குல்முகர் மலரே…

இசை வணக்கங்கள் ,

                   கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளை ஒட்டி  தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவரின் பாடல்கள் இசைப்பாவில் இடம்பெற உள்ளது..இன்று காணவிருக்கும் பாடல் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்ட- ரசித்து கொண்டே இருக்கும் பாடல் . பாடல் இடம் பெற்ற படம் “மஜ்னு” – பாடல் “குல்முகர் மலரே..குல்முகர் மலரே..” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. வரிகளில் உள்ள உணர்வுகள் பாடல்களை மெருகேற்றி அழகாக்கியுள்ளது. பாடியவர்கள் குரலும் மனதை வருடுகிறது.

vairamuthu 60

                  என் இசைபட்டியலில் பெரும்பாலான பாடல்கள் வைரமுத்து அவர்களில் பாடல்கள் இடம் பெறுவது வழக்கம்.மிகவும் அழகான வரிகளில் காதல் என்னும் மாலையை  வார்த்தைகள் என்னும் பூக்களால் தொடுத்துள்ளார் கவிஞர்.

                    மலர்கள் மென்மையாக இருப்பது வழக்கம். மென்மை கொண்ட மலர் தன்னை கொலை செய்வதாக தன் காதலியை கூறுகிறான்.  தன் இரவை மை இட்டுக்கொல்கிறாள் என்றும் தன்னை கவிஞன் ஆக்க வேண்டாம் என்றும் அழகிய வரிகளில் காதல் ததும்ப வரிகள் அமைத்து இருக்கிறார் கவிஞர். வாருங்களேன் இசை கொண்டு வரிகளில் நனையலாம்..

படம்:மஜ்னு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன் ,டிம்மி ,அனுபமா
பாடலாசிரியர் : வைரமுத்து

மலரே மலரே மலரே
மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில்
மனதில் முகவரி என்ன
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோ

குல்முகர் மலரே
குல்முகர் மலரே
கொல்ல பாக்காதே
உன் துப்பட்டாவில் என்னை
கட்டி தூக்கில் போடாதே

(குல்முகர் மலரே குல்முகர் மலரே …)

தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே ….
மலரின் தொழிலே
உயிரை கொல்லுவதில்லையடி
மனிதன் உயிரை கொன்றால்
அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

குல்முகர் மலரே…மலரே மலரே

உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க விழியில்லை
என்று கண்களை பறிக்காதே
என் இரவை எடுத்துக் குழைத்துக்
குழைத்து கண் மை பூசாதே

என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆகாதே(2)…

குல்முகர் மலரே….

உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம் மூட்டுகிராய்
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்

மௌனம் என்பது உறவா பகையா
வயது தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே
ஏனடி பெட்ரோல் ஊத்துகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..

மலரே மலரே…..

மலரே மலரே குல்முகர் மலரே…….

வைரமுத்து வாரம் தொடர்கிறது. நாளையொரு முத்தான பாடலுடன், இணைவோம். இசை எங்கும் பரவட்டும்.

vairamuthu click

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா!

இசை வணக்கம்.

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாடல்களை ரசிப்பார்கள். நாங்கள் தும்கூரில் இருந்தபோது என்னுடன் ஆசிரியை ஆக இருந்த  தோழி உமா ‘கேளடி கண்மணி’ படத்தில் வரும் ‘நீ பாதி, நான் பாதி’ பாடலை எப்படி ரசிப்பார் தெரியுமா?

அவர் சொல்வார்: ‘இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று அந்த ‘கண்ணே’ வை அப்படியே காற்றில் ஊதி விடுவதுபோலப் பாடுவார். அது அப்படியே மிதந்து கொண்டு நிற்கும்’ இப்படிக் கூட பாடலை ரசிக்க முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தியவர் உமா. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தவறாமல் இவரை நினைத்துக் கொள்ளுவேன்.

பொதுவாக பாடல் பாடும்போது கடைசி வார்த்தையை கொஞ்சம் இழுத்தாற்போல பாடி முடிப்பார்கள். இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அப்படி இழுக்காமல் அந்த வார்த்தையை அப்படியே விட்டுவிடுவார். மிகத் திறமை வாய்ந்த, இசையை தன் வசம் கொண்டு வர ரொம்பவும் கடுமையாக உழைத்த ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்.

