நீ கோரினால் வானம் மாறாதா!

வணக்கம்.

தலைப்பைப் பார்த்ததும் ஈர்க்கக் கூடிய ஒரு பாடல். சென்ற ஆண்டின் (2012) மிகப்பெரிய வெற்றிப் பாடல்களுள் ஒன்று. பாடல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் இன்னும் கொள்ளை அழகு. தமிழில் இசையமைப்பாளரின் முதல் படம்.  பாடல்களில் வித்தியாசமான ஒலிகளை எழுப்ப மிகவும் முயற்சித்திருக்கிறார். அத்தனை அழகாக இசையும் பாடல் வரிகளோடு இணைந்து வசீகரிக்கும்படி அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

karkyபாடலாசிரியர் கார்க்கியின் (மதன் கார்க்கி) பாடல் ஒன்று இசைப்பா-வில் இடம்பெறுவது இதுவே முதல் முறை. இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் மகன் என்பது தெரிந்த ஒன்று. தமிழ் பாடலாசிரியர்களில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் பாடல் எழுதுவது இவர் ஒருவர்தான். இதே காரணத்தால் இதுவரை தமிழ் திரையில் பயன்படுத்தாத வார்த்தைகள் யாவும் இவர் பாடல்களில் விழுகின்றன. குவியம்,வளைகோடு, etc உதாரணங்கள்.

180பாடலின் துவக்கத்தில் வரும் ஹம்மிங்-கிலேயே ஈர்க்கத் தொடங்கிடும் இப்பாடல் அளவில் சிறியதாக இருக்கிறது. இருபொருள் தொனிக்கும் வகையில் புதிராக-புதிருக்கு விடையாக வரிகள் அமைந்துள்ளன. பாடலின் காட்சியமைப்பு அத்தனை குளிர்ச்சியாக, அழகியலோடு இருக்கும்.

  இசைப்பா +

180 தான்  HD காமிரா-வில்  (டிஜிட்டல் முறையில்) எடுக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம்.

பாடல்: நீ கோரினால்
படம்: 180
பாடலாசிரியர்: கார்க்கி
இசை: ஷரத்
பாடியவர்கள்: கார்த்திக்,ஸ்வேதா

நீ கோரினால்
வானம் மாறாதா! – தினம்
தீராமலே
மேகம் தூறாதா!

தீயே இன்றியே – நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!

கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.

போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.

பாடல் குறித்த உங்கள் கருத்துகள், திருத்தங்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் மனம் கவர்ந்த பாடல் இங்கு இடம் பெற விரும்பினால் மறுமொழி இடுங்கள். பங்களிக்க ஆர்வமாய் இருப்பவர்களையும் வரவேற்க தயாராக உள்ளோம்.

கண்டேன் கண்டேன்!

இசையோடு இசைபவர்களுக்கு வணக்கம்.

தொடர்ந்து காதலின் பரிமாணங்களைக் காட்டும் பாடல்கள் இசைப்பாவில் உங்கள் ஆதரவின் காரணமாக தொடர்ச்சியாக வருகின்றன. அந்த வகையில் இன்றும் ஒரு பாடல் புதுரகமாய்!

இன்றைய பாடலை எழுதியவர் கவிஞர் யுகபாரதி. பல்லாங்குழியின்… பாடலில் இருந்து தொடங்கிய இவரது பயணம் கும்கியில் உச்சம் தொட்டதை நாம் அறிவோம். இவருக்கு இந்த பாடல் மூலம் இசைப்பாவில் அறிமுகம்.

தமிழில் இலக்கணத்தை மையப்படுத்தி இப்போதெல்லாம் பாடல்கள் வருவதாகத் தோன்றவில்லை. ஆனால் பிரிவோம் சந்திப்போம் படத்தின் பாடல்களின் சுவையை இலக்கணத்தோடும் சுவைக்க முடிவதுதான் ஆச்சர்யம்.

அடுக்குத்தொடர் என்பார்கள். ஒரே வார்த்தை இரண்டுமுறை தொடர்ந்து அடுத்தடுத்து (இதுவும் அடுக்குத் தொடர்தான்!) வரவேண்டும். அந்த வார்த்தைக்கு அர்த்தம் இருக்க வேண்டும். (அர்த்தம் இல்லாவிட்டால் அது இரட்டைக்கிளவி (சலசல, தடதட…) )

போதும் இலக்கணம். பாடல் காதலர்களின் மனப்போக்கை எடுத்துக்க்காட்டுவதைப்போல் அமைந்துள்ளது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் மீது பாடுகின்றனர். சுவையான பாடல்தான். இசையும், வரிகளும் மாறி மாறி (அடுக்குத்தொடர்!!) ஆட்கொள்ளும் என நம்புகிறோம்.

ஒரு சோறு பதம்:

ஆ: பேசாத பேச்செல்லாம் பேசப் பேச நிம்மதி

பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி

படம்: பிரிவோம் சந்திப்போம்.

பாடல்: கண்டேன் கண்டேன்

எழுதியவர்: யுகபாரதி

பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வேதா

ஆண்:கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை!
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை!
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்! எதிரே….எதிரே!

பெண்: பிள்ளை மொழி சொல்லை விட,
ஒற்றைப் பனைக் கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

(கண்டேன் கண்டேன்…)

ஆ:மோதும் மோதும் கொலுசொலி
ஏங்கும் ஏங்கும் மனசொலியை
பேசுதே!
பெ:போதும் போதும் இதுவரை
யாரும் கூறா புகழுரையே
கூசுதே!
ஆ: பேசாத பேச்செல்லாம் பேசப் பேச நிம்மதி
பெ: பேசாது போனாலும் நீ என் சங்கதி
ஆ:கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை……..அவளை அவளை அவளை அவளை

(கண்டேன் கண்டேன்…)

பெ:காணும் காணும் இருவிழி
காதல் பேச இமைகளிலே
கவிதைப் படி!
ஆ:ஏதோ ஏதோ ஒருவித
ஆசை தோன்ற தனிமையிது
கொடுமையடி!
பெ: நீங்காமல் நாம் சேர நீளமாகும் நிம்மதி!
ஆ: தூங்காமல் கை சேர காதல் தங்குமே!
பெ:ரெட்டைக் கனி உச்சத்திலே! நெஞ்சுக்குழி வெப்பத்திலே!
சுட்டித் தரும் வெட்கத்திலே….. அடடா அடடா அடடா அடடா!!

வித்யாசாகர்

யுகபாரதிஇந்த பாடலுக்கும்(!) இசை வித்யாசாகர் அவர்கள். எங்களுக்கு பெரும் ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் தேர்ந்தெடுத்த பல பாடல்கள் வித்யாசாகர் அவர்கலின் கைவண்ணம்தான்! இருப்பினும் மற்றவர்களுக்குமான வாய்ப்பு (!!) இசைப்பாவில் வரும். அதற்குத் தேவையெல்லாம் உங்களின் அழகிய காத்திருப்புதான்! நாங்களும் காத்திருக்கிறோம். உங்களின் கருத்துகள்/பங்களிப்புகள்/ஆலோசனைகளுக்காக.