உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது ?

காதல் மாதத்தின் கடைசிப் பாடலுடன், எங்கள் இசை வணக்கத்தை பதிவு செய்கிறோம்.

பெப்ரவரி பதினான்காம் தேதியை அடம்பிடித்து வாங்கி ஒரு பாடலை அறிமுகம் செய்தேன். இன்று உள்ள பாடலும் அதே நிலை தான். இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபு அவர்களின் அறிமுகம் இன்று !

ஒரு சில பாடல்களை கேட்கும் பொழுது, இயக்குனர் என்ன வென்று சொல்லி இசையமைப்பாளரை மெட்டு போட சொல்லி இருப்பார். அந்த சந்தத்துக்கும், கதைக்கும் ஏற்ப பாடலாசிரியர் எப்படி பல்லவி சரணம் எழுதி இருப்பார் என்று தோன்றும்.

அதும் இந்த பாடலை இதை நீங்கள் நிச்சயம் உணரலாம். தனக்கெனவே சின்ன வயசில் இருந்து வாழும் அத்தை மகள். மாமனை தினம் தினம் பார்த்து, பழகி, ஊட்டி, சண்டையிட்டு உறவாடும் காதலி. அவன் வெற்றியில் மட்டுமே அதீத கவனம் எடுத்துக்கொள்ளக் கூடியவள். ஆனால் விதி யாரை தான் விட்டது. உறவே துண்டிகப்படும் பொழுது, திருமணம் என்ற பேச்சுக்கு இடமேது?

கவிஞர் வாலியின் வரிகள். ஹரிஹரனின் அழகிய குரல். இதனை சோக பாடல் என்று நான் சொல்ல மாட்டேன். காதல் உலகின் தத்துவங்கள் ஒருங்கிணைந்த பாடல். இதனை படம் பிடித்த விதத்தை பாராட்டியே ஆக வேண்டும். கதாநாயகன் கதாநாயகியின் முழு சரித்திரத்தை தன் வாரத்தைகளுள் வடித்துள்ளார் வாலி ! குறிப்பாக முதல் வரியே சபாஷ் ! இதனை உண்மை காதலின் definition என்றே சொல்லலாம்.

இசை விருந்து  !
இசை விருந்து !

படம்: நாடோடிகள்
பாடல்: உலகில் எந்த காதல் உடனே…
இசை: சுந்தர்.சி.பாபு
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்: ஹரிஹரன்

உலகில் எந்த காதல், உடனே ஜெயித்தது ?
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது !

காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதலாகாது!

எல்லாமே சந்தர்ப்பம்,
கற்பிக்கும் தப்பர்த்தம்.

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு.
அவனை அல்லாது அடுத்தவன்
மாலை ஏற்பது பெரும் பாடு.

ஒரு புறம் தலைவன் மறு புறம் தகப்பன்
இரு கொள்ளி எறும்பானாள்.
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்.

யார் காரணம், யார்தான் காரணம் ?
யார் பாவம் யாரை சேரும் ?
யார் தான் சொல்ல….
கண்ணீர் வார்த்தாள்
கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே !

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை !
உணர்வைப் பார்ப்பதேது உறவின் சூழ்நிலை !

மனம் என்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாளே!
அலை அலையாக ஆசைகள்
எழும்ப அவள் வசம் விழுந்தானே!

நதி வழி போனால் கரை வரக்கூடும்
விதி வழி போனானே!
விதை ஒன்று போட
வேறு ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே

என்சொல்வது என்சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்?

பாடலின் ட்வீட் வடிவம்

இந்த மாதம் இசைப்பாவின் ஒரு உச்சம் என்றே சொல்லலாம். பார்வைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதில் மிகுந்த திருப்தி. மேலும் உங்கள் விருப்பங்கள், பங்களிப்பு, மற்றும் கமெண்ட்டுகள், ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதிற்கென எந்த வித பிளானும் இல்லை, ஆனாலும் கையிலும், டிராப்ட்-டிலும் பல பாடல்கள் உள்ளன.

இன்று திருமிகு இசை வள்ளல் @flytedigital அவர்களின் முதல் பிறந்தநாள்! நீ வாழ்க பல்லாண்டு! -இலவச இசை விரும்புவோர் சங்கம் 🙂