கோடையில மழ போல…

கேட்ட உடனே பிடிக்கும் பாடல்களில் இன்னும் ஒன்று, இனிதே இணைகிறது. மறுபடி கேட்க தூண்டும் மாயம் கொண்ட பாடல். குக்கூ படத்தை பற்றி பல வித அதீத எதிர்பார்ப்புகள் உள்ளன. இரு வேறு காரணங்கள். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த வட்டியும் முதலும் ராஜுமுருகனின் முதல் செம்படைப்பு. இரண்டு : கண் தெரியாதவர்களை மையக்கருவாக எடுக்கப்பட்டுள்ள முதல் படம். கதை முழுவதும் அவர்களே. நாயகனும் நாயகியும் அவர்களே என்பதில் தான் சிறப்பு அதிகம் உள்ளது.

பாடல் காதினுள் ஒலிக்க ஆரம்பித்த நொடியிலேயே குரலை கண்டறிந்து ரசித்து, மகிழ ஆரம்பித்து விட்டேன். ஜெ.சி.டேனியல் என்னும் படத்தில் நான் கேட்ட அதே குரல், அந்த பாடல் உருவான கானொளியில் தான் அவர்களை முதலில் பார்த்தேன் : வைக்கம் விஜயலட்சுமி. அவர் பார்வை திறன் இல்லாத, அருமையான பாடகி. என்ன ஒரு குரல் வளம். படைப்பின் விந்தை. பாடலை கேட்டு மனப்பாடம் செய்து, உருகி உருகி பாடி இவர்களால் மட்டுமே முடியும். இப்படி ஒரு படத்தில் இவர் பாடியது சலா பொருத்தம். இவர்களை தேர்வு செய்தவர்களுக்கு நன்றி பல.

இப்படி ஒரு பாடலை எழுதியது யார் என்ற எண்ணம் அடுத்து வந்தது : யுகபாரதி. எதுகை மொவனை, உவமை புலமை எல்லாம் கலந்த உணர்வு மிகு கவி என்றே சொல்லலாம். சிலிர்க்க வைக்கும் வரிகள் தான். வாழ்த்துகள். இன்னும் உங்களிடம், இது போலவே அமிழ் மிகு, தமிழ் பாடல்களை எதிர்பார்கிறோம். மெல்லிய இசையால் பாடலை கைகொடுத்து தூக்கி அமர்த்திய சந்தோஷ் நாராயணன் அவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும்.

நண்பர்களின் கருத்துகள்

தமிழ் : படத்தின் தலைப்பைப் போலவே மென்மையான பாடல். சோக ரசம் தரும் பாடல். எழுதி இசையமைக்கப்பட்ட பாடலைப் போல தோன்றுகிறது. பாடல் வரிகளுக்கான களம் தரும் இசை. மற்ற பாடல்களையும் கேட்கத் தூண்டுகிறார்கள் பாடலாசிரியரும், இசையமைப்பாளரும். முதல் முறை – ஒரு முறை மட்டும் கேட்டு எழுதியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் கேட்டால் நிலை மாறலாம்.

பவானி :  பாடகர்கள் குரல் தெளிவாக உள்ளது. பாடல் வரிகளின் அழகு அருமை. அன்பு கொண்ட உள்ளம் நாட்கள் தாண்டியும் வாழ்வு முடிந்தும் சென்மம் தாண்டியும் வரும்.  உறவுகள் தொடர அன்பே போதும். காலம் மாற நேசம் குறைவது அழகில்லை, காலம் மாற்றம் பெற்றாலும் காதல் மாற்றம் அடையாது.

தமிழின் திருப்புமுனை படைப்புகளில் இதுவும் ஒன்றாக அமைவது திண்ணம். இதோ அந்த பாடல்…

பாடலாசிரியர் : யுகபாரதி 
பாடல் : கோடையில மழ போல…
பாடியவர்கள் : வைக்கம் விஜயலட்சுமி, கல்யாணி நாயர், பிரதீப் குமார்
இசை : சந்தோஷ் நாராயணன்
படம் : குக்கூ 

கோடையில மழ போல
என்னுயிரே நீயிருக்க
வாடையிலும் அனலாக
வருவேன் உன் கூட

காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

போன சென்மத்துல 
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம் 
கூட வரும் உறவோ…?

போன…

காரியம் நூறு செய்து
மண்ணில் வாழ்வது பெரிது இல்லை
உந்தன் காலடி தடமறிந்து
செல்லும் பாதைகள் முடிவதில்லை

ஆலயம் தேடி சென்று
செய்யும் பூசைகள் தேவை இல்லை
உன்னதன் கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும் வருவதில்லை

உறவெது வடிவெதுவோ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

மாறிடும் யாவும் இன்று
சொல்லும் வார்த்தையில் நெசமும் இல்லை
உண்மை காதலை பொருத்தமட்டில்
எந்த மாற்றமும் நிகழ்வதில்லை

ஆசைகள் தீரும் மட்டும்
கொள்ளும் அன்பினில் அழகில்லை
வெந்து போகிற வேலையிலும்
அன்னும் தீ என்றும் அணைவதில்லை

உறவெது வடிவெதுவோ ? – கொண்ட
உறவுகள் உணர்ந்து தொட !
இருளெது ஒளியெதுவோ ? – ரெண்டு
இருதயம் கலந்து விட!

கோடையில மழ போல….

போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ ?
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ…?

குக்ககூவின் குரல் இனியும் இசைப்பாவில் வளம்வரும். வந்த பாருங்கள். இன்பம் கொள்ளுங்கள். பகிர்ந்து மகிழுங்கள்.