நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

இசை வணக்கம்,
இன்று மகாகவி பாரதியார்  பிறந்தநாள். அந்த மகாகவிஞனுக்கு இது இசைப்பாவின் அஞ்சலி. அத்தோடு இன்று 11-12-13. நூறாண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ தினம். எனவே இசைப்பாவின் பரவசத்திற்கு தயாராக இருங்கள்.
மகாகவி

சிலரைப் பார்த்து நாம் வாய் கூசாமல், “நீ அடுத்த பிறவியில் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்… பிறந்திடுவாய்” என்று திட்டி விடுகிறோம். அப்போது அவர்களுடைய மனது மிகவும் வேதனைப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்தப் பிறவியிலேயே சிலர் மிருகமாய்… பறவையாய்… பாம்பாய்த் திகழ்வதை நாம் காண முடிகிறது. மனிதன் இப்பிறவியில் எப்படி, எப்போது ஐந்தறிவுப் பிராணியாக மாறுகிறான் என்பதற்கு மகாகவி பாரதியார் விளக்கம் தந்திருக்கிறார்.

*வஞ்சனையால் சமய சந்தர்பத்திற்குத் தகுந்தபடி கபடங்கள் செய்து வாழ்பவன் நரி.

* உற்சாகமில்லாமல் சோர்வாய், சுறுசுறுப்பைத் தொலைத்துவிட்டு உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு.

*மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு.

*அற்ப சுகத்தில் ஆழ்ந்து கிடப்பவன் பன்றி.

*பிறருக்குப் பிரியமாய் நடந்து, அவர்கள் கொடுப்பதை உண்டு வாழ்பவன் நாய்.

*கண்ட கண்ட விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுபவன்வேட்டைநாய்.

*தேடலினால் அறிவைச் சேர்க்காமல், பிறர் சொன்னதைச் சொல்லித் திரிபவன் கிளிப்பிள்ளை.

* மற்றவர்கள் மரியாதை இல்லாமல் நடத்தினாலும் பொறுத்துப் போகிறவன் கழுதை.

*வீண் ஆடம்பரத்தில் படோடோபமாக வாழ்பவன் வான்கோழி.

*தான் சம்பாதிக்காமல் பிறர் சொத்தை அபகரிப்பவன் கழுகு.

*மாற்றங்களை அங்கீகரிக்க மறுப்பவன் ஆந்தை.

படம்: பாரதி
பாடலாசிரியர்: மகாகவி சி.சுப்ரமணிய பாரதியார்
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா
************************************

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
சொப்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?
காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

(நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே..)

 

இசைப்பா +
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      – பாரதி.

நன்றி:
தினமணி சிறுவர்மணி
நாற்சந்தி

இசைப்பாவின் இதர பாரதியார் பாடல்களுக்கு.

நன்றி

இசைப்பா-50 வானம் மெல்ல கீழிறங்கி …

வணக்கம்.

இசை ஆர்வலர்களாகிய நீங்கள் தந்த ஆதரவினால் தொடர்ச்சியாக வெற்றிகரமாக இயங்கிய இசைப்பா குழுவினர் இதோ 50-ம் பதிவைத் தொட்டிருக்கிறோம்.  50 பதிவுகளானாலும், 25,000 -க்கும் அதிகமான பார்வைகளோடு முன்னணியில் இருக்கிறது இசைப்பா தளம். இதோ இன்றைக்கு அதே மகிழ்ச்சியை இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பிராவகத்தில் கொடுக்கிறோம்.

raaja-nepசென்ற ஆண்டில் பாடல்களுக்காக  மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்ற சில திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. அதிலும் மிகவும் எதிர்பார்க்கவைத்த கௌதம்+இளையராஜா கூட்டணி எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை என  கௌதமின் முந்தைய கூட்டணிகள் எதுவுமின்றி நா.முத்துக்குமார் அனைத்துப் பாடல்களையும் எழுத இளையராஜா இசையமைத்தார்.   இப்படப்பாடல்கள் இலண்டனில் ஆங்கிலோ-இந்திய இசைக்கலைஞர்களால்  பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இதே தேதியில்தான் (செப்டம்பர்-1) இப்படத்தின் இசை வெளியானது.

ஒரு மென்சோகத்தை தாங்குவதுபோல் துவங்கும் கோரஸ் –ல் ஆரம்பித்து நமக்குள் இணையத் தொடங்கிவிடும் prelude (முன் இசை) வயலினில் உச்சம் தொடுவதை அத்தனை எளிதாக அடுத்தடுத்த முறைகளில் கடந்துவிட முடியவில்லை.

ராஜாவின் குரலில் நிதானமாகத் துவங்கும் இப்பாடல், ஆங்காங்கே வியப்பூட்டவும் தவறவில்லை. குறிப்பாக ராஜாவின் குரலில் பல்லவியின் முடிவில் ஒலிக்கும் தருணம்தருணம்…! வரிகள்.

