கொடுத்தெல்லாம் கொடுத்தான்…

வணக்கம்.

இன்றைக்கு தமிழ் திரையிசையின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார். உலகெங்கும் உள்ள தமிழ் திரையிசை ரசிகர்களும் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இன்றைக்கு இசைப்பா தளத்தில் இடம்பெறும் பாடல் படகோட்டி படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை உருவாக்கிய இசை மேதைகள் அனைவரும் மறைந்துவிட்டார்கள். பொதுவுடைமையை விளக்கும் வாலியின் வரிகள். கம்பீரமான டி எம் எஸ் குரல். வனப்பான மீனவ எம்.ஜி.ஆர். அனைத்தையும் அழகே சேர்க்கும் மெல்லிசை மன்னர்களின் இசை.  காலங்கள் பல சென்றாலும் என்ன?  எந்நாளும் காற்றில் நிலைத்திருக்கமல்லவா இப்பாடல்?

நகைச்சுவை நடிகர் விவேக்கின் கீச்சு ‏@Actor_Vivek – அய்யா! உங்கள் தசை பயணம் நின்று இருக்கலாம்; ஆனால் இசை பயணம் தொடரும்! ஒரு மாபெரும் இசை சாம்ராஜ்யம் சரிந்து விட்டது!! விஸ்வ “நாதம்”!

கவிஞர் வைரமுத்துவின் இரங்கல் (சில வரிகள்) :
மெல்லிசை மன்னரின்
இசைமூச்சு நின்றுவிட்டது
என்று சொல்வதா?

இந்த நூற்றாண்டில்
அதிகமாக வாசிக்கப்பட்ட
ஆர்மோனியம் அடங்கிவிட்டது
என்று சொல்வதா?

ஒரு பாட்டுச் சக்ரவர்த்தி
மறைந்துவிட்டார் என்று சொல்வதா?

எங்கள் பால்ய வயதின் மீது
பால்மழை பொழிந்த மேகம்
கடந்துவிட்டது என்று சொல்வதா?

தமிழ்த் திரையிசைக்குப்
பொற்காலம் தந்தவரே!
போய்விட்டீரா என்று புலம்புகிறேன்

அரை நூற்றாண்டு காலமாய்த்
தமிழர்களைத் தாலாட்டித்
தூங்கவைத்த கலைஞன்
இன்று இறுதியாக உறங்கிவிட்டார்.

அவரது இசை
இன்பத்துக்கு விருந்தானது;
துன்பத்துக்கு மருந்தானது.

அவரது இசை
தமிழின் ஒரு
வார்த்தையைக்கூட உரசியதில்லை.

ஒரு நகைக் கலைஞன்
ஆபரணம் செய்வதற்காக
சுத்தத் தங்கத்தில்
கொஞ்சம் செம்பு கலப்பது மாதிரி
கர்நாடக இசையில்

மேற்கத்திய இசையைப்
பொருத்தமாய்க் கலந்து
புதுமை செய்தவர்.

அவர் தொடாத ராகமில்லை;
தொட்டுத் தொடங்காத பாடலில்லை.

அமிர்தம் பொழிந்த விரல்களே
காற்று மண்டலத்தையே
கட்டியாண்ட விரல்களே !
நீங்கள் தொட்ட உயரத்தை
யாரும் தொடமுடியாது.

பல தலைமுறைகளுக்கு
நீங்கள் நினைக்கப்படுவீர்கள்!!

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை எம்.எஸ்.வி”

அவரை இழந்து
வாடும் குடும்பத்திற்கும்,
உலகம் முழுவதும் உள்ள
அவரது ரசிகர்களுக்கும்
என் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.

MSV with MGR

படம் : படகோட்டி
இசை : மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடலாசிரியர் : வாலிப வாலி
பாடியவர் : டி எம் எஸ்

கொடுத்தெல்லாம் கொடுத்தான் – அவன்
யாருக்காக கொடுத்தான் ?
ஒருத்தருக்கா கொடுத்தான் – இல்லை
ஊருக்காக கொடுத்தான் !

