தொட்டால் பூ மலரும்

ஞாயிறு வணக்கம்.

ரசனையும், ரசிகனும் ; காலமும், காதலும் ; கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று. இன்றைக்கு.

இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லாம் : வாலி + டீ எம் எஸ் + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இதில் மூவரை இந்த ‘மூன்று பத்து இரண்டாயிரம்’ காலத்தில் காலன் வசம் சென்றனர் என்று சொல்வதை விட,  கற்பக காலத்துல் கலந்தனர் என்றே கூறலாம். என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம்.ஜி.ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி, (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.

படகோட்டி (1964) திரைபடம். மாணிக்கம் (எம்.ஜி.ஆர்) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி. நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என : பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள். படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.

இசை நால்வர்
இசை நால்வர்

எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் “தொட்டால் பூ மலரும்” , எதோ ஒரு சந்த கவிவடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம் (உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்-டுங்கள்) . பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன, அதுவும் நான்கு நான்கு வரிகளில்.  வாலியின் “சொல் விளையாடல்கள்” மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.

இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை. முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ : மெல்லிசை மன்னர்கள்

இந்த படத்தில் வாலி போல், எம்.ஜி.ஆர் போல், டி எம் எஸ் -சும் ஒரு கதாநாயகன் தான். படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம். புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல். இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம், அத்தனையும் முத்துக்கள். இன்றைய காலகட்டத்தில். இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்….

பாடலின் சிறப்பு இன்னும் உண்டு : காட்சியமைப்பு. நீண்ட நெடும் கடற்கரை; தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல். முக உணர்சிகள் காட்டுவதில், கண் அசைவுகளில் சரோஜா தேவி #ஆஹா தான் ! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என கண் கவரும் வகையிலான  பாடல். இறுதியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் #சபாஷ்.

வாலி, ராமமூர்த்தி, டி எம் எஸ் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு ஓரே பாடல் மூலம் இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்துகிறோம். இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம். அன்னார்க்கும் எங்கள் நினைவு அஞ்சலி.

படம்: படகோட்டி (1964) 
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
வரிகள்: வாலி 

ராகம் : சுத்ததன்னியாசி

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்வேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால்…

கண்கள் தொடாமல்
கைகள் படாமல்
காதல் வருவதில்லை ஹோ!
காதல் வருவதில்லை

நேரில் வராமல்
நெஞ்சை தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை

தொட்டால்…

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை

எடுத்து கொண்டாலும்
கொடுத்து சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால்…

பக்கம் இல்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கம் இல்லாமல்
வழங்கி செல்லாமல்
வர்க்கம் தெரிவதில்லை ஹோய்
வர்க்கம் தெரிவதில்லை

தொட்டால்…

பழரச தோட்டம்
பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோய்
ஆயிரம் முகமல்லவா

இசைப்பா +

எம்.ஜி.ஆர்.-சிவாஜி இருவருக்கும் விருப்பமான கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்.எப்பவும் “என்ன ஆண்டவனே” என்று அழைப்பார்.சிவாஜிக்கு வாலி “என்ன வாத்தியாரே!”

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540