அழகே அழகே….

நண்பர்களுக்கு இசையுடன் நல்வணக்கம்,

இன்று காணவிருக்கும் பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்களின் புதல்வியான உத்ரா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மழலை ததும்பிய குரலில் பாடப்பெற்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் “சைவம்” , பாடல்-“அழகே அழகே” என அழகாக தெளிவாக பாடியிருக்கிறார் உத்ரா உன்னிகிருஷ்ணன். ஜி.வி .பிரகாஷ் இசையை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக, பின் வாத்தியங்கள் அனைத்தும் அருமை.பாடல் வரிகள் எளிமையாக சின்ன சின்ன வரிகளாக அருமையாக அமைத்து இருக்கிறார் நா.முத்துக்குமார். குரலில் என்ன மாயமோ Loopல் கேட்க செய்கிறது. பாடலின் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Utharaஅன்பின் விழிகளில் காணும் அனைத்தும் அழகே என்றும்,

சுடும் வெயில் அழகு, விழும் இலை அழகு...

என ஒரு பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகு என அருமையாக வரிகள் அமைத்து இருக்கிறார் பாடலாசிரியர். வாங்களேன் பாடலை ரசிப்போம்.

 

 

படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

 அழகே அழகே எதுவும் அழகே

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மை அதுதான் நீதான் அழகு !

 ……..

குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

……

அழகே அழகே எதுவும் அழகே

…….

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !

அழகே அழகே…..

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் விழியாய் அழகு !

இனியதோர்  பாடல்களுடன் மீண்டும் சந்திப்போம் !

கண்கள் நீயே..காற்றும் நீயே…..!

வணக்கம்.
இசைப்பா-வில் இதுவரை நிகழாத ஒரு நிகழ்வு இப்பாடலுக்குதான் நிகழ்ந்துள்ளது. ஒரே பாடலை பல பங்களிப்பாளர்கள் பதிந்து வைத்தது இதுவே முதல் முறை. எனவே அனைத்து பதிவுகளையும் ஒருங்கிணைத்து இங்கே தருகிறோம்.
***************
நீண்ட நாட்களுக்கு பின் நான் எழுதும் பதிவு. இது என் அம்மாவை நினைத்து எழுதுவது.  தமிழில் பல தாலாட்டு ஆண் கவிஞர்களால்  எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜ வாழ்வில் தாலாட்டு தாய்க்கு உரியது. முதன் முதலாக பெண் கவிஞரால் எழுதப்பட்ட தாலாட்டுப்பாடல்  இதுவே .

உணர்வுகளை உணர்ந்து கொள்ள தாயை தவிர வேறு எவரும் இந்த உலகில் இல்லை. ஒரு தாய்க்கு தன் குழந்தையே உலகமாகிறது – அக்குழந்தையின் பிறப்புக்கு பின். ஒரு தாய் தான் தன் குழந்தையை எல்லாவுமாய் பாவிக்கிறாள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்.

-குழலினி

***********

இந்த பாடலை பாடியது சித்தாரா அவர்கள் என்று இன்றுதான் தெரிய வந்தது. சமீபத்தில் அவரை இசைப்பாவில் ‘அம்மாடி நான்..'(ஜெ.சி.டேனியல்) பாடல் மூலம் அறிமுகம் செய்ய இருந்தோம். இருந்தும் இதுவும் ஒரு இனிய பாடல், வளமான குரல். சேர நாட்டு பெண் அவுங்க. உணர்வுகளை, ஏக்கங்களை பளிச்சென நெஞ்சில் பதிய வைக்கும் அவரின் குரலில் தாயின் உள்மனதின் ஈரம் வடிகிறது. தெரிகிறது.

இப்பாடலுக்கு 2012ஆம் ஆண்டின் சிறந்த பாடல் – என்று விஜய் டிவி நிறுவனத்தின் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய தாமரை (காணொளி). தமிழ் மொழி வார்த்தைகளை மட்டுமே கொண்டு, ஆபாசம் மற்றும் இரட்டை அர்த்தம் இல்லாமல், எழுதும் கவிஞர் தாமரை என பலருக்கு தெரியாது.