இவரைப் போலவே குரலை தன் வசப்படுத்தி, தன் பாட்டு மூலம் கேட்பவர்களை தன்வயப்படுத்தும் இன்னொரு பாடகர்  நான் மிகவும் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திரு ஹரிஹரன்.

இன்றைய இசைப்பாவில் நான் பகிரப்போகும் பாடல் ‘சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.

பாடலின் ஆரம்பத்தில் குழைவான குரலில் ஆரம்பிக்கும் பாடல். போகப்போக வார்த்தைகளின் பொருளுக்குத் தகுந்தாற்போல குரலை ஏற்றியும், இறக்கியும் பாடும் அழகே அழகு. ‘சாத்திரம் பேசுகிறாய், கண்ணம்மா, (குழையும் குரல்) சாத்திரம் ஏதுக்கடி? (குரல் விரிய ஆரம்பிக்கும்.) ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி? (குரலின் முழு வீச்சில் பாடுவார்) மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் (குரல் இறங்கும்) காத்திருப்பேனோடி இதுபார் கன்னத்தில் முத்தம் ஒன்று (காத்திருக்காமல் கொடுத்தே விட்டாரோ என்று தோன்றும்!)

இப்படி ஒரு பாடலை ரசிக்க சொல்லித் தந்த என் தோழி உமாவிற்கு இந்தப் பாடலை தீபாவளிப் பரிசாக அளிக்கிறேன்.

சின்ன வயதில் நாங்கள் இந்தப் பாடலை வேறு ஒரு ராகத்தில் எங்கள் அம்மாவிடம் கற்றிருக்கிறோம். அந்த வயதில் எனக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்

‘பட்டுக் கருநீல புடவை பதித்த நல்வயிரம்’

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

இன்றைக்கும் எப்போதாவது நகரத்தை விட்டு வெளியிடத்தில் போய் நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்க்கும்போது இந்த வரிகள் நினைவுக்கு வரும்.

பாடல்: சுட்டும்விழி சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர்: மகாகவி பாரதியார்
இசை: A.R. ரஹ்மான்|
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடியவர்: ஹரிஹரன்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

இசைப்பா +

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 1811-ல் வெளியான பிரபலமான sense and sensibility நாவலின் தழுவிய வடிவம் என்றொரு கருத்து உண்டு.

பாடல் பிடித்திருக்கிறதா? இவையும் உங்களுக்குப் பிடிக்கக் கூடும்

என்ன சொல்லப் போகிறாய்?

இசைப்பாவில் இதுவரை பதிவான இதர ரஹ்மான் பாடல்கள்

காற்றில் வரும் கீதமே…

இசை பிரியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே என்றொரு தமிழ்த் திரைப்படப் பாடல் வரி உண்டு. ‘புஷ்பேஷு ஜாதி’ என்றொரு சொற்றொடர் வடமொழியில் உள்ளது. அதன் பொருள் பூக்களில் உயர்ந்தது ஜாதி என்பதாகும். இந்தப் பாடலில், தலைவன் தலைவியை சாதிமல்லிப் பூச்சரமே என்கிறான். மலர்களில் உயர்ந்த மலர் போன்றவள் நீ என்று சொல்லிவிட்ட பிறகு வருகிற அதற்கு அடுத்த வரி இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சங்கத் தமிழ் பாச்சரமே என்கிறான். தமிழே இனிமை, சங்கத்தமிழ் அதனினும் இனிமை. அப்படிப்பட்ட சங்கத்தமிழில் இயற்றப்பட்ட பாடல் நீ, அதுவும் ஒரு பாடல் இல்லை, பல பாடல்களைக் கொண்ட சரம் நீ என்கிறான்.

குழலுடன் கண்ணன்அருமையான ஓசை நயம் கொண்ட, கேட்பதர்க்கினிய ராகத்தில் அமைந்த சங்கத் தமிழ் பாடல்களுக்கு இணையான பாடல்கள் சில தமிழ் திரைப்படங்களில் அமைந்து விடுவது உண்டு. ஒருநாள் ஒரு கனவு என்கிற ஓரிருநாள் மட்டுமே ஓடிய ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வளமையான வரிகள் கொண்ட ‘காற்றில் வரும் கீதம்’ என்கிற பாடல் நான் மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடல்களில் சேரும்.