அதேபோல் சரணத்தின் வரிகளுக்கிடையே தாலாட்டு போல ஒவ்வொரு முறையும் பின்தொடரும் வயலின் வாவ்! ரகம். வழக்கத்தை விட சற்றே நீளமான வரிகள் அத்தனை பாந்தமாக இசைக்குள் அடங்குவதில் மின்னுகிறார் கவிஞர் நா.முத்துக்குமார். சில வரிகள் இங்கே.

கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி

வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!

பாடல் வரிகளிலும், இசையிலுமாய் கரையுங்கள்.

படம்: நீதானே என் பொன்வசந்தம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள்: இளையராஜா, பெலா ஷிண்டே

வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே!
தூறல் தந்த வாசமெங்கும் வீசுதிங்கே!
வாசம் சொன்ன பாஷை என்ன? உள்ளம் திண்டாடுதே!
பேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே!
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம்… தருணம்

(வானம் மெல்ல)

அன்று பார்த்தது!
அந்த பார்வை வேறடி!  இந்த பார்வை வேறடி!

நெஞ்சில் கேக்குதே!
துள்ளி துள்ளி ஓடினேன்.  வந்து போன காலடி!

கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஹோ!
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்

என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
எங்கேயும் இன்ப துன்பம் நீ தானே!

உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே!

அந்த காற்றை நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்து
காதல் காப்பேனே!

(வானம் மெல்ல)

பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோணுது
மீண்டும் பேசி இணையுது

பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது

அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே

நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே

கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி!

வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!

(வானம் மெல்ல)

இசைப்பா +
இலண்டனில் ஆங்கிலோ-இந்தியக் குழுவினரால் பாடல்கள் பதிவு செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இதுதான்

இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் இருக்கு. காத்திருங்கள். உங்கள் கருத்துகள், ஆலோசனைகளைக் கூறுங்கள். தொடர்ந்து ஆதரவளித்த இசைப்பா வாசகர்களுக்கும், பின் தொடர்பவர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் தளத்தின் பங்களிப்பாளர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கையில் மிதக்கும் கனவு! ! !

வணக்கம்.

இன்று ட்விட்டரில் எதேச்சையாக சுற்றியபோது பிடிபட்ட செய்தி இன்று கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு இன்று பிறந்தநாள் என்று. 6000 நெருங்கும் அவரின் பாடல்களில் சில இசைப்பாவில் ஏற்கனவே உள்ளன. vairamuthuஅதன் சுட்டி கீழே உள்ளது. 1980-ல் நிழல்கள் மூலம் (இது ஒரு பொன்மாலைப் பொழுது) அறிமுகமான இவர் ரோஜா படம் மூலம் ரஹ்மானுடன் இணைந்து பல சிறப்பான வெற்றிப்பாடல்களைத் தந்ததும் தெரியும்.

இப்பாடலும் கேட்ட மாத்திரத்தில் ஈர்க்கும் பாடல்தான். நுரையால் செய்த சிலை போல மென்மையானவள் என்று சொல்கிறார். காற்றுக்கு கையும், காலும் முளைத்தால் எப்படியிருக்கும் என எண்ணச் சொல்கிறார். பெண் என்பவள் மென்மையானவள் என்பதை வரிகளின் ஊடே பதிவு செய்கிறார். இதை கடந்து சென்றால், அறிவியல் பாடமும் பாடலில் உண்டு. நிலவில் எடை குறைவாகத் தோன்றும். நீரின் உள்ளேயும் பொருட்கள் எடை குறைவாகத் தோன்றும். அதைப் போல…… சரி பாடலில் கேளுங்கள்.

ஒரே குறை பாடலின் காட்சியமைப்புதான். இத்தனை சிறப்புகளும் கொண்ட  பாடலின் காட்சிகள் அத்தனை சிறப்பாய் இல்லை. எதிர்பார்ப்பு மொத்தமாய்ப் போனது எனக்கு (தமிழ்). இசைப்பா எப்போதும் இசையையும், வரிகளையும் மட்டுமே கவனத்தில் கொள்ளும் என்பதை அழுத்தமாக இங்கே பதிகிறோம். காட்சியமைப்பு என்பது அடுத்த நிலை.

அடுத்தது பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு இது இசைப்பாவில் அறிமுகப் பாடல்.  ரஹ்மானின் இசை பற்றி பேசவும் வேண்டுமோ? அத்தனை ரம்மியமான இசை. உறங்க வைக்க, கிறங்க வைக்க ஒரு இசை இப்பாடலில் இருந்து வெளிப்படும். கண்களை மூடி இசையில் கரையுங்கள்.