-ஓஜஸ்

****************

மிக எதேச்சையாக, இப்படத்தின் பாடல்கள் வெளிவந்த சில நாட்களிலேயே எல்லா பாடல்களையும், கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என் தோழர் ஒருவர் நடுநிசியில் உறக்கம் வராமல் தவித்திருக்கிறார். மொபைலில் ஏற்றி வைத்த பாடல்களை துழாவியிருக்கிறார். இப்படம் புதிதாக இருக்கவே, கண்கள் நீயே பாடலை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.கேட்ட மாத்திரத்தில் பாடலுக்குள் வீழ்ந்த அவர் 2-3 முறை கேட்டுவிட்டு தானாகவே உறங்கி விட்டார். மறுநாள் எங்களிடமும் ”என்னா பாட்டுடா!” என வியந்து அதைப் பகிர்ந்து பல தோழர்களுக்கும், இப்பாடலை ரசிக்க தூண்டினார். உங்களுக்கும் உறக்கம் வராது தவிக்கும் தருணம் கிட்டினால் முயன்று பாருங்களேன்!

குழந்தையை மையப்படுத்தி பாடும் தாயின் உணர்வுகளை அப்படியே எழுத்துக்குள், பாட்டுக்குள் வைத்ததுதான் பாடலின் வெற்றி. இவ்வரியை வாசிக்கையிலே எத்துணை இன்பம்.

முகம்  வெள்ளைத்  தாள்.
அதில்  முத்தத்தால்,
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே!
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்,
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே!

பாடலுக்குள்ளும் அழகாக அமரும் மற்ற வரிகளும் அருமையோ அருமை!

-தமிழ்

*******

அன்னையின் பாசமும், தன் குழந்தையை வளர்க்கும் துணிவுடனும் தன் வாழ்வையை அழகாக எடுத்துரைக்கும் தாமரை அவர்களின் வரிகள் இசைக்கும் வேளைகளில் நமக்கும் தாய்மை உணர்வை ஏற்ப்படுத்தும் வரிகள். வாழ்வில் தாயின் நேசம் அது மனிதனை முழுமை படுத்துவதாக அமைகிறது. அவளின் ஒவ்வொரு அசைவிலும் தன் பிள்ளை எதிர் காண இருக்கும் காலம் பற்றி அவள் சிந்திப்பதையும் பாடல் வரிகளின் வடிவில் அருமையாக எடுத்துரைக்கிறார் பாடல் ஆசிரியர்.சில சமயங்களில் பிள்ளைகளால் தாய்க்கு தரப்படும் நேசம் அவளின் தவம் புரியா வரமாக அமைகிறது. பிள்ளையின் கண்களில் பாசமும் பெற்றவள் கண்ணில் நேசமும் அவர்களுக்கிடையில் இசையான வாழ்க்கை சுழற்சி அழகாக வரிகளாக உருப்பெற்றுள்ளது.
-பவானி
***********

thamaraiவாழ்த்துகள் கவிதாயினி தாமரை.

ஒரே ஒரு குறைதான்! பாடல் வரிகளின் முழுத் தாக்கமும் காட்சிகளில் இல்லை என எண்ணுகிறோம். உங்களுக்கும் அவ்வாறே தோன்றினால் பாடல் வரிகளின் ஆழத்தை உணருங்கள். இசையோடு இணையுங்கள்.

************

பாடல் : கண்கள் நீயே காற்றும் நீயே
படம் : முப்பொழுதும் உன் கற்பனையில் 
பாடலாசிரியர் : தாமரை
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர் : சித்தாரா

கண்கள்  நீயே..காற்றும்  நீயே

தூணும்  நீ ..துரும்பில் நீ

வண்ணம்  நீயே ..வானும்  நீயே

ஊனும் நீ ..உயிரும்  நீ

பல  நாள்  கனவே
ஒரு  நாள் நனவே
ஏக்கங்கள்  தீர்த்தாயே
இடையில்  பிழிந்து  உன்னை  நான்  எடுத்தேன்
நான் தான்  நீ ..வேறில்லை
முகம்  வெள்ளைத்  தாள்
அதில்  முத்தத்தால்
ஒரு வெண்பாவை  நான் செய்தேன்  கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும்  தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள்  நீ செய்தாய்  கண்ணே

(கண்கள்  நீயே..காற்றும்  நீயே)