சொட்டும் பக்திரசமாகட்டும், பைந்தமிழ் வரிகளாகட்டும், செவிக்கினியதோர் மதுரமான ராகமாகட்டும்…. எல்லா விதங்களிலும் இப்பாடல் ஒரு அற்புதமான தமிழ்ப் பாசுரத்திற்கு நிகரானது.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இளையராஜாவின் வேறு சில குறிப்பிட தகுந்த பாடல்கள் : அம்மா என்றழைக்காத… *மன்னன் ; சுந்தரி கண்ணால் ஒரு சேதி… *தளபதி. பாடல் உருவான விதம், ராஜாவும் வாலியும் மேற்கொண்ட உரையாடல் சுவையானது. நீங்களும் கேளுங்கள் :

கதையின் நாயகி கதாநாயகனின் இல்லத்துக்கு முதல் முறையாக வருகிறாள். பக்தனின் பாடல் கேட்டுத் தாழ் திறந்த ஆலய மணிக் கதவைப்போல் ஒரு பாடலோடு திறக்கிறது கதாநாயகனின் வீடு. ஒரு பாடலைக் கடனே என்று பாடாமல் இறைவனுக்கும் நமக்குமான பரிபாஷையே இசைதான் என்கிற உணர்வோடு, பாடலில் லயித்து ஆத்மார்த்தமாகப் பாடுவதை, பெரியோர் ‘நாத உபாசனை’ என்பார்கள். அப்படி இசையையே இறையாக எண்ணி வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்து இருக்கறது இப்பாடல். கண்ணனை வர்ணிக்கத் துவங்கினாலும் இப்பாடல் இசை என்கிற கண்ணனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள பாலத்தை சொற்களால் அலங்கரிக்கிறது.

பாடலாசிரியர்: வாலி
படம்: ஒரு நாள் ஒரு கனவு 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி 
ராகம் : கல்யாணி

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

கவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் ஆக்கியோர்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம், ஷ்ரேயா கோஷல் மற்றும் பவதாரணி ஆகியோர். இறுதியில் வரும் கல்யாணி ராகத்தின் ஆலாபனை  மட்டுமே ரசிக்க.  பாடலின் சுட்டி கீழே:

இசைப்பா முதலாம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்கிறோம். அதன் பொருட்டு சிறந்த பாடல்களின் சிறப்பு வரிசை இந்த பாடலுடன், இனிப்பு தீபாவளியுடன், இளையராஜாவுடன், இன்ப வாலியுடன், இசையுடன், இறையுடன் தொடங்குகிறது !

மேலும் உங்கள் வரவுக்கு நன்றி. தளம் மேம்பட உங்கள் கருத்துகளை சொல்லலாமே. நீங்களும் பங்கு பெறலாம், பகிரலாம் 🙂

கல்லை மட்டும் கண்டால்

வணக்கம். தொடர்ந்து கவிஞர் வாலி அவர்களின் மறைவுக்காக இரங்கல் செலுத்தும் பொருட்டு பாடல்களைத் தந்து வருகிறோம். இன்றும் ஒரு இனிய பாடல். பாடல் பற்றிய சுவையான சம்பவத்துடன் கல்யாண் குமார் (புதிய தலைமுறை உதவி ஆசிரியர் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் படங்களின்  திரைக்கதை விவாதங்களில் ஈடுபடுபவர்.) தனது facebook பக்கத்தில் எழுதியது.

வாலி மறைந்தார்…..

உதவி இயக்குனராக அவரோடு சில படங்கள் பணியாற்றி இருக்கிறேன். கடைசியாக தசாவதாரம். அந்தப் படத்தின் முதல் பாடல். ட்யூன் கொடுத்தாயிற்று. இரண்டொரு நாட்கள் கழித்து ’பாட்டு ரெடிப்பா எங்க மீட் பண்ணலாம் ?’ என்று இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்கிறார். கமல் ஆபீஸில் சந்திக்க ஏற்பாடு. நானும் இயக்குனரும் கமல் ஆபீஸ் நோக்கி பயணிக்கிறோம் காரில். வாலி, vaaliவாலியிடமிருந்து போன்.

‘பாட்டு ரெடிப்பா. நீ பணத்தோடதானே வர்ற?’

இயக்குனரோ ’ஆமாண்ணே ப்ரொடியூசர்கிட்ட இருந்து பணம் வாங்கிட்டேன்.