கொடுத்தெல்லாம்…

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா, ஏழை என்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா ?

உனக்காக ஒன்று
எனக்காக ஒன்று, ஒருபோதும்
தெய்வம் கொடுத்ததில்லை!!

கொடுத்தெல்லாம்…

படைத்தவன் மேல்
பழியுமில்லை
பசித்தவன் மேல்
பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டால்
உழைத்தவரகள் தெருவில் நின்றால்

பலர் வாட வாழ
சிலர் வாழ வாழ, ஒருபோதும்
தெய்வம் கொடுத்தில்லை

கொடுத்தெல்லாம்…

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்!
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்!

எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் !

கொடுத்தெல்லாம்…

இசைப்பா +

நம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு (நீராரும் கடலுடுத்த)இசையால் சிறப்பு செய்தவர் எம்.எஸ்.வி.

இசைப்பாவில் வந்த எம்.எஸ்.வி-யின் பிற பாடல்களுடன் மகிழ, நினைவு கூற சொடுக்கவும் :

MSV Irangal

ஒருகிளி ஒருகிளி

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கங்கள்,

            இன்று இடம் பெற இருக்கும் பாடல் காதல் கலந்த வரிகள் கொண்ட பாடல். வாலி அவர்கள் வரிகளோடு இசை மெருகேற…  காதல் வரிகளில் நனையலாம். மிகவும் பிரபலாமாகாவிட்டாலும், பாடல் கேட்க மென்மையும் அருமையாக இருக்கிறது. ஸ்ரேயா கோஷல் மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி பாடிய பாடல் “ஒருகிளி ஒருகிளி “, இடம் பெற்ற படம் “லீலை“. இந்த பாடலை லூப்பில் போட்டு கேட்க சலிப்பே வராது .

      ஹீரோ நாயகிமீது காதல் கொண்டு அவளை சுற்றுகிறான், அவளும் தன் காதலை அவனிடம் கூறி வியந்து, உருகி மெழுகாக பாடுவது போல் அமைக்கப் பெற்றுள்ளது. குரலின் மென்மை வேறுலக்திற்கே அழைத்து செல்வது போல் உள்ளது பாடலை ரசிப்போம் வாருங்களேன்..

vaali

படம் : லீலை
இசை : சதீஷ் சக்கரவர்த்தி
பாடலாசிரியர் : வாலி
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல் , சதீஷ் சக்கரவர்த்தி

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி
உன்னைத் தொடவே அனுமதி

ஒரு துளி ஒரு துளி
வழிகிறதே விழிவழி

உனக்குள் நான் வாழும்
விவரம் தான் கண்டு
வியக்கிறேன் ..வியக்கிறேன்

எனக்கு நானல்ல
உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலென தொடர்கிறேன்

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி ….

விழி அல்ல விரலெது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது
உனக்குத்தான் உரியது…

இமைகளில் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளில் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்..

காதல் தான்….
எந்நாளும் ஒரு வாரத்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது

ஒருகிளி ஒருகிளி….

தூரத்து மேகத்தை
துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே …
உன்னை எண்ணி நான்
தேடி வருவேன் இங்கே..

பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல்லெறிந்தாய்
தேங்கினேன் உன்கையில்
வழங்கினேன் இன்றே….

தோழியே உன் தேகமென்னும்
தென்றல் தான் தொடாததோ…

தோழனே உன் கைகள் தொட
நாணம் தான் விடாததோ

ஒருகிளி ஒருகிளி…

 

 இனிய பாடலுடன் மீண்டும் சிந்திப்போம் !

எனக்காக பொறந்தாயே …

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கங்கள்,

இன்று இடம் பெற இருக்கும் பாடல் காதல் கலந்த வரிகள் கொண்டவை.  வாலி  அவர்கள் காவிய கவி நடையுடன் இசை மெருகேற…பாடல் ரம்மியமாய் அமைத்துள்ளது. மிகவும் பிரபலாமாகாவிட்டாலும் பாடல் கேட்க மென்மையும் அருமையாக இருக்கிறது. பாடல் இடம் பெற்ற படம் பண்ணையாரு பத்மினியும்,பாடல் எனக்காக பொறந்தேனே எனதழகி.