பாடல் : கையில் மிதக்கும் கனவா நீ !
இசை : எ ஆர் ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
படம் : ரட்சகன்

கனவா… ? இல்லை காற்றா ..?
கனவா…?  நீ காற்றா ..?

கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா ?- நீ

இப்படி உன்னை ஏந்தி கொண்டு
இந்திர லோகம் போய் விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்ம்ம்ம்ம்
சந்திர தரையில், பாய் இடவா?

கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா? – நீ

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேன் அடி
அதை கண்டு கொண்டேன் அடி

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது !

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது !

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது !

உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால்
பசியோ வலியோ தெரியாது !

உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரும் தூரம் தெரியாது !
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்,
உயரும் தூரம் தெரியாது !
உன்னில் மற்றொரு பூவு விழுந்தால்,
என்னால் தாங்க முடியாது !

கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையா? – நீ

கையில் மிதக்கும் கனவா நீ?
கை கால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நூரையல் செய்த சிலையா? – நீ

கனவா…? இல்லை காற்றா ..?
கனவா…? நீ காற்றா ..?

இசைப்பா +

கவிஞர் வைரமுத்து இதுவரை ஆறுமுறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறோம். பதிவினை, தளத்தினை மேம்படுத்தும் வகையில் உங்கள் கருத்துக்கள், திருத்தங்களை எப்போதும் போல வரவேற்கிறோம்.

இசைப்பாவில் வைரமுத்து:

நன்றி.

அம்மா சொன்ன ஆரிரரோ…!

இசை வணக்கம்.

இன்றைய நாளுக்கு எதற்காக இந்த பதிவு என சொல்லத் தேவை இருக்காது. உலக மகளிர் தினம். பெண்களின் பெருமை குறித்து ஏதாவது ஒரு பாடல் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி வெளியிடுகிறோம்.

தலைப்பிலேயே கோளாறு இருப்பதுபோல் தெரிகிறதல்லவா! அம்மாப் பாட்டுபோல் தலைப்பில் வெளிப்பட்டாலும் பெண்களுக்கான பாட்டு என்பதையும் கூறித்தான் ஆகவேண்டும். இந்தப்பாடலை விட சிறப்பான பாடல்கள் இருக்கலாம். இதை இங்கு வெளியிட இவைதான் காரணம்.

  • சென்ற பிப்ரவரி மாதத்து காதல் பாடல்களில் இசைஞானி அவர்களின் பாடல் எதுவும் வரவில்லை.  தலைமுறைகள் கடந்த அவரது காதல்பாடல்கள் வெளிவராத காரணத்தால் இன்றைய பதிவு அவருக்கான முறை.
  • பாடலின் முதல் சரணம் முழுக்க பெண்ணின் பெருமை சொல்லும்.

இப்பாடலின் இன்னொரு சிறப்பு பாடலை இசை அமைத்து, வரிகளை எழுதி இளையராஜா அவர்களே பாடிய பாடல் இது. அந்த வகையில் இது மிகப் பொருத்தமான பாடல்தான்.

வரிகளில் முதல் சரணம் பெண்ணுக்கான பெருமையை நாயகன் பாடுகிறார். இரண்டாம் சரணத்தில் நாயகியைப் பாடுகிறார். இப்பாடல் படத்தில் இடம்பெற்ற அளவில் விஜய் யேசுதாஸ் அவர்களும் பாடி இருக்கிறார். இதுதவிர ராஜாவே தனியாக முழுப்பாடலையும் பாடியுள்ளார்.

படம்: சொல்ல மறந்த கதை
பாடல்: அம்மா சொன்ன ஆரிரரோ
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

சின்ன உயிரின் உடல் வளர மடி தந்து,
கண்ணின் மணிபோல் காக்க தனை தந்து,
அன்பின் உருவாய் மண்ணில் இருப்பது யார்?
அம்மா!…..அம்மா!…

அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்கு தூளி கட்டி
பூங்கொடி!
ஒரு பிஞ்சு பிஞ்சு கிளி வளர்க்கும்
மாஞ்செடி!…..பூந்தேனடி!
வீணையென்ன? குழலும் என்ன?
கொஞ்சும் பிள்ளை முன்னே!
தேனும் என்ன? பாகும் என்ன?
அன்னை அன்பின் முன்னே! ஹோய்!

காதல்சுமை, கணவன்சுமை, குடும்பச்சுமை தாங்குவாள்!
காலமெல்லாம் கன்னியர்க்கு ஓய்வு உண்டோ?
சுமைகளெல்லாம் சுமப்பதிலே, சுகமிருக்கும் பெண்ணுக்கு,
சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை சொல்லிடவோ?