’ செக் இல்லையே? கேஷ்தானே? மறுபடி ஒரு கேள்வி.

‘ஆமாண்ணே கேஷ்தான்’ – இது இயக்குனரின் பதில்.

ஆழ்வார்பேட்டை கமல் ஆபீஸ். மும்பை இசையமைப்பாளரின் ட்யூனை அங்குள்ள பெரிய டேப் ரிக்கார்டரில் ஒலிக்கச் செய்கிறார், கமல். கூடவே வாலி தான் எழுதி வந்த வரிகளை உரக்கப் பாடுகிறார். கமலும் இயக்குனரும் ரசித்துக் கேட்கிறார்கள். கூடவே நானும்.

அந்த பாடல் வரிகளில் கமலின் தந்தை பெயரும் தாயார் பெயரும் வருகிறது. கமல் முகத்தில் சந்தோஷம். ட்யூனுக்கு வார்த்தைகள் பொருந்தியதில் இயக்குனருக்கு மகிழ்ச்சி. ஒரு மணி நேரத்தில் அந்த சந்திப்பு முடிந்து போகிறது. இயக்குனர் கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி தன் ஜிப்பா பைக்குள் வைத்துக் கொள்கிறார் வாலி. அவரது பாடல் வரி பேப்பர்களை பத்திரப்படுத்திக் கொள்கிறார் கமல். அடுத்த சில நாட்களில் அதன் ரிக்கார்டிங் மும்பையில். பாடல் பதிவாகி அடுத்தவாரம் அதை முழுப்பாடலாக நான் கேட்கிறேன். அதுதான் தசாவதாரம் படத்தில் நீங்களும் கேட்டு ரசித்த அந்தப் பாடல்….

கல்லை மட்டும் கண்டால்……. கடவுள் தெரியாது….

அந்த இனிய பாடல் உங்களுக்கு :

படம்: தசாவதாரம் (2008)
இசை: ஹிமேஷ் ரேஷ்மியா
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள்: வாலி 

 
தசாவதாரம் கமல்

ஓம் நமோ நாராயணாய …!

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது.
கடவுள் மட்டும் கண்டால்
கல்லடி தெரியாது.

எட்டில் ஐந்து எண்
கழியும் என்றும்
ஐந்தில் எட்டு
ஏன் கழியாது ?

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால்
யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால்
யாரும் சுற்றம்தான்

{சைவர்கள்…}

மண்ணுக தில்லை வளர்க
நம் பக்தர்கள் வஞ்சகர் போய் அகல
பொன் நின் செய் மண்டபத்து உள்ளே
புகுந்த புவனனி எல்லாம் விளங்க

{வைணவர்கள்…}

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட தின் தோல் மணிவண்ணா – உன்
சேவடி செவ்வி திருக்காப்பு

இல்லை என்று சொன்ன
பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும்
எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால்
எங்கள் வீரவைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது

 

ராஜலக்ஷ்மி நாயகன்
ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் – இந்த
விஷ்ணுதாசன் நான்

நாட்டில் உண்டு
ஆயிரம் ராஜராஜர்தான்
ராஜனுக்கு ராஜன்
இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும்)

நீருக்குள்ளே மூழ்கினாலும்
நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும்
எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து
விளக்கணைக்கும்.
வெண்ணிலாவை
அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை
நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை
அது நனைத்திடுமா ?

சைவம் என்று பார்த்தால்
தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால்
சமயம் கிடையாது

(கல்லை மட்டும்..)

இன்று இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவர்களின் பிறந்தநாள். ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறுகிற இசையமைப்பாளராக இருந்த இவர் புகழின் உச்சியில் இருந்தபோது நடிப்பின் மேல் விருப்பம் கொண்டு இசைக்கு முற்றுப்புள்ளி வைத்த போதிலும் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் முதல் படம் பொம்மலாட்டம். ஆனால் திரைக்கு முதலில் வந்ததும், வெற்றி பெற்றதுமான படம் தசாவதாரம். ஹிமேஷ் ரேஷ்மியா அவர்களுக்கு இசைப்பாவின் வாழ்த்துகள்.

இசைப்பா +

அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என 15 புத்தங்கள் எழுதி இருக்கிறார் வாலி. சிறுகதை, கவிதை, உரைநடை என எல்லா வகையும் இதில் அடக்கம்!

