சித்திரையில் என்ன வரும்?

வணக்கம்.

அதென்னமோ தெரியவில்லை. வித்யாசாகர் + கரு.பழனியப்பன் கூட்டணியில் பாடல்கள் அனைத்தும் கேட்கிற ரகமாக, இன்னும் சில ஈர்க்கிற ரகமாக அமைந்துவிடுகிறது. இப்பாடலும் விதிவிலக்கல்ல. இதற்கு முன் இப்பாடலைக் கேட்டவர்களுக்கு இது இன்னுமொரு கொண்டாட்டம். முதல்முறை கேட்பவர்களுக்கு மனதினுள் ஒரு குதூகலம் பிறக்கும்.

பாடல் வரிகளுக்கு முழு இடம் கொடுத்து, மெலிதாக வரி நோகாமல் பின் தொடரும் இசை ரொம்பவே அருமை. கவிஞர் யுகபாரதி கடந்த ஒன்றரை வருடங்களாக முன்னணியில் இருக்கிறார். ஆனால் இப்பாடல் அதற்கெல்லாம் முன்பு எழுதப்பட்ட ஒன்று. ஒரு பாட்டில் யாரும் புகழடைவதில்லை என்பதற்கு ஒரு உதாரணம் இப்பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம்!

ஏற்கனவே உவமை வகையில் பிரிவோம் சந்திப்போம் படப் பாடலைத் தந்திருந்தோம். அதே கவிஞர் அதே கூட்டணியில் எழுதிய பாடல். நாட்டுப்புற பாடலொன்றின் அடியொற்றி காதல் பேசும் பாட்டு. ஒரு வினா.. அதற்கொரு விடை என்று தொடரும் பல்லவி,  சரணத்தில் இன்னும் கொஞ்சம் காதலைக் கொஞ்சி செல்கிறது.

போல எனும் உவம உருபைப் பயன்படுத்தி கொஞ்சம் உதாரணங்கள் தருகிறார் கவிஞர். ஆவிப்புகை, நூல், தாய், காதல் (!),   மாவிளக்கு, ஊற்று என சற்றே காதலைத் தொட்டுக் காட்டுகிறார். பாடலின் சந்தச் சுவை எவ்விடத்திலும் இறங்கவே இல்லை என்பது இன்னும் சிறப்பு. வாசிக்கவே தோதான வரிகளுக்குள் இசையும், குரலும் கலந்தால் கேட்க இனிக்காதா என்ன?

படம்: சிவப்பதிகாரம்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: கார்த்திக், சொர்ணலதா

அப்படியோர் ஆணழகன்
என்ன(னை) ஆள வந்த பேரழகன்!
செப்புக் கல்லு சீரழகன்!
சின்னச் செம்பவள வாயழகன்!
இப்படியோர் தேரழகன்! –இல்ல!
இன்னுஞ் சொல்லும் ஊரழகன்!
அப்புறம் நான் என்ன சொல்ல?
என்ன(னை)க் கட்டீட்டான் கட்டழகன்!

******
சித்திரையில் என்ன வரும்?
வெயில் சிந்துவதால் வெக்க வரும்.
நித்திரையில் என்ன வரும்?
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்.

கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால்
உண்மையில் என்ன வரும்?
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட
தித்திப்பு நெஞ்சில் வரும்.

(சித்திரையில்)

பாவிப் பயலால இப்ப நானும்
படும் பாடு என்ன?
ஆவிப் புகைபோலத் தொட்டிடாம
இவ போவதென்ன?

கண்ணுக்குக் காவலா
சொப்பனத்தில் கூடுற!
கன்னத்துக்கு பவுடரா
முத்தங்களப் பூசுற!

நூலப் போல சீல!
பெத்தத் தாயப் போல காள!
யாரு போல காதல்?
சொல்ல யாருமே இல்ல!
(சித்திரையில்….)

கேணிக் கயிறாக உங்க பார்வ
என்ன மேலிழுக்க!
கூனி முதுகாகச் செல்ல வார்த்த
வந்து கீழிழுக்க!

மாவிளக்கு போல நீ
மனசையும் கொளுத்துற!
நாவிடுக்கு ஓரமா
நாணத்தப் பதுக்குற!

யாரும் இறைச்சிடாத
ஒரு ஊத்தப் போலத் தேங்கி
ஆகிப் போச்சு வாரம்
இவ கண்ணு முழி தூங்கி

(சித்திரையில்…)

இசைப்பா தளம் 50,000 பார்வைகளை இப்பதிவில் கடக்கிறது. இதுகாறும் ஆதரவு தந்த, இனிமேலும் தரப்போகிறவர்களுக்கு நன்றி. பங்களிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.