நெஞ்சே நெஞ்சே…. – யான்

இவர் தமிழ் உச்சரிப்பை பாராட்டாதவர்களே இல்லை. 90களில், பலபல மெலோடிகளின் சொந்தக்காரர் இவர்: உன்னி கிருஷ்ணன். இப்பொழுது யான் என்னும் படத்தில் ஒரு சோகமான காதல் கீதத்தில் பாடியுள்ளார். தொழிநுட்ப வளர்ச்சியா, அல்லது இவரது தனித்துவமான நேர்த்தியா என்று தெரியவில்லை, குரல் இன்னும் அப்படியே இருக்கிறது, ஈர்க்கிறது. பாந்தமான தாலாட்டு போல, அமைந்துள்ள பாடல். வரிகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுத்து, குரலில் உணர்ச்சியை குழைத்து, இசையை குறைத்து, வெகு சிறப்பாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கேபா அவர்களின் கித்தார் எப்பொழுதும் போல் விளையாடியுள்ளது. இன்னும் ஒரு இனிய பாடல் நம்முடன் சேர்க்கிறது, காற்றோடு கனக்கிறது.


படம்: யான்
பாடல்: நெஞ்சே நெஞ்சே
பாடலாசிரியர்: கபிலன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சின்மயி

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

தூரம் நின்று நீ
என்னை கொல்லாதே !
வேரும் பூவும்
வேறென்று சொல்லாத !

காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை
அறிவேனோ மனமே ?

உன்னை மறந்தாபோனேன் ?
இறந்தா போனேன் ?
வருவேன் ஓர் தினமே !

நெஞ்சே நெஞ்சே…

பூவை தொட்டு வந்தாலும்
கையில் வாசம்
விட்டு போகாதே !

உந்தன் மனம் தான்
மறப்பேனோ ?
அதை மறந்தால்
இறப்பேனோ ?

கண்ணை மூடி
தூங்க வேண்டும்
ஆடு பெண்ணை
அழகிய லாலி

காதல் கண்கள்
தூங்கும் போது
பூவே உந்தன்
புடவையே தூளி

என்னை விட்டு நான்
போனேன் தன்னாலே
கண்ணீரில் மீனானேன்
உன்னாலே !

பேச வழியேஇல்லை
மொழியே இல்லை
தவியாய் நான்
தவித்தேன்…

காதல் கனவே
உன்னை முழுதாய்
காண….
பிறையாய் நான்
இளைத்தேனே !

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

இன்னமொரு பாடலுடன் இனிதே சந்திப்போம்.

போய் வரவா?

இசை வணக்கம்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு இசைப்பாவில் பாடல்கள் வெளிவரத் துவங்குகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவிஞர் பா.விஜய்-யின் பாடல் ஒன்றை இங்கே பகிர்கிறோம். இனி புதிய அறிமுகங்களாக இசைப்பாவில் பாடல்களைக் கொடுக்கவும் திட்டம். இப்போது இப்பாடல் குறித்து..

பாடல் இடம்பெற்ற படம் துப்பாக்கி. இப்படம் சென்ற ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளிவந்து வசூலை வெடித்துத் தள்ளியது. கடந்த ஆண்டின் இமாலய வெற்றிப் படங்களில் இப்படம் முதன்மையானதாகவும் மாறியது. இப்படத்தின் வெற்றிக்கு சில பாடல்களும் காரணம் என்றாலும், இப்பாடல் அதிகம் அறியப்படாத ஒன்று. படத்தின் இறுதிக்காட்சிக்குப் பிறகு ஒலிக்கும் பாடல் என்பதாலும், கூகுள் புயலில் கவனிக்கப்படாத பாடலாக மாறிவிட்டதாலும் இப்பாடல் அவ்வலவு தூரம் பேசப்படவில்லை. இருப்பினும் வலி சொல்லும் பாடல் இது.

தேசத்தின் பாதுகாப்பிற்காக பாடுபடும் இராணுவ வீரன் குறித்த பாடல். வருடம் ஒருமுறை விடுப்பில் வந்து திரும்பும் இராணுவ வீரன் பணிக்குத் திரும்புகையில் பாடுவதைப் போலான வரிகள் என்றாலும், இராணுவ வீரனின் உணர்வுகள் நமக்கு அப்படியே எடுத்துக்காட்டுவது போலான உணர்வுகளைத் தரும் பாடல். pavijayஇசைப்பாவில் இருந்தும் இராணுவ வீரர்களுக்கான சமர்ப்பணமாக இப்பாடலை எடுத்துக் கொள்ளலாம்.  ஹாரிஸ் ஜெயராஜ்+பா.விஜய் கூட்டணியில் விளைந்த பிற பாடல்கள் அனைத்துமே ஹிட் ரகம் என்றாலும், இப்பாடல் தனித்துவமானது. அதிலும் பாடலின் வலி உணர்ந்து இசையமைப்பாளர் அடக்கி வாசித்திருப்பதாக உணர முடிகிறது.