இன்னும் வாலியின் இனிய பாடல்களை தொடர்ந்து இசைப்பாவில் தர முடிவு செய்துள்ளோம். பெருங்கவிஞரின் மறைவுக்கு இசைப்பாவில் இசையஞ்சலியாக அது அமையும்.

ஆழ்ந்த இரங்கலுடன், இசைப்பா குழுவினர்

மேலும் வாலி பாடல்களுக்கு (படத்தை) சொடுக்கவும்:

cooltext1123981540

நான் வரைந்து வைத்த..!

இந்த பதிவிற்கு உதவிய என் தோழர்களுக்கும்.  இந்த பதிவை படிக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி . நீண்ட நாட்களாக எந்த பதிவும் எழுதவில்லை . இந்த பாடலை அதிகம் கேட்கும் பழக்கம் உண்டு . ஏன் இதை எழுதக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

இந்த பாடலை ஹரிஹரன் , மதுஸ்ரீ அவர்களும் அழகாக பாடியுள்ளார்கள்.இசைகேத்த வரிகளும் இனிமையான குரலும் கேட்கும் மனதை எந்த சூழலிலும் இருந்தாலும் மாற்றி விடும் அளவு மிக அழகாக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. அழகான வரிகள் அமைத்துள்ளார் யுகபாரதி .

காதல் வந்தால் இப்படியும் மாறிவிடுவர் போலும் !!

மணல் வெளியில் மலர்கள் பூப்பதும், சூரியன் ஒளிரவும் !!

காக்கைகளும் மயில்கள் ஆனதோ !!

மூச்சில் இசை என்பார்கள் அதை உன்னால் தான் உணர்ந்தேன் !!

—-அழகான வரி காதலின் வெளிப்பாடு அழகாக உள்ளது !!

பாடல்: நான் வரைந்து வைத்த

இசை: வித்யாசாகர்

பாடல் வரிகள்: யுகபாரதி

பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

படம்: ஜெயங்கொண்டான்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்துகின்ற காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த மழை துளி அமுதமானதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே
கம்பஞ்சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியதே

ஜன்னல்…

பூக்கும் புன்னகையாலே
என் தோள்கள் இறக்கிகள் ஆக
நாக்கு உன் பெயர் கூற
என் நாட்கள் சர்க்கரை ஆக
தலை கீழ் தடு மாற்றம் தந்தாய்
என் இனிய காலையில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் கடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

பள்ளி செல்ல வில்லை
பாடம் கேட்க வில்லை
அள்ளி கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை
நாணம் கையில் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி…

ஊஞ்சல் கயிரில்லாமல்
என் ஊமை மனது ஆடும்
தூங்க இடமில்லாமல்
என் காதல் கனவை நாடும்
நொடியும் விலகாமல் கொஞ்சம்
கெஞ்சும் தஞ்சம் நெஞ்சம்

நான் வரைந்து வைத்த….

உங்களுக்கு பிடித்த பாடல்களை வாசகர் விருப்பமாக சொல்லுங்கள். நீங்களும் இங்கு பங்களிக்க வாய்ப்பு உண்டு. இசையை அனுபவிக்க, ரசனையை அதிகரிப்பதே எங்கள் முயற்சி. நன்றி !

உன் பார்வை போதும்

ஒரு பெண் தாயாகும், சமயத்தில் முழுமை பெறுகிறாள் என்பது சமூக கோட்பாடு. உண்மையும் அதுவே. அப்படி ஒரு தாய் தான் சுமந்தெடுக்கும் பிள்ளை, எப்படி இருந்தாலும்,  அவளுக்கு அவன் தங்கக் கட்டியே. அவனுக்கு எவ்வகை துயரம் வந்தாலும், அவள் ஆவலுடன் அவன் முகம் பார்த்து அவனை தழுவுகிறாள்.

விண்மீன்கள் படம். இதே போல ஒரு சூழல். பிறந்து குழந்தை மாற்று திறனாளி, அவனால் நடக்கவோ, பேசவோ, ஏதும் சுயேச்சியாக செய்ய முடியாது. மருத்துவர்கள் அவனை காப்பகத்தில் சேர்த்து விடும் படி சொல்லியும், தன் மகன் தோன்றக் காரணமாக இருந்த, தாங்களே அவன் வேர் ஊன்று நிற்க பாடுப்பட வேணும் என உணரும் பெற்றோர். இதில் விந்தை ஒன்றும் இல்ல, நம் கலாச்சாரம் தான் அது !