காதலுக்கு காலம் இல்லை ! வயசும் இல்லை ! என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.. வரிகள் மொத்தம் அருமை.. பின்னணி இசை மற்றும்  பாடியவர்கள் என்று அனைத்தும், கேட்டவுடன் வசீகரிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.

மனைவியானவளை காதலிக்க பெரும்பாலும் நேரம் கிடைக்காவிடினும் ..சின்ன சின்ன சந்தர்பங்களை ஆண்கள் அழகாக கையாளுவர். வாழ்க்கை பயணம் தொடர காதல் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். சொல்லி கொண்டே போகலாம் காதலைப் பற்றி.. எஸ் பி பி-யின் இளைய சாரீரம் போல் ஒலிக்கிறது சரணின் குரல்.

***

(ஜி-பிளஸ் வட்டத்தில்) தமிழ் எழுதியது : 

படம் பார்த்து விட்டு வந்த பிறகு  “ஒனக்காக பொறந்தேனே” பாட்டைக் கேட்க நினைத்தேன்… மடிகணினியில் எங்கோ ஓர் மூலையில் கிடந்த அந்த கோப்பை (!) எடுத்து ஒலிக்க விட்டேன்

முதல் முறை மெல்லிய வசீகரமாக இருந்தது. மீண்டும் கேட்கத் தூண்டும் இசை. மீண்டும் மீண்டும் கேட்டவுடன் வரிகளை விட்டுவிட்டு இசையை மட்டும் உன்னிப்பாகக் கேட்டேன். என்னளவில் உணர்ந்த ஒரு விஷயம் சரியோ தப்போ தெரியவில்லை.. ஆனால் அசந்தேவிட்டேன்…

பாடலின் முதல் இடையிசையைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படியே MSV காலத்திற்கான tribute! அதைவிட ஆச்சர்யம் இரண்டாவது இடையிசை… அப்படியே ராஜா’ங்கம்! இரண்டு இடையிசைகளிலுமே கோரஸ் இருக்கும்…ஆனால் இரண்டிலும் பெரும் வித்தியாசம் இருக்கும்.. ….இரண்டாவதில் 80-களின் லாலாலா…. இரண்டாவதில் புல்லாங்குழல் உபயோகம் சான்ஸே இல்லை!! அற்புதம்! அதிலும் அதைத் தொடர்ந்து வரும் பீட் அப்படியே 80-களின் ராஜா…

***

இங்கே இதனை அவரிடம் (தமிழிடம்) அனுமதி பெறாமலேயே பதிவு செய்கிறோம், எங்கள் நோக்கம் இசையை அவரைப் போல சரியா ரசிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பது. ஒரு காலம் சார்ந்த படத்துக்கு, மிக சரியான இசையப் பொருத்திய ஜஸ்டின் அவர்களை வாழ்த்த வேணும். பாடலை ரசிக்கலாம் வாருங்கள்.

பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
படம் :பண்ணையாரும் பாத்மினியும்
இசை :ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர் : வாலி 

பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி

அ…….அ………ஆ…….

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !

எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?

போகாது உன்னோட பாசம் !

எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்

லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்

ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு

உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்

இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்

உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்

உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு

நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !

ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…

நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்

நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா

பிரியாம இருப்பேனே பகல் இரவா

(கோரஸ்)

உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
தன்னனனான தன்னனான
நன்னானானனான…

இப்பாடலைப் போல் “உனக்காக பிறந்தேனே ” என்ற பாடலும் இதே படத்தில் அமைந்துள்ளது விரைவில் பதிவாக இசைப்பாவில் இடம் பெறலாம்.