இரவு நேரங்களில் கேட்கத் தகுந்த பாடல் இது… வலிகளை உணர்த்தும் வரிகள் என்றாலும், பா.விஜய்க்கே உரித்தான சந்தச்சுவை மாறாமல் பாடல் முழுதும் ஒலிக்கிறது. நீங்களும் இதே உணர்வுகளைப் பெற்றிருந்தால் குறிப்பிடுங்கள்.

பாடல் : போய் வரவா?
படம் : துப்பாக்கி
பாடலாசிரியர் :  பா.விஜய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடகர்கள்: கார்த்திக், சின்மயி 

மெல்ல விடைகொடு விடைகொடு மனமே!
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே!
தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே!
சில அழகிய வலிகளும் தருதே!
போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்

என்னை விட்டுச் செல்லும் உறவுகளே ஓ!
ஓ..ஓ..ஓ..ஓ உயிர் தொட்டுச் செல்லும் உணர்வுகளே!
போய் வரவா?

.நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட கடந்து போகும்
இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே!

காடு மலை செல்லத் துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மூடும்
கைக்குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே!

ஆயினும் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு!
ஆயிரம் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு!
போய் வரவா?

எங்கே மகன் என்று எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத்தருணம் போல் பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா?

நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
அப்பெருமை போல் இவ்வுலகத்தில் வேறு இருக்குமா?

தேசமே…….தேசமே
என் உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்

போரிலே….காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்

போய் வரவா?
(மெல்ல விடை கொடு)

இசைப்பா +

கவிஞர் பா.விஜய் இதுவரை 2000-க்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

இன்னுமொரு இனிய பாடலோடு மீண்டும் விரைவில் இணைவோம்.

காதல் நெருப்பின் நடனம் !

இந்தப் பாடலைத்தான், இந்த தேதியில்தான் போடுவேன் என்று நான் அடம்பிடித்து கேட்டு வாங்கி(!) இடுகிற பதிவு இது என்றுசொன்னால் மிகையாகாது. குறிப்பாக இசைப்பா தொடங்கும் முன்னே தமிழ் தம்பிக்கு சொல்லி விட்டேன்.

இதோ ட்விட்டரில், நேற்றிலிருந்தே காதல் என்பது_________ என சகட்டுமேனிக்கு இட்டு வருகின்றனர். 14-02-13 அன்றுநிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும்! சரி. பாடலுக்கு வருவோம்.

பாடலிலும் அதேதான். காதல் என்பது__________ என கவிஞர் ’கொஞ்சம்’ சொல்லியிருக்கிறார். நமக்கும் படித்தவுடன் ஏதாவதுதோன்றலாம்.

பிரகாஷ முத்து !
பிரகாஷ முத்து !

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு (வெயில்) இசை அமைக்கிறபோது அவர் வயது 18. இப்போது 25. இந்த இடைவெளியில் 27படங்கள் அவர் இசையமைப்பில் வெளிவந்து விட்டன. இதுவே இவருக்கான சிறப்புதான்.ஆப்பிள் ஐபோனில் இவர் பெயரில் App இருக்கிறது. இந்திய இசையமைப்பாளர் ஒருவரது App ஐபோனில் வெளிவந்தது இவருக்குதான். அந்தளவுக்கு இளைஞர்களை ஈர்க்கும் இசை இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இவரின் முதல் பாடலை நா.முத்துக்குமார் எழுதியதாலோ, என்னவோ இந்த கூட்டணி எக்கச்சக்கமான வெற்றிப்பாடல்களை நமக்குத்தந்துள்ளது.இருவரையும் இந்நாளில் அறிமுகம் செய்வதாகத் திட்டம்.

நா.முத்துக்குமாரை முன்னமே அறிமுகம் செய்யாததால் எக்கச்சக்க பாடல்கள் தள்ளிப்போயின. இதில் தம்பிக்கு வேறு கடும் வருத்தம் ! இனி ஒவ்வொன்றாக வெளிவரும்.