என்ன தான் மன திடம் இருந்தாலும், மகவின் குறை எண்ணி மனம் துடிக்க, ஒவ்வொரு இரவிலும், அவன் நிறைகளை மட்டுமே பார்க்கும் / பாரக்க துடிக்கும் தாயின் அன்பு வரிகளை, தானாக வரும் உணர்வுகளை, மிகவும் சரியாக, ரசனையுடன் எழுதியுள்ளார் நா.முத்துக்குமார். வரிக்கே ஏற்ற வேகத்தில் இசை சரியா வந்துள்ளது. பாடியவர்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்ல : ஹரிஹரன், ஹரினி. இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. பாடல் முடியும் போது இரு துளி கண்ணீருடன் நீங்கள் இருப்பீர்கள் என்பது திண்ணம். அதுவே பாடலின் மிக பெரும் வெற்றி

பாடல் : உன் பார்வை போதும்

பாடியவர்கள் : ஹரிணி, ஹரிஹரன்

பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

படம் : விண்மீன்கள்

இசை : ஜூபின்

Vinmeengal-Stills-077

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

வாய் பேசா பந்தமே
வரம் தந்த தெய்வமே
உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது
நெஞ்சுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உன் முகம் பார்த்தால் ஓவியம் போலே
சலனங்கள் எதுவும் அதில் இல்லையே
மௌனமாகவே ஏதேதோ பேசி போகிறாய்

உன் மனம் என்றும் ஊஞ்சலை போல
இடம் வளம் எதுவம் அதில் இல்லையே
திசைகள் யாவையும் ஒன்றாக்கி மாயம் செய்கிறாய்

பூமி உந்தன் சொந்தமே,
வானம் உந்தன் சொந்தமே
வெல்லுகின்ற காலம்
வாசல் வந்த மாலையிடும்

மண்ணுள் உள்ள வாழக்கை என்றும்
மேடு பள்ளம் நிறைந்தது
துன்பமின்றி இன்பம் மட்டும்
உனக்கென்ன பிறந்தது

மெல்ல மெல்ல உதடுகள்
புன்னகையில் மலர்ந்தது
என்னை விட்ட உன்னை தானே
எந்தன் மனம் நம்புதடா

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

நதிகளில் விழுந்த இலைகளின் பயணம்
நதி செல்லும் வழியில் தொடருமடா
அன்புன் நதியிலே இப்போது
மோதி இலைகள் ஆகிறோம்

அலைகளில் மிதந்து ஆழத்தில் அலைந்து
அனுதினம் ஆட்டம் நிகழுதடா
கொஞ்சும் போதிலே ஒன்றாகி
கடலில் சேர்கிறோம்

என்னை நானே பார்கிறேன்
இன்னும் என்ன கேட்கிறேன்
இந்த இன்பம் போதுமடா

என்ன என்ன வேண்டும் என்று
பார்த்து பார்த்து கொடுக்கிறேன்
உன்னை தீண்டும் காற்றை கூட
கையை நீட்டி தடுக்கிறேன்

உன்னை தோளில் தூக்கி கொண்ட
வானம் மேலே பறக்கிறேன்
உந்தன் வெற்றி அதை என்னை
காயங்களை மறக்கிறேன்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது

கண்ணுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

மேலும் இசை வளரட்டும். இன்பம் பெருகட்டும். உங்கள் வாசிப்புக்கும் நன்றி !

முதல் மழை என்னை நனைத்ததே…!

சமீபக் கால திரைப்பாடல்களில் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல் இது.

என் விருப்பத்திற்கு பல காரணங்கள்.

முதல் காரணம் திரு ஹரிஹரன் அவர்களின் தேன்குரல். என்ன ஒரு வளமான குரல்! வார்த்தைகளை அழகாக உச்சரிக்கும் பாங்கு; பாடலின் காணொளியைப் பார்க்கத் தேவையே இல்லை; பாடலின் சூழலுக்கே நம்மைக் கொண்டு சென்று விடும் ஆற்றல் இவரது இழைந்து குழையும் குரலுக்கு உண்டு.

அவருக்கு ஈடு கொடுக்கும் திருமதி மஹதியின் அமுதக் குரல். அதுவும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இவரது குரலில் வரும் ‘ஹம்மிங்’ நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்று விடும்.

