த தேவாவின் முற்றிலும் மாறுபட்ட ஒரு மெலடிப் பாடல் இன்று.
படம்: ஆசை
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சித்ரா
**************************************
புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா! – அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்க் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா?
பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா…
**************
சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலநூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற பூக்கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூ வனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள் – எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
********
துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூ வனமே எந்தன் மனம்
 புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள் – எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்
 இசைப்பா +
தேவா  தற்போது  தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராகப் பணிபுரிகிறார்.
 கருத்துக்கள் மற்றும் திருத்தங்களை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம். இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைகிறோம்.
படம் உதவி:  http://radiospathy.com/
நன்றி.

மழை மேக வண்ணா…

இசை வணக்கம்

2013- தமிழ் இசைக்கு ஏனோ  பெரும் இழப்புகளை அள்ளி வீசுகிறது. அதற்காக நாம் குறைப்படுவது உசிதம் அல்ல. காற்றில் கலந்த மேதைகளின் பாடல்களும், இசையும் நம்மை காப்பாற்றும், ஆறுதல் தரும் ஆலமாரமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி செலுத்தவும், இரங்கல் தெரிவிக்கவும், பெருமை பேசவும் இதுவே சரியான தருணமும் கூட. இச்சிறு தொண்டில் இசைப்பா இயங்கி வருவதில் மகிழ்ச்சியே.

வாலிவாலி : தலைமுறை தாண்டி எழுதிய கவிஞர். எழுத்தில் அவருக்கு பல முகங்கள் உண்டு. அனைத்து வகையான பாடல்களையும் எழுதியுள்ளார். அவரது பக்தி முகம் பலருக்கு தெரியும், ஆனால் அதன் விஸ்வரூபம் நாம் சரியாக அறியோம்.

2004-ம் ஆண்டில் வெளிவந்த ‘தேசம்’ படப்பாடல் இதோ உங்கள் செவிகளுக்கு. இப்படி ஒரு படம் வந்ததா ?? என்று போன மாதம் வரை நானும் கேட்டிருப்பேன். “ஸ்வதேஷ்” என்ற ஹிந்தி படத்தின், தமிழ் மொழியாக்க வடிவம் தான் இந்த “தேசம்”. பாடல்களை முதல் முறை கேட்டவுடனேயே அசந்து போனேன்… குறிப்பாக இங்கு உள்ள பாடலை ட்விட்டர்-ரில் பகிர்ந்து மகிழ்தேன். வைரமுத்து தான் இதை எழுதியிருப்பார் என்று நம்பினேன். கரணாம் : ARRருக்கு அதிகமாக மொழி மாற்று பாடல்கள் எழுதுவது அவரே. இருந்தும் ஒரு சந்தேகம். இணையத்தில் தேடினேன். பளிச்சென்று வாலி என்று விடை வந்தது. வாலியையும், பா விஜய்யையும் இப்படி தப்பாக எடைப்போடுவது என் வாடிக்கை.

கிராமத்தில் நடக்கும் தசரா பண்டிகை, அந்த விழாவில் அரங்கேறும் ராமாயண தெருக்கூத்து  பாடல். அசோக வனத்தில் இருக்கு சீதை பாடும் வரிகள், என்றுமே மனதை உருக்கும் சோக ரசம். திண்ணமான நம்பிக்கையுடன் சீதை ராகவனை எதிர்நோக்க… ராவணன் வந்து அவளை நிர்பந்தம் செய்கிறான். இறுதியில் ராமர் வந்து சேர்கிறார். ஜெயமும் அவர் கூட வருகிறது.

மிகவும் ரம்மியமான வரிகள். நாலாயிரம் படித்தவருக்கு, இது எல்லாம் இயல்பாக வந்து அமைகிறது. கவிதையை நான் மேலும் சிலாகிக்க போவதில்லை. (என்னை போல நீங்களும்) அனுபவியுங்கள் : வாலியின் கவி மணம் சேர, சித்ராவின் மதுர குரல் வளம் குழைய, ARRரின் இசை மேளம் கொட்ட, பாட்டு படு பிரமாதம். #IAmHooked கவிஞர் வாலி ஒரு சகாப்தம்

படம்: தேசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சித்ரா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வாலி

(கோதை கதறல்)

மழை மேக வண்ணா
உன் வைதேகி இங்கே.
பூவை மன்றாட அன்பே
உன் அருள் எங்கே ?