லேசா லேசா…

கவிஞர் வாலி காற்றோடு கரைந்து சரியாக ஒரு வருடமாகிவிட்டது. இன்னுமின்னும் அவரது கடைசி பாடல்கள் வெளிவர உள்ளன. இசைப்பா அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வாலி வாரம் ஏற்படுத்துயது. பல பரிணாமங்கள் கொண்ட அவரது பாடல்கள், வரிசையாக இங்கு வெளிவந்தன. (சொடுக்கவும்) இன்றும் அவரது பாடல்கள் நம்மை இன்பம் கொள்ளசெய்கின்றன. கவிஞர் நெல்லை ஜெயந்தா அவரது பண்புகள் பற்றி எழுதி இருக்கிறார் -> வாசிக்கவும்

வாலியின் வாழ்வு
வாலியின் வாழ்வு

லேசா லேசா என்னும் படத்தில் வரும் அற்புதமான பாடல், படத்தில் எங்கும் பெரிதாக பயன்படாமல், பல உணர்வுகளை குவிக்கும் பாடல். காதலன் வருகைக்காக நாயகி காத்திருக்கும் பாங்கில் அமைந்த வரிகள். அவனது வருகைக்காக ஏங்கி நிற்கும் மனதில், அவள் படும் பாடும், அவன் செய்ய வேண்டிய செயலும் ஒருங்கே நிற்கிறது. ரசிக்க வைக்கும் ஏக்கம் என்றே சொல்ல வேண்டும். சாக்ஸபோன் கொண்டு Intredules பல இந்த பாடலில் உள்ளன. மனதின் ஆழத்தின் அடிவாரத்தில் உள்ள சோகத்தை காற்றின் அலைகள் கொண்டு மேல் எழ செய்கிறது, இசை என்னும் சோம பானம். ஹாரிஸ் ஜெயராஜ், அனுராதா ஸ்ரீராமை சரியாக தெரிவு செய்துள்ளார். காணொளி, பாடலை கெடுக்காமல், அதே சமயம் மங்கையின் உணர்வை தொட்டு, திருமுகத்தை மறைத்து அமைந்துள்ளது. பெண்ணின் பொதுப்படையான வெளிபாடு போலும்.

படம் : லேசா லேசா
பாடல் : லேசா லேசா
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடலாசிரியர் : வாலிப வாலி  
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

லேசா லேசா – நீ
இல்லாமல் வாழ்வது
லேசா லேசா…

லேசா லேசா…
நீண்ட கால உறவிது
லேசா ?

காதல் தேவன்
கோவில் தேடி
வருகிறதே…
விரைவினிலே…
கலர்கலர் கனவுகள்
விழிகளிலே…
உனக்கெனவே…
உலகினிலே…
பிறந்தவளே !

லேசா லேசா…

நான் தூங்கி நாளாச்சு
நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை
கொன்று வதைக்கிறதே

சொல்லாமல் ஏக்கம்
என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன்
வண்ணம் தெரிகிறதே…
விரிகிறதே…

தனிமையில் இருக்கையில்
எரிகிறதே..
பனி இரவும்
அனல் மழையை
பொழிகிறதே…

லேசா லேசா…

வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுகாற்று
உனைதல்லவா !

உன் தேகம்
ஓடும் ரத்தம்
எனதல்லவா !

வெவ்வேறு…

நீ என்றால்
நான் தானென்று
உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரில்
உயிர் கரைய
உடனடியாய்…
உதடுகளால்…
உயிலெழுது…

லேசா லேசா…

இன்னும் இன்னும் இனிய பாடல்கள், வலம் வர காத்துக்கொண்ட்டே இருக்கிறது. விரைவில் சந்திப்போம், தமிழை சிந்திப்போம்.