இது இருவர் சேர்ந்து பாடும் பாடலாக இருந்தபோதிலும் ஹரிஹரனுடன் தான் ஒரே இடத்தில் இருந்து கொண்டு இந்தப் பாடலை பதிவு செய்யவில்லை என்று தனது நேர்காணல் ஒன்றில் மஹதி கூறியிருந்தார். அவர் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப் பட்டதாகவும், தான் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப்பட்டு இரண்டையும் ‘மிக்ஸ்’ செய்தார்கள் என்றார் இந்தப் பாடகி.

அந்தக் காலத்தில்  நடிக நடிகையரே பாடவும் செய்வார்கள். இவர்கள் பாடிக் கொண்டே நடக்க, பின்னணி இசைப்பவர்கள் தங்கள் இசைக்கருவிகளை சுமந்து கொண்டு நடந்து கொண்டே இசைப்பார்களாம். பாவம் காமிராமேன். பாடும் நடிக நடிகையரை  மட்டும் படம் பிடிக்க வேண்டும்!

‘பீமா’ படத்தில் வரும் இந்தப் பாடலின் காட்சி அமைப்புக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

அமைதியான இசைக்கேற்ற அமைதியான இடங்கள்; நீல வானமும், அதனுடன் போட்டி போடும்  வெண்பனி போர்த்திய மலைகள், பச்சை வயல்கள், மஞ்சள் பூக்கள், அமைதியான நீர்நிலை என்று இயற்கையுடன் இயைந்த சூழல்.

விக்ரம், த்ரிஷா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லவே வேண்டாம். த்ரிஷாவின் நீல நிற உடைகளும் காட்சிக்கேற்றபடி மாறும் விக்ரமின் உடைகளும் இந்தப் பாடலுக்கு மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது.

‘ஹம்மிங்’ – கிலேயே  இசை மிதந்து மிதந்து செல்லும்.

பாடல் வரிகள் அற்புதம்!

கண்களை மூடிக்கொண்டு பாடலைக் கேளுங்கள்: உங்கள் மனமும் ‘கையை மீறும் ஒரு குடையாய் – மழைக்காற்றோடு தான் பறந்துவிடும்!

திரைப்படம்: பீமா
பாடல்: முதல் மழை
பாடகர்கள்: ஹரிஹரன், மகதி, R. பிரசன்னா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர்: நா. முத்துக்குமார்

மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..

ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..
மீஹெஹெஹீ..ஹி……ஹி……ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ஹி…..ஹி…..ரொஹிரொன..

முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்…..ஹோய்….. இதமாய் மிதந்ததே
ம்ம்ம்ம்..

முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்…..ஹும்ம்ம்ம்… இதமாய் மிதந்ததே

மெஹு மெஹு மெஹு பாஹி லாஹி மா
மெஹு மெஹு மெஹு பாஹி லாஹி மா..
ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..

மீஹெஹெஹீ..ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..

கனவொடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்..

ஆ… ஆஆஆஅ..

என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்..

ஏதுவும் புரியா புது கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஓரு குடையாய்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடுதான் நானும் பறந்தேன்..

முதல் மழை என்னை நனைத்ததே
லலலலா….
முதல் முறை ஜன்னல் திறந்ததே
லலலலா……
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்.. ஹோய் ….. இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை…..
ஆ…………
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை…..

இரவும் பகலும் ஓரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இருந்தாலுமே என்றும் இருக்கும்..

ஊஹுஹுஹுஹ்ஹ்ஹ்..ஊஹுஹுஹுஹ்ஹ்ஹ்..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
ஊஹ்ஹ்ஹ்ஹூஹ்ஹ்ஹ்ஹ்..
இதயமும்….ஹோய் …இதமாய் மிதந்ததே….

மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..

இசை மழை!
இசை மழை!

பாடலின் கர்த்தாக்களான ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களையும், கவிஞர் நா.முத்துக்குமாரையும் நாம் மறத்தல் கூடாதல்லவா!  இப்பாடலும் உங்கள் மனம் கவர்ந்த பாடலாக இருந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், பங்களிப்புகளையும் இசைப்பா வழக்கம்போல் எதிர்பார்க்கிறது. 3000 தாண்டிய பார்வைகளுக்கு நன்றி.