கைப்பிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்!
கண்மணிக்கு இமைபோல் காவல் இருப்பாள்!
அன்னையென ஆனால் தன் பிள்ளைக்கென குழைவாள்!
மண்ணில் உண்மையிலே உயர்ந்த ஜென்மம் பெண் ஜென்மமே!

காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம் போல்,
காதினிலே கேட்கும் பிள்ளை கனிமொழி!
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல்,
பேச்சு இன்றி பிடித்திழுக்கும் வண்ணவிழி!

சிதறிவரும் சிரிப்பில் முத்து தெறிக்கும்!
சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும்!
ஏங்குதம்மா நெஞ்சம், ஏந்திக் கொண்டு பாட!
கையில் என்று வரும் பிள்ளைநிலா நீ கூறடி!

விருந்தாய்-மருந்தாய்-இசையாய்
விருந்தாய்-மருந்தாய்-இசையாய்

இசையில் ரசித்து கலந்திருப்பீர்கள் என நம்புகிறோம். உலக மகளிர் தின வாழ்த்துகள். ராஜாவின் வரிதான் மீண்டும்…!

மண்ணில் உண்மையிலே உயர்ந்த ஜென்மம் பெண் ஜென்மமே!

எங்கள் இசைப்பாவின் சிறப்பான பங்களிப்பாளர்களும், பெரும்பான்மை பங்களிப்பாளர்களும் பெண்களே என்பதே மகிழ்ச்சியான விடயம். அவர்கள் நிற்கும் திசை நோக்கி எங்கள் வாழ்த்துகளை இதயத்திலிருந்து தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்பிற்குரிய

ரஞ்சனி அவர்கள்,

குழலினி அவர்கள்,

பவானி அவர்கள்

மூத்த பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்களின் கேள்விகள்

இனிய உலக மகளிர் தின வாழ்த்துகள்

உங்கள் கருத்துகள், பங்களிப்புகள் எதிர்பார்த்து இசைப்பா குழுவினர்.

இசையும் இன்பமும்

வணக்கம்.

இசை எங்கிருந்து வருகிறது? இதுதான் இந்த தளத்திற்கான அடிப்படையா? என நீங்கள் நினைத்தால், சத்தியமாக இல்லை. என்பதே எங்கள் பதிலாக இருக்கும்.

எங்கள்?  ஆம். நாங்கள்தாம்.

உலகில் உள்ள உயிர்களையெல்லாம் இசையச் செய்வதால்தான் அது இசை. இசை என்பது சிரிப்பையும், அழுகையும் போல உலகை வசப்படுத்தக் கூடிய அனுபவம். உள்ளத்தையும் வசப்படுத்தக்கூடியது. உங்களைப் போல நாங்களும் வசப்பட்டோம். பரவசப்பட்டோம். உங்களுக்கும் அதே உணர்ச்சியை, அனுபவத்தை பகிர்ந்து பன்மடங்காக்கி  தர முயற்சிப்பதுதான், இந்த தளத்தின் அடி நாதம்!

தமிழில் இசை இருக்கிறதா? இசை மொழி அறியாது. மனதை மயக்கும் / வருடும் காற்றுக்கு, காதலுக்கு ஏது நிறம் ? அது போல தான். ஆனால் தமிழ் இசை இருக்கிறது.

எங்களால் முடிந்தமட்டும் நல்ல தமிழ்ப்பாடல்களை தமிழ் வரிகளில் தர முயல்கிறோம். தமிழிசை என்பது வெறும் திரைப்பட பாடல்கள் மட்டுமில்லை. பலதரப்பட்ட பாடல் வகைகளையும் கொண்டுவர எண்ணம் : பாரதியார் பாடல்கள், தமிழ் கர்நாடக சங்கீதங்கள்….

இசையால் இணைவோம்!

தமிழின் சிறந்த இசைத்தளங்களுள் ஒன்றென இது மாறினால் வேறொன்றும் வேண்டாம். ஒரு கை அசைந்தால், காற்று தான் ஆடும். எங்கள் கைகள் சேர்ந்து தட்டி இசை இன்பம் வரட்டும். (விரைவில்) நம் கைகள் சேர்ந்து (தமிழ் பாடல்களை) தட்டி இசை என்னும் கடல் எழட்டும், விரியட்டும், பரவட்டும் !!!

உங்களுடைய கனிவான கருத்துகளும், பகிர்வுகளும், ஊக்குவிப்பும் தேவைப்படுகிறது.

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்,

பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்,

உடல் பூமிக்கே போகட்டும்,

இசை பூமியை ஆளட்டும் !!!

வாருங்கள் இசையோடு பயணிப்போம். பாக்களுடன் பரவசம் மிக விரைவில் உங்கள் வசம்!

இசைப் பயணத்திற்கு அழைக்கும் நாங்கள்,

தமிழ்ஓஜஸ் .