நா விழும் வார்த்தையோ
ரகுபதி ராமனன்றோ…
பூஜை மனம் தான் – கூவி
போற்றும் ஜெய ராமனன்றோ…

ராம நாமம் ஜெபித்தென்றும்
உள்ளமிது தேம்பிடாதோ…
ராம நாமம் ஜெபிதெங்கும்
உள்ளமிது ராமா…

பல ராட்ஷச நங்கை
இனமேவிய (இ)லங்கை
நெஞ்சம் தினமுறங்காதோ?
உன்னை அழைக்காதோ?
தூண்டில் புழுவாய்
மங்கை துடித்தாள்

(மழை மேக….)

(இராவணன் வருகிறான்)

நான்முகன் பேரன்
இலங்கை சூரன்
வந்தான் இங்கே!
கண்கள் ரெண்டில்
கனலைப் பார்
காட்டு தீயாக!

(இராவணன் கூற்று)

உன் ஜபம் தானோ
ராம நாமம்
உன் கதி தானோ
ராம நாமமும்..

ராம நாமம் தான்
ரக்ஷிக்கும் எண்ணம்
ஏனடி கண்ணே ? –

சீதா…….. சீதா !

புவியில் யாவும்
என் ஆட்சி !
என் உயிர் பெண்ணே.

(சீதையின் கற்பு வரிகள்)

என்னுடைய ஒரு சொல்லே
உன்னை தீர்க்கும் – நீ
எண்ணிடுக இலங்கேசா!
தசரதன் மகன் வில்லுக்கு
இழுக்காகும் – அவன்
அயோத்தி மகராசா!

மலரினும் மென்மை
மழலையின் தன்மை
வரிவில்லின் திண்மை
வெண்ணிலவின் தண்மை

எவர் வந்து களங்கம்
விளைத்தாலும்,
பெரும் எரிமலை
பெண்மையடா !

(ராகவன் வரும் வர்ணனை)

பத்து தலைகளை தீர்க்க,
திரு மார்புகள் ஆக்க,
ஸ்ரீ ராஜா ராம் – இங்கு
அம்பிடலாம் – அந்த
இளையோன் லக்ஷ்மணன்
அண்ணன் பின்னே !

மழை மேக…

(இராவணன் இறுமாப்பு)

ராமன் மேல் ஆசை எதற்கு
ராமன் பேர் தான் ஆதாரமோ
உன் உயிர்காதல் அவன்தான்
ஊர் மெச்சும் வீரனோ?

என்னை அழிக்க ஆகுமா ? – அடி
நான் அலை பொங்கும் கடல் !
நான் மனம் போல் கொஞ்சம் மானே,
ராமனா என்னை மாய்ப்பது?

(ராமனின் உருகும் கோதை)

ராமன் எனது மனதின் மன்னன்,
ராமனே இரு கண்மணி,
ராமன் பேரே ஏத்தும் பெண்மான்,
ராமன் என் ஜீவன் என்பேன் !

ராமன் தழுவ மஞ்சள் மேனி
ராமனே எந்தன் சுவாசமே!
ராமனல்லால் ஷேமம் ஏது?
ராமன் தான் இங்கு யாவுமே!

(கூத்தின் கருத்தை சொல்லும் கவி)

ஓ ஓ ஓ
நன்மை என்னும் நல்ல மனதில்,
நின்றான் பார் ராமனே.
தீமையற்ற நெஞ்செல்லாமே,
பார்க்கலாமே ராமனை.

ராமன் பண்பை சொல்கிறேன்
எல்லோருக்கும் பிரிய நண்பனே
தீயசெயல் தான் பாவ ராவணன்
ராமன் என்றால் பண்பு தான்

ராமன் என்றால் பண்பு தான்
ராமன் பேரே பண்பு தான்
ராமன் சீரே பண்பு தான்
ராமன் பேரே பண்பு தான்

ராமன் சொல் தான் கனிமொழி
ராமன் தானே இருகண் விழி

மாற்று ராவண குணமனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்
மாற்று ராவண குணமனைத்தும்
ராமன் உந்தன் பார்வையில்

(ராகவன் விஜயம், வெற்றி)