பல பாடல்களை கேட்டவுடன், இன்னவர் தான் இதனை எழுதி இருக்க முடியும் என்று ஊகிப்பேன். பா.விஜய் சமாச்சாரத்தில் நூற்றுக்கு நூறு பலிக்கும். அதற்கு அடுத்து ‘கவிஞர்’ வைரமுத்து. இந்த பாடல் வந்ததிலிருந்து, நான் இதனை அடிக்கடி முணுமுணுத்து, ட்வீட் எல்லாம் செய்வேன். பலரிடம் “இந்த பாடலை வைரமுத்து எப்படி எல்லாம் எழுதி இருக்கார் பாருங்க” என்று சில வரிகளை சொல்லி, அவரை சிலாகித்து பேசிய தருணங்கள் பல உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்தது, இந்த வரிகளை வைரத்தால் செதுக்கியது நா.முத்துக்குமார் என்று.

அன்று முதல் அவரின் பெரும் விசிறியாக மாறி விட்டேன். அவர் எழுதிய பாடல்களை தேடித்தேடிக் கேட்டுக்கேட்டு,நண்பர்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்றைய தமிழ் திரைப்பாடல்கள் உலகத்தில், நா.மு. அவர்களுக்கு தனி இடம் உண்டு.ஆண்டுக்கு ஆண்டு அதிக படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் இவர் தான். மெட்டு கொடுத்த சில மணி நேரத்தில் பாடல்களை எழுத வல்லவர். சமீபத்தில் இளையராஜா இசையில் பல பாடல்கள் எழுதி உள்ளார். அதே சமயம் பல புதிய இயக்குனர்களுக்கும், புதிய இசையமைப்பாளர்களுக்கும் எழுதி உள்ளார். வியக்க வேண்டிய விஷயம், எனக்கு தெரிந்து இவருக்கு என்று அடைமொழி எதுவும் இல்லை. வருத்தம் தரும் செய்தி : பல நல்ல கவிதை/உரைநடை புத்தங்களை அவர் எழுதி உள்ளார். பற்பல புத்தக நிறுவனங்களில் இதைப் பற்றி விசாரித்து விட்டேன், அவர்களுக்கு ஏதும் தெரிய வில்லை.

உலகக் காதலுக்கு விளக்கம் கொடுக்கும் இந்த பாடல் உங்களுக்கும் இன்பம் கொடுக்கும் ! இசையால் இன்பம் வளரட்டும் !

படம் : வெயில் 
பாடல் : காதல் நெருப்பின் நடனம் !
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : கார்த்திக், நிதீஷ், சின்மயி  

காதல் நெருப்பின் நடனம் !
உயிரை உருக்கி
தொலையும் பயணம் !
காதல் நீரின் சலனம் !
புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம் !
காதல் மாய உலகம் !
சிலந்தி வலையில்
சிறுத்தை மாட்டும் !
புள்ளி மான்கள் ,
புன்னகை செய்து ,
வேடனை வீழ்த்தும் !

(காதல்…)

கனவுகள் பூக்கின்ற செடியென ,
கண்கள் மாறுதுன்னாலே !
வயதிலும் மனதிலும் விட்டு விட்டு ,
வண்ணம் வழியுது உன்னாலே !

உனது வளையாடும் அழகான கை தீண்டவே ,
தலையில் இலையொன்று விழவேண்டுமே !
குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே ,
உனது கை ரெண்டும் குடையானதே !

உனது முத்தத்தில் நிறம் மாறுதே ,
உடலில் ஒரு கோடி நதி பாயுதே !

(காதல்…)

வானத்தின் மறுபுறம் பறவையாய் ,
நீயும் நானும் போவோமே !
பூமியின் அடிப்புறம் வேர்களாய் ,
நீண்ட தூரம் போவோமே !

கோடி மேகங்கள்
தலை மீது தவழ்ந்தாடுதே ,
காதல் மொழி கேட்டு மழையானதே !
நூறு நூற்றாண்டு காணாத பூ வாசமே ,
பூமியெங்கெங்கும் தான் வீசுதே !

என்னுள் உன்னை ,
உன்னுள் என்னை ,
காலம் செய்யும்
காதல் பொம்மை !

(காதல்…)

இந்த பாடலின் மூலம் மூன்று புதியவர்களை : நா.முத்துக்குமார், ஜி.வி.பிரகாஷ், கார்த்திக், சின்மயி  இசைப்பாவில் அறிமுகமாகி உள்ளனர்.  உங்கள் விருப்பங்களை, பிடித்த பாடல்களை எங்களுக்கு சொல்லுங்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இசைப்பா சிறப்பா இயங்கி வருவதில் மகிழ்ச்சி.