இசையில் தொடங்குதம்மா

ராஜா பிறந்த இந்த வாரத்தில் மேலும் ஒரு சிறப்பு பதிவு ! ஹே ராம் படத்தில் வரும் ’இசையில் தொடங்குதம்மா’ என்ற பாடலை வெகு நாட்களுக்குப் பிறகு கேட்க நேர்ந்தது. ராஜாவின் சிறந்த பாடல்கள் கொண்ட ஒரு பிளே லிஸ்டை (playlist)  எப்போது யார் தயாரித்தாலும்   நிச்சியம் இப்பாடல் அதில் இடம் பெறும்.

ராஜா
ராஜா

இந்தப் பாடலுக்கான காட்சியை இயக்குனர் கமல் எப்படி விளக்கி இருக்கமுடியும் என்று எண்ணுவதே எனக்கு வியப்பைத் தருகிறது. அந்தப் பாடலுக்கான சூழலை மிகச்சரியாகப் புரிந்து கொண்டவரால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு இசைக்கோர்ப்பினை உருவாக்க இயலும்.

மிக அபூர்வமாக இசைக்கப்படும் விவாஹப்ரியா ராகத்தில், சாஸ்த்ரிய மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதங்களின் கலவையை தனது தமிழ் கவிதைத் தேனில் குழைத்து ராஜா வார்த்த சிலை இப்பாடல். ஆம், இப்பாடலை எழுதியவரும் அவரே.

காட்சிகளின் படி கதாநாயகன் மதுவின் போதையில் இருக்கிறன்.  தோலக், தபலா, முழவுகள், ராம லீலா உத்சவத்தின் போது இசைக்கப்படும் கொட்டுகள் என இப்பாடலின் இசையே போதையுட்டுகிற பல்வேறு இசைக்கலவைகளைக் கொண்டிருக்கிறது. அஜய் சக்ரபர்த்தி பாடியிருக்கிறார். என்ன அற்புதமான ஒரு குரல் தேர்வு. அஜய் சக்ரபர்த்தியைத் தவிர வேறு யாரும் இந்தப் பாட்டுக்கு, அதனுடைய அதிஅற்புத இசைக்குத் தன் திறமையால் குரல்வளத்தால் நியாயம் செய்துவிட முடியாது. குரல் குழைந்து, மிளிர்ந்து, மயங்கி, மயக்கி, தவித்து, வழுக்கி கேட்பவனுக்கு இசை என்கிற ராஜ போதையைத் தந்து நம்மை உன்மத்தமாக்குகிறது.

ரசிகனை எங்கோ விரல் பிடித்து அழைத்து செல்லக்கூடிய எத்தனயோ பாடல்களைத் தந்திருக்கிறார் ராஜா