பொன் ஒன்று கண்டேன்…

இசை வணக்கம்

தமிழ் திரையிசையின் மூத்த மகன் – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைந்து விட்டார், காற்றோடு கலந்து விட்டார். இசைப்பாவின் இரங்கல் அஞ்சலி, அவர் பாடல்கள் மூலம் தொடர்கிறது.

நண்பர்கள் இருவரும் பேசிக்கொள்வது போல் அமைந்த பாடலிது. இருவரம் தாங்கள் பார்த்த பெண்ணை பற்றி பகிர்ந்து கொள்கின்றனர். பிருந்தாவனா சாரங்கா என்ற ராகம், எளிமையும் இனிமையும் நிறைந்தது. கண்ணதாசன் வரிகள். ஜாம்பவான்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் இணைந்து பாடியுள்ளனர். Dynamics என்பார்கள், ஒரே வரியை வேறு வேறு பாவங்களுடன் இருக்கும். இந்த பாடலில் இதனை இலகுவாக அனுபவிக்கலாம். மெல்லிசை என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பாடல்.

கீச்சு ‏@thadeus_anand – கடந்த 34 ஆண்டுகளில் கண்ணதாசன் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்ததற்கெல்லாம் இன்றுமுதல் இசையமைக்கவேண்டிய இனிய வேலை எம்எஸ்வி அவர்களுக்கு. #RIPMSV.

MSV with kannadasan

படம் : படித்தால் மட்டும் போதுமா
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : பி பி ஸ்ரீநிவாஸ், டி எம் எஸ்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

பூ ஒன்று கண்டேன்
முகம் காண வில்லை
ஏன்னென்று நான் சொல்லாகுமா ?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ?

நடமாடும் மேகம்
நவநாகரீகம்
அலங்கார கிண்ணம்
அலை போல மின்னும்

நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம்
உயிராக மின்னும்

துள்ளி வரும்
வெள்ளி நிலா
துள்ளி வரும்
வெள்ளி நிலா

துவண்டு விழும்
கொடி இடையால்
துவண்டு விழும்
கொடி இடையால்

விண்ணோடு விளையாடும் பெண்
அந்த பெண் அவளோ
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி

நீ காண வில்லை
நான் கண்ட காட்சி
நீ காண வில்லை

என் விழியில்
நீ இருந்தாய்
என் விழியில்
நீ இருந்தாய்

உன் வடிவில்
நான் இருந்தேன்
உன் வடிவில்

நான் இருந்தேன்

 

நீ இன்றி நான் இல்லை
நான் இன்றி நீ இல்லை
சென்றேன்…. ஹ்ம்ம்
கண்டேன்…. ஹ்ம்ம்
வந்தேன்…

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா ?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா ?

இசைப்பா+

ஏறக்குறைய 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

கொடுத்தெல்லாம் கொடுத்தான்…

வணக்கம்.

இன்றைக்கு தமிழ் திரையிசையின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் திரையிசை ரசிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்றைக்கு இசைப்பா தளத்தில் இடம்பெறும் பாடல் படகோட்டி படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை உருவாக்கிய இசை மேதைகள் அனைவரும் மறைந்துவிட்டார்கள். பொதுவுடைமையை விளக்கும் வாலியின் வரிகள். கம்பீரமான டி எம் எஸ் குரல். வனப்பான மீனவ எம்.ஜி.ஆர். அனைத்தையும் அழகே சேர்க்கும் மெல்லிசை மன்னர்களின் இசை.  காலங்கள் பல சென்றாலும் என்ன?  எந்நாளும் காற்றில் நிலைத்திருக்கமல்லவா இப்பாடல்?

நகைச்சுவை நடிகர் விவேக்கின் கீச்சு ‏@Actor_Vivek – அய்யா! உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும்! ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! விஸ்வ “நாதம்”!

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் (சில வரிகள்) :
மெல்லிசை மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் பால்ய வயதின் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப்
பொற்காலம் தந்தவரே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த்
தமிழர்களைத் தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டார்.

அவரது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

அவரது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

ஒரு நகைக் கலைஞன்
ஆபரணம் செய்வதற்காக
சுத்தத் தங்கத்தில்
கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி
கர்நாடக இசையில்

மேற்கத்திய இசையைப்
பொருத்தமாய்க் கலந்து
புதுமை செய்தவர்.

அவர் தொடாத ராகமில்லை;
தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

அமிர்தம் பொழிந்த விரல்களே
காற்று மண்டலத்தையே
கட்டியாண்ட விரல்களே !
நீங்கள் தொட்ட உயரத்தை
யாரும் தொடமுடியாது.

