நெஞ்சத்திலே நெஞ்சத்திலே…

இசையில் கலந்த இதயங்களுக்கு வணக்கம்.

இன்று உலக தாய்மொழி தினம். நமக்கு தமிழ்மொழியின்பால் ஒரு ஈர்ப்பு இயல்பாகவே இருக்கும். இன்று இசையிலும் தமிழ்தான்! முன்னர் பார்த்த கண்டேன் கண்டேன் பாடல் இடம்பெற்ற பிரிவோம் சந்திப்போம் படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல்தான் இது.

இந்தப் பாடலிலும் ஒரு இலக்கணம். அந்தாதி என்பது தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. அந்தம் என்றால் முடிவு. ஆதி என்றால் தொடக்கம்.  முதல் அடியில் கடைசி வார்த்தையை அடுத்த அடியின் முதல் வார்த்தையாக அமைத்து எழுதுவது அந்தாதியின் இலக்கணம்.

இப்பாடலின் ஒவ்வொரு வாக்கிய முடிவும் அடுத்த வாக்கியத்தின் முதல் வார்த்தையாக அமைந்திருக்கும். இப்பாடலும் வித்யாசாகர்-யுகபாரதி கூட்டணியில் கிடைத்த இனிய பாடல்தான். இந்த இனிய நாளில் இனிய பாடலைத் தருவதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே.

பாடல்:  நெஞ்சத்திலே நெஞ்சத்திலே

இசை: வித்யாசாகர்

        படம்:பிரிவோம் சந்திப்போம்  

                                  பாடலாசிரியர்: யுகபாரதி                                         

பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ஜெயராம்

நெஞ்சத்திலே நெஞ்சத்திலே நீதானே மொத்தத்திலே
மொத்தத்திலே மொத்தத்திலே உன்னழகைக் கண்டேனே முத்தத்திலே
முத்தத்திலே ஆசையில்லை. சத்தமில்லா வெட்கத்திலே
வெட்கத்திலே தத்தளித்தால் காதல் பொங்கும் நெஞ்சத்திலே!

நீ பேசியும், நான் பேசியும் தீராதம்மா பொழுதுகள்
பொழுதுகள் தீரலாம். மாறாதென்றும் இனிமைகள்
இனிமைகள் முளைத்தன ஆதாம்-ஏவாள் தனிமையில்!
தனிமையில் இருவரும் பேசும் மௌனம் இள வெயில்!
வெயில் சாரலடிக்கும். மழை கூடி அணைக்கும்!
அணைக்கும் ஆசை ஆயிரம். அழைக்கும் பாஷை பா சுரம்!
சுரம் ஏழிலும், சுவை ஆறிலும் கூடும் இன்பம் நெஞ்சத்திலே!

(நெஞ்சத்திலே)

வா என்பதும், போ என்பதும் காதல் மொழியில் ஒருபொருள்!
ஒரு பொருள் தருவதோ, நீயும் நானும் மறை பொருள்!
பொருள் வரும். புகழ் வரும். ஆனால் வாழ்வில் எது சுகம்?
சுகம் தரும். சுவை தரும். காதல் போல எது வரும்?
வரும் வாழ்க்கை தயங்கும். நமைப் பார்த்து மயங்கும்!
மயங்கும் மாலைச் சூரியன். கிறங்கும் நாளும் ஐம்புலன்!
புலன் ஐந்திலும், திசை நான்கிலும் தேடும் இன்பம் நெஞ்சத்திலே!!

(நெஞ்சத்திலே)

shreya ghoshal யுகபாரதி வித்யாசாகர்

இந்தப் பாடல் பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு இசைப்பாவில் அறிமுகப் பாடல்.  தற்போதைய பாடகிகளில் இவருக்குதான் அதிகமான ரசிகர் வட்டம் இருக்கும். பன்மொழிகளில் பல இனிய பாடல்களில் இவரின் குரல் ஒலித்திருப்பதை நாம் கேட்டிருக்கலாம். 

இவர் ஹிட் பாடல்களை மட்டும் பாடுகிறாரா? இல்லை, இவர் பாடுகிற பாடல் ஹிட் ஆகிறதா?

என பெரும் விவாதமே அவ்வப்போது நடக்கிறபடி பல்வேறு இனிய பாடல்களை இவர் பாடியிருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. உங்கள் ஆதரவும், கருத்துகளும், பங்களிப்பையும் வழக்கம்போல் எதிர்பார்க்கிறோம். நன்றி