isaipaa vaali

காற்றில் வரும் கீதமே…

இசை பிரியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே என்றொரு தமிழ்த் திரைப்படப் பாடல் வரி உண்டு. ‘புஷ்பேஷு ஜாதி’ என்றொரு சொற்றொடர் வடமொழியில் உள்ளது. அதன் பொருள் பூக்களில் உயர்ந்தது ஜாதி என்பதாகும். இந்தப் பாடலில், தலைவன் தலைவியை சாதிமல்லிப் பூச்சரமே என்கிறான். மலர்களில் உயர்ந்த மலர் போன்றவள் நீ என்று சொல்லிவிட்ட பிறகு வருகிற அதற்கு அடுத்த வரி இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சங்கத் தமிழ் பாச்சரமே என்கிறான். தமிழே இனிமை, சங்கத்தமிழ் அதனினும் இனிமை. அப்படிப்பட்ட சங்கத்தமிழில் இயற்றப்பட்ட பாடல் நீ, அதுவும் ஒரு பாடல் இல்லை, பல பாடல்களைக் கொண்ட சரம் நீ என்கிறான்.

குழலுடன் கண்ணன்அருமையான ஓசை நயம் கொண்ட, கேட்பதர்க்கினிய ராகத்தில் அமைந்த சங்கத் தமிழ் பாடல்களுக்கு இணையான பாடல்கள் சில தமிழ் திரைப்படங்களில் அமைந்து விடுவது உண்டு. ஒருநாள் ஒரு கனவு என்கிற ஓரிருநாள் மட்டுமே ஓடிய ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வளமையான வரிகள் கொண்ட ‘காற்றில் வரும் கீதம்’ என்கிற பாடல் நான் மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடல்களில் சேரும்.

சொட்டும் பக்திரசமாகட்டும், பைந்தமிழ் வரிகளாகட்டும், செவிக்கினியதோர் மதுரமான ராகமாகட்டும்…. எல்லா விதங்களிலும் இப்பாடல் ஒரு அற்புதமான தமிழ்ப் பாசுரத்திற்கு நிகரானது.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இளையராஜாவின் வேறு சில குறிப்பிட தகுந்த பாடல்கள் : அம்மா என்றழைக்காத… *மன்னன் ; சுந்தரி கண்ணால் ஒரு சேதி… *தளபதி. பாடல் உருவான விதம், ராஜாவும் வாலியும் மேற்கொண்ட உரையாடல் சுவையானது. நீங்களும் கேளுங்கள் :

கதையின் நாயகி கதாநாயகனின் இல்லத்துக்கு முதல் முறையாக வருகிறாள். பக்தனின் பாடல் கேட்டுத் தாழ் திறந்த ஆலய மணிக் கதவைப்போல் ஒரு பாடலோடு திறக்கிறது கதாநாயகனின் வீடு. ஒரு பாடலைக் கடனே என்று பாடாமல் இறைவனுக்கும் நமக்குமான பரிபாஷையே இசைதான் என்கிற உணர்வோடு, பாடலில் லயித்து ஆத்மார்த்தமாகப் பாடுவதை, பெரியோர் ‘நாத உபாசனை’ என்பார்கள். அப்படி இசையையே இறையாக எண்ணி வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்து இருக்கறது இப்பாடல். கண்ணனை வர்ணிக்கத் துவங்கினாலும் இப்பாடல் இசை என்கிற கண்ணனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள பாலத்தை சொற்களால் அலங்கரிக்கிறது.

பாடலாசிரியர்: வாலி
படம்: ஒரு நாள் ஒரு கனவு 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி 
ராகம் : கல்யாணி

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

கவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் ஆக்கியோர்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம், ஷ்ரேயா கோஷல் மற்றும் பவதாரணி ஆகியோர். இறுதியில் வரும் கல்யாணி ராகத்தின் ஆலாபனை  மட்டுமே ரசிக்க.  பாடலின் சுட்டி கீழே:

இசைப்பா முதலாம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்கிறோம். அதன் பொருட்டு சிறந்த பாடல்களின் சிறப்பு வரிசை இந்த பாடலுடன், இனிப்பு தீபாவளியுடன், இளையராஜாவுடன், இன்ப வாலியுடன், இசையுடன், இறையுடன் தொடங்குகிறது !