பல தலைமுறைகளுக்கு
நீங்கள் நினைக்கப்படுவீர்கள்!!

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி”

அவரை இழந்து
வாடும் குடும்பத்திற்கும்,
உலகம் முழுவதும் உள்ள
அவரது ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

MSV with MGR

படம் : படகோட்டி
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலிப வாலி
பாடியவர் : டி எம் எஸ்

கொடுத்தெல்லாம் கொடுத்தான் – அவன்
யாருக்காக கொடுத்தான் ?
ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை
ஊருக்காக கொடுத்தான் !

கொடுத்தெல்லாம்…

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா, ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா ?

உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று, ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை!!

கொடுத்தெல்லாம்…

படைத்தவன் மேல்
பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டால்
உழைத்தவரகள் தெருவில் நின்றால்

பலர் வாட வாழ
சிலர் வாழ வாழ, ஒருபோதும்
தெய்வம் கொடுத்தில்லை

கொடுத்தெல்லாம்…

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்!

எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் !

கொடுத்தெல்லாம்…

இசைப்பா +

நம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராரும் கடலுடுத்த)இசையால் சிறப்பு செய்தவர் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

வாலி என்னும் அற்புதக் கலைஞன் – கவிஞன்

வாழ்க வாலி !
வாழ்க வாலி !

திருச்சி ரயில் நிலையம். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை அணுகுகிறார் ஒரு இளைஞர். அவரது கையில் அவர் எழுதிய பாடல் அடங்கிய தாள். அந்த வண்டியில் உட்கார்ந்திருக்கும் பிரபலப் பின்னணிப் பாடகரை தயங்கித் தயங்கி அணுகி, தான் எழுதிய பாடலைக் காண்பிக்கிறார். வாங்கிப் பார்த்த பிரபல பாடகருக்கு முகம் மலருகிறது. அவருக்குப் பிடித்த அழகன் முருகனைப் பற்றிய பாடல். அங்கேயே இசை அமைத்து பாடலை மெல்லப் பாடிப் பார்க்கிறார். பாடலில் உள்ள சந்தம் கருத்தைக் கவர்ந்தது.

ஆரம்ப வரிகளே மனதை கொள்ளை கொண்டது:

‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’

பாடல் மிகவும் படித்துப் போக தானே இசையமைத்து பாடினார் டி.எம்.எஸ்.

அந்த இளைஞர் திரு வாலி. பிரபலப் பாடகர் : திரு டி.எம்.எஸ். இன்று இந்த இருவருமே இல்லை. ஆனாலும் அவர் எழுதி இவர் பாடிய பாடல் என்றென்றைக்கும் தமிழ் கூறும் நல்ல நெஞ்சங்கள் எல்லாவற்றிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

வாலி தான் எழுதிய பக்திப் பாடல்களால் புகழ் பெறவில்லை என்றாலும் அவருக்கு அதுவும் கைவந்த கலைதான். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம் ஆகியவை அவர் எழுதிய பக்தி கதைகள். அதிலும் அவர் தனது தனி முத்திரையைப் பதித்தார்.

இராமாயணம் பற்றி சொல்லும்போது எழுதுகிறார்:

தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள் !

என்ன ஒரு வியக்க வைக்கும் சொல்லாடல் பாருங்கள்!

வாலிக்கு முருகன் மேல் தீராத பக்தி. எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் கொடுப்பார்.

பாடல்: கற்பனை என்றாலும்
எழுதியவர்: வாலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி

பல்லவி :
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் – நீ (கற்பனை)

அனுபல்லவி:
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே –நீ சரணம்:

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே (கற்பனை)

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதை எத்தனை எளிமையாக விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

பாடல் வரிகளுக்கு தன் ‘கணீர்’ குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் டிஎம்எஸ்.

இந்தப் பாடல் இறவா வரம் பெற்ற பாடல்.

இசைப்பா இந்தப் பாடல் மூலம் திரு வாலிக்கு தன் அஞ்சலியை பகிர்ந்து கொள்ளுகிறது.

இசைப்பா +

`எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்.

ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்’ –
கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

இறையுடன் இணைத்த இயல்பு கவிஞர் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து ஏழு நாட்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தும் முறையில் இசைப்பாவில் தந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவரது பாக்கள் பல இன்னும் வர உள்ளன.  எங்களை ஊக்குவித்த இசை மற்றும் வாலி நேசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்.

இசைப்பா குழுவினர்

இசைப்பாவில் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540