ஒவ்வொரு பூக்களுமே…!

 இனிய இசை வணக்கங்கள்.

இன்று இப்பாடல் வெளிவரும் என்று நேற்றிரவு 12 மணிவரை திட்டமில்லை. கிட்டத்தட்ட 2 மாதங்களாக இசைப்பாவில் புதிய பதிவுகள் குறைந்துவிட்டன. ஆனபோதிலும் வருகைகள் குறையவில்லை. எனவே நாங்கள் சிறப்பாக இயங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முடிந்தமட்டும் நல்ல பாடல்களை சுவை குறையாமல் தர விருப்பம். எனவே இந்த பாடலும் உங்கள் மனம் கவர்ந்த பாடல்தான்.

பாடலின் முதல்வரியைப் பார்த்தவுடனே ஈர்க்கிற வல்லமை பொருந்திய பாடல்களுள் ஒன்று. நம்பிக்கையான வரிகளைக் கொண்டு, கேட்டவுடனே இழுக்கும் மந்திரச் சொற்கள் நிரம்பிய இப்பாடலை எழுதியவர் கவிஞர் பா.விஜய்.

தனது தன்னம்பிக்கை வரிகளாலேயே இப்பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார் கவிஞர். அதேபோல் சின்னக்குயில் சித்ரா அவர்களின் குரல் இப்பாடலுக்கு அத்தனை பாந்தமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்கான இசையமைப்பாளர் பரத்வாஜ். பாடலுக்கான உறுத்தாத எளிய நேர்த்தியான  இசை இன்னொரு தூணாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேற்கோள் காட்டுவதென்றால் இப்பாடலின் பல வரிகளை நாம் குறிப்பிட்டாக வேண்டும். இது பலருக்கும் அறிமுகமான பாடல்தான். பாடலின் சுவையை உணருங்கள். 

படம்: ஆட்டோகிராப்

வரிகள்-பா.விஜய்

பாடியவர்-சித்ரா 

இசை- பரத்வாஜ்

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்

உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விட

bharathwaj chitra pavijay

இப்பாடல் பா.விஜய் அவர்களுக்கும், சித்ரா அவர்களுக்கும் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது (2004). இப்படம் சிறந்த தமிழ் படமாகவும் தேர்வு செய்யப்பட்டது. இப்பாடல் மூலம் இவர்கள் மூவரும் இசைப்பாவிலும் அறிமுகம் ஆகிறார்கள்.

உங்கள் கருத்துக்களும், பங்களிப்புகளும் எப்போதும்போல வரவேற்கப்படுகின்றன. தளத்தை நண்பர்களிடம் பகிருங்கள். குறைகளை, தவறுகளை பதிவு செய்யுங்கள். மாற்றங்களுக்கு தயாராய் இருக்கிறோம்.