மேலும் உங்கள் வரவுக்கு நன்றி. தளம் மேம்பட உங்கள் கருத்துகளை சொல்லலாமே. நீங்களும் பங்கு பெறலாம், பகிரலாம் 🙂

முன்பே வா… என் அன்பே வா!

இனிமையான இசை வணக்கம்.

எடுத்து ஓர் அம்பை எய்வதற்குச்  சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!
எடுத்து ஓர் அம்பை எய்வதற்கு
சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!

இன்று வாலி பிறந்த நாள். சிறப்பு பதிவு இடலாம் என்று எண்ணியவுடன் இப்படல் மனதினுள் வந்தது. சமீபத்திய திரைப்பாடல்களைக் கேட்கிற எல்லோருக்கும் விருப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். இப்பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. எனினும் முக்கியமானது. கவிஞர் வாலிக்குப் பிடித்த வாலியின் பாடல் என்ற பெயர் பெற்ற பாடல் இதுவாகும். தான் எழுதியதில் தனக்குப் பிடித்த பாடல்கள் என இரு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் வாலி. அதில் இடம்பெற்ற பிற்காலத் தமிழ்ப்பாடல் இதுவாகும். காட்சியமைப்பிலும், இசையமைப்பிலும்.

இப்பாடலுக்கு போட்ட மெட்டின் அடிப்படையில் வாலி “அன்பே வா… என் முன்பே வா!” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா!” என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.

ஏன் மாற்ற வேண்டும்? வாலிக்கும், ரஹ்மானுக்குமான  ஹிட் ரகசியம் அது! இருவரும் இணைந்த பாடல்களில் ஹிட் அடித்த பாடல்களில் ‘மகர’ வருக்கத்தில் அமைந்த பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தவை. (உதா: முக்காபுலா, மயிலிறகே,….) (மற்ற பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடவும்.) இப்பாடலும் அதே அளவு ஹிட் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உருவான பாடல்.

எதிர்பார்ப்பிற்கும் மேலான வெற்றியடைந்த பாடல் இது. காரணம்? பாடகர்களின் வசீகரிக்கும் குரலும், அதைக் காட்டிலும் வசீகரிக்கும் இசையும், அதை சிறப்பான காட்சியமைப்பால் திரையில் காண்பித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என ஒரு குழுவே இப்பாடலின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

கவிஞர் வாலி, ரஹ்மான், ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர் என பணியாற்றிய அனைவரின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறும் இனிய பாடல் இது. வேறென்ன வேண்டும். வாலியின் உடலுக்கு மட்டும்தான் இறப்பு. வரிகளுக்கல்ல என்பதை இன்னுமொரு முறை அழுத்தமாக எடுத்துரைக்கும் பாடல் இது. பாடலை ரசியுங்கள்.

பாடலாசிரியர்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்

முன்பே வா என் அன்பே வா!
ஊனே வா  உயிரே வா!
முன்பே வா என் அன்பே வா!
பூப்பூவாய்ப் பூப்போம் வா!

நான் நானா? கேட்டேன் என்னை நானே!
நான் நீயா? நெஞ்சம் சொன்னதே!

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி வளையல் சத்தம்
ஜல்ஜல்

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன!

பூவைத் தாய்ப் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூவைத்துப் பூவைத்துப்
பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓ!

தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீனாய்… ம்ம்ம்ம்ம்

(முன்பே வா….)

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்

 ( முன்பே வா)

(ரங்கோ ரங்கோலி)

இசைப்பா +
இப்படத்தின்  அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலிதான்

பா.விஜய்யின் இரங்கற் பாவில் இருந்து..

கடல்போல் பாட்டு இயற்றியும்
கடல் தாண்டா கவியே…..
உடல் தாண்டித்தான் போயிருக்கிறாய்
உயிர் எங்கள் வசமே!

இசைப்பாவில் வந்த வாலியின் பிற பாடல்களுடன் மகிழ சொடுக்கவும் :

cooltext1123981540

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்

வாலி என்னும் அற்புதக் கலைஞன் – கவிஞன்

வாழ்க வாலி !
வாழ்க வாலி !

திருச்சி ரயில் நிலையம். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை அணுகுகிறார் ஒரு இளைஞர். அவரது கையில் அவர் எழுதிய பாடல் அடங்கிய தாள். அந்த வண்டியில் உட்கார்ந்திருக்கும் பிரபலப் பின்னணிப் பாடகரை தயங்கித் தயங்கி அணுகி, தான் எழுதிய பாடலைக் காண்பிக்கிறார். வாங்கிப் பார்த்த பிரபல பாடகருக்கு முகம் மலருகிறது. அவருக்குப் பிடித்த அழகன் முருகனைப் பற்றிய பாடல். அங்கேயே இசை அமைத்து பாடலை மெல்லப் பாடிப் பார்க்கிறார். பாடலில் உள்ள சந்தம் கருத்தைக் கவர்ந்தது.

ஆரம்ப வரிகளே மனதை கொள்ளை கொண்டது:

‘கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’

பாடல் மிகவும் படித்துப் போக தானே இசையமைத்து பாடினார் டி.எம்.எஸ்.

அந்த இளைஞர் திரு வாலி. பிரபலப் பாடகர் : திரு டி.எம்.எஸ். இன்று இந்த இருவருமே இல்லை. ஆனாலும் அவர் எழுதி இவர் பாடிய பாடல் என்றென்றைக்கும் தமிழ் கூறும் நல்ல நெஞ்சங்கள் எல்லாவற்றிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

வாலி தான் எழுதிய பக்திப் பாடல்களால் புகழ் பெறவில்லை என்றாலும் அவருக்கு அதுவும் கைவந்த கலைதான். அவதார புருஷன், கிருஷ்ண விஜயம் ஆகியவை அவர் எழுதிய பக்தி கதைகள். அதிலும் அவர் தனது தனி முத்திரையைப் பதித்தார்.

இராமாயணம் பற்றி சொல்லும்போது எழுதுகிறார்:

தனக்கு பிடித்தமானதை
பிடித்துத் தருவான் என்று
தனக்கு பிடித்த மான் அதை
கேட்டாள் !

என்ன ஒரு வியக்க வைக்கும் சொல்லாடல் பாருங்கள்!

வாலிக்கு முருகன் மேல் தீராத பக்தி. எப்போதும் முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே இருப்பார். முருகன் பாடல்கள் என்றால் எழுதுவதற்கு முதலிடம் கொடுப்பார்.

பாடல்: கற்பனை என்றாலும்
எழுதியவர்: வாலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ராகம்: ஹிந்தோளம்
தாளம்: ஆதி

பல்லவி :
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன் – நீ (கற்பனை)

அனுபல்லவி:
அற்புதமாகிய அருட்பெரும் சுடரே
அருமறை தேடிடும் கருணையின் கடலே –நீ சரணம்:

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே (கற்பனை)

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பதை எத்தனை எளிமையாக விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

பாடல் வரிகளுக்கு தன் ‘கணீர்’ குரலால் உயிர் கொடுத்திருக்கிறார் டிஎம்எஸ்.

இந்தப் பாடல் இறவா வரம் பெற்ற பாடல்.

இசைப்பா இந்தப் பாடல் மூலம் திரு வாலிக்கு தன் அஞ்சலியை பகிர்ந்து கொள்ளுகிறது.

இசைப்பா +

`எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில்
எமனும் ஒருவன்.

ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான்’ –
கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!

இறையுடன் இணைத்த இயல்பு கவிஞர் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து ஏழு நாட்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து, அஞ்சலி செலுத்தும் முறையில் இசைப்பாவில் தந்தமைக்கு பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவரது பாக்கள் பல இன்னும் வர உள்ளன.  எங்களை ஊக்குவித்த இசை மற்றும் வாலி நேசகர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்.

இசைப்பா குழுவினர்

இசைப்பாவில் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540