ஒ ஒ ஒ ஓ ஓ
அ அ அ ஆ ஆ
ஒ ஒ ஒ ஓ ஓ
அ அ அ ஆ ஆ
ஒ ஒ ஒ ஓ ஓ

(மழை மேக…)

(இறுதி யுத்தம்)

ராஜா ராமனும் வந்தார்
சீதா ராமனும் வந்தார்
ராஜா ராமசந்திரன் வந்தார்
ஸ்ரீ ராமசந்திரன் வந்தார்

ராமனும் வந்தார்
ராஜா ராமனும் வந்தார்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தார்…

(இராவண வதம்)

ராஜா ராமனும் வந்தார்
சீதா ராமனும் வந்தார்
ராஜா ராமசந்திரன் வந்தார்
ஸ்ரீ ராமசந்திரன் வந்தார்

ராமனும் வந்தார்
ராஜா ராமனும் வந்தார்
ஸ்ரீ ராமச்சந்திரன் வந்தார்…
ஹோ…..!

‼♪♫►->>>>>பாடலை கேட்க பதிவிறக்க<<<<<-◄♫♪‼

பாடலின் ஹிந்தி வீடியோ

பாடலை முதற்கொண்டு, அடம் பிடித்து மூன்று மணி நேரம் ஹிந்தி subtitle “ஸ்வதேஷ்” படம் பார்த்து முடித்தேன். பாடலின் மிகப்பெரும் வெற்றிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் இந்த பாடல் பிரபலம் அடையாத காரணம் தெரியவில்லை. ஒரு முறை கேட்டு விட்டு சொல்லுங்கள், உங்கள் கருத்தை. அன்று ராமனை உணர்ந்த வாலி இன்று பிராட்டியின் அருளும் பெற்று, அவள் கதையையும் கவி பாடி விட்டான்.

இசைப்பா+

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை,
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை…
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம்,
தவறாமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
– கவிஞர் வாலி

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540

ஒவ்வொரு பூக்களுமே…!

 இனிய இசை வணக்கங்கள்.

இன்று இப்பாடல் வெளிவரும் என்று நேற்றிரவு 12 மணிவரை திட்டமில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களாக இசைப்பாவில் புதிய பதிவுகள் குறைந்துவிட்டன. ஆனபோதிலும் வருகைகள் குறையவில்லை. எனவே நாங்கள் சிறப்பாக இயங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முடிந்தமட்டும் நல்ல பாடல்களை சுவை குறையாமல் தர விருப்பம். எனவே இந்த பாடலும் உங்கள் மனம் கவர்ந்த பாடல்தான்.

பாடலின் முதல்வரியைப் பார்த்தவுடனே ஈர்க்கிற வல்லமை பொருந்திய பாடல்களுள் ஒன்று. நம்பிக்கையான வரிகளைக் கொண்டு, கேட்டவுடனே இழுக்கும் மந்திரச் சொற்கள் நிரம்பிய இப்பாடலை எழுதியவர் கவிஞர் பா.விஜய்.

தனது தன்னம்பிக்கை வரிகளாலேயே இப்பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் கவிஞர். அதேபோல் சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரல் இப்பாடலுக்கு அத்தனை பாந்தமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கான இசையமைப்பாளர் பரத்வாஜ். பாடலுக்கான உறுத்தாத எளிய நேர்த்தியான  இசை இன்னொரு தூணாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள் காட்டுவதென்றால் இப்பாடலின் பல வரிகளை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இது பலருக்கும் அறிமுகமான பாடல்தான். பாடலின் சுவையை உணருங்கள். 

படம்: ஆட்டோகிராப்

வரிகள்-பா.விஜய்

பாடியவர்-சித்ரா 

இசை- பரத்வாஜ்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விட

bharathwaj chitra pavijay

இப்பாடல் பா.விஜய் அவர்களுக்கும், சித்ரா அவர்களுக்கும் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது (2004). இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டது. இப்பாடல் மூலம் இவர்கள் மூவரும் இசைப்பாவிலும் அறிமுகம் ஆகிறார்கள்.

உங்கள் கருத்துக்களும், பங்களிப்புகளும் எப்போதும்போல வரவேற்கப்படுகின்றன. தளத்தை நண்பர்களிடம் பகிருங்கள். குறைகளை, தவறுகளை பதிவு செய்யுங்கள். மாற்றங்களுக்கு தயாராய் இருக்கிறோம்.