இந்த  நிமிடம்  நீயும்  வளர்ந்து
என்னை  தாங்க  ஏங்கினேன்
அடுத்த  கணமே  குழந்தையாக
என்றும்  இருக்க  வேண்டினேன்
தோளில்  ஆடும்  சேலை
தொட்டில்  தான்  பாதி  வேலை
சுவர்  மீது  கிறுக்கிடும்போது
ரவிவர்மன்  நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன்
ஈடில்லா  என்  மகன்

எனைத்  தள்ளும்  முன்
குழி  கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன்  கண்ணே
எனை கிள்ளும் முன்
விரல்  மெத்தைக்குள்
என் முத்தத்தை  நான் தந்தேன்  கண்ணே

என்னை  விட்டு  இரண்டு  எட்டு
தள்ளிப்  போனால்  தவிக்கிறேன்
மீண்டும்  உன்னை  அள்ளி  எடுத்து
கருவில்  வைக்க  நினைக்கிறேன்

போகும்  பாதை  நீளம்
கூரையாய்  நீல  வானம்
பல  நூறு  மொழிகளில்  பேசும்
முதல்  மேதை  நீ
பசி  என்றால்  தாயிடம்  தேடும்
மானிட  மர்மம்  நீ
நான்  கொள்ளும்  கர்வம்  நீ

கடல்  ஐந்தாறு
மலை ஐநூறு
இவை  தாண்டித்  தானே
பெற்றேன்  உன்னை
உடல்  செவ்வாது  பிணி  ஒவ்வாது
பல  நூறாண்டு  நீ ஆள்வாய் மண்ணை

(கண்கள்  நீயே..காற்றும்  நீயே)

இசைப்பா+

தமிழ்த் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் கவிஞர் தாமரை தான்!

கருத்துக்கள் மற்றும் திருத்தங்களை எப்போதும் போல எதிர்பார்க்கிறோம்.

காதல் நெருப்பின் நடனம் !

இந்தப் பாடலைத்தான், இந்த தேதியில்தான் போடுவேன் என்று நான் அடம்பிடித்து கேட்டு வாங்கி(!) இடுகிற பதிவு இது என்றுசொன்னால் மிகையாகாது. குறிப்பாக இசைப்பா தொடங்கும் முன்னே தமிழ் தம்பிக்கு சொல்லி விட்டேன்.

இதோ ட்விட்டரில், நேற்றிலிருந்தே காதல் என்பது_________ என சகட்டுமேனிக்கு இட்டு வருகின்றனர். 14-02-13 அன்றுநிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும்! சரி. பாடலுக்கு வருவோம்.

பாடலிலும் அதேதான். காதல் என்பது__________ என கவிஞர் ’கொஞ்சம்’ சொல்லியிருக்கிறார். நமக்கும் படித்தவுடன் ஏதாவதுதோன்றலாம்.

பிரகாஷ முத்து !
பிரகாஷ முத்து !

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு (வெயில்) இசை அமைக்கிறபோது அவர் வயது 18. இப்போது 25. இந்த இடைவெளியில் 27படங்கள் அவர் இசையமைப்பில் வெளிவந்து விட்டன. இதுவே இவருக்கான சிறப்புதான்.ஆப்பிள் ஐபோனில் இவர் பெயரில் App இருக்கிறது. இந்திய இசையமைப்பாளர் ஒருவரது App ஐபோனில் வெளிவந்தது இவருக்குதான். அந்தளவுக்கு இளைஞர்களை ஈர்க்கும் இசை இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இவரின் முதல் பாடலை நா.முத்துக்குமார் எழுதியதாலோ, என்னவோ இந்த கூட்டணி எக்கச்சக்கமான வெற்றிப்பாடல்களை நமக்குத்தந்துள்ளது.இருவரையும் இந்நாளில் அறிமுகம் செய்வதாகத் திட்டம்.

நா.முத்துக்குமாரை முன்னமே அறிமுகம் செய்யாததால் எக்கச்சக்க பாடல்கள் தள்ளிப்போயின. இதில் தம்பிக்கு வேறு கடும் வருத்தம் ! இனி ஒவ்வொன்றாக வெளிவரும்.

பல பாடல்களை கேட்டவுடன், இன்னவர் தான் இதனை எழுதி இருக்க முடியும் என்று ஊகிப்பேன். பா.விஜய் சமாச்சாரத்தில் நூற்றுக்கு நூறு பலிக்கும். அதற்கு அடுத்து ‘கவிஞர்’ வைரமுத்து. இந்த பாடல் வந்ததிலிருந்து, நான் இதனை அடிக்கடி முணுமுணுத்து, ட்வீட் எல்லாம் செய்வேன். பலரிடம் “இந்த பாடலை வைரமுத்து எப்படி எல்லாம் எழுதி இருக்கார் பாருங்க” என்று சில வரிகளை சொல்லி, அவரை சிலாகித்து பேசிய தருணங்கள் பல உண்டு. பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்தது, இந்த வரிகளை வைரத்தால் செதுக்கியது நா.முத்துக்குமார் என்று.

அன்று முதல் அவரின் பெரும் விசிறியாக மாறி விட்டேன். அவர் எழுதிய பாடல்களை தேடித்தேடிக் கேட்டுக்கேட்டு,நண்பர்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்றைய தமிழ் திரைப்பாடல்கள் உலகத்தில், நா.மு. அவர்களுக்கு தனி இடம் உண்டு.ஆண்டுக்கு ஆண்டு அதிக படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் இவர் தான். மெட்டு கொடுத்த சில மணி நேரத்தில் பாடல்களை எழுத வல்லவர். சமீபத்தில் இளையராஜா இசையில் பல பாடல்கள் எழுதி உள்ளார். அதே சமயம் பல புதிய இயக்குனர்களுக்கும், புதிய இசையமைப்பாளர்களுக்கும் எழுதி உள்ளார். வியக்க வேண்டிய விஷயம், எனக்கு தெரிந்து இவருக்கு என்று அடைமொழி எதுவும் இல்லை. வருத்தம் தரும் செய்தி : பல நல்ல கவிதை/உரைநடை புத்தங்களை அவர் எழுதி உள்ளார். பற்பல புத்தக நிறுவனங்களில் இதைப் பற்றி விசாரித்து விட்டேன், அவர்களுக்கு ஏதும் தெரிய வில்லை.

உலகக் காதலுக்கு விளக்கம் கொடுக்கும் இந்த பாடல் உங்களுக்கும் இன்பம் கொடுக்கும் ! இசையால் இன்பம் வளரட்டும் !

படம் : வெயில் 
பாடல் : காதல் நெருப்பின் நடனம் !
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : கார்த்திக், நிதீஷ், சின்மயி  

காதல் நெருப்பின் நடனம் !
உயிரை உருக்கி
தொலையும் பயணம் !
காதல் நீரின் சலனம் !
புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம் !
காதல் மாய உலகம் !
சிலந்தி வலையில்
சிறுத்தை மாட்டும் !
புள்ளி மான்கள் ,
புன்னகை செய்து ,
வேடனை வீழ்த்தும் !

(காதல்…)

கனவுகள் பூக்கின்ற செடியென ,
கண்கள் மாறுதுன்னாலே !
வயதிலும் மனதிலும் விட்டு விட்டு ,
வண்ணம் வழியுது உன்னாலே !

உனது வளையாடும் அழகான கை தீண்டவே ,
தலையில் இலையொன்று விழவேண்டுமே !
குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே ,
உனது கை ரெண்டும் குடையானதே !

உனது முத்தத்தில் நிறம் மாறுதே ,
உடலில் ஒரு கோடி நதி பாயுதே !

(காதல்…)

வானத்தின் மறுபுறம் பறவையாய் ,
நீயும் நானும் போவோமே !
பூமியின் அடிப்புறம் வேர்களாய் ,
நீண்ட தூரம் போவோமே !

கோடி மேகங்கள்
தலை மீது தவழ்ந்தாடுதே ,
காதல் மொழி கேட்டு மழையானதே !
நூறு நூற்றாண்டு காணாத பூ வாசமே ,
பூமியெங்கெங்கும் தான் வீசுதே !

என்னுள் உன்னை ,
உன்னுள் என்னை ,
காலம் செய்யும்
காதல் பொம்மை !

(காதல்…)

இந்த பாடலின் மூலம் மூன்று புதியவர்களை : நா.முத்துக்குமார், ஜி.வி.பிரகாஷ், கார்த்திக், சின்மயி  இசைப்பாவில் அறிமுகமாகி உள்ளனர்.  உங்கள் விருப்பங்களை, பிடித்த பாடல்களை எங்களுக்கு சொல்லுங்கள். இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து இசைப்பா சிறப்பா இயங்கி வருவதில் மகிழ்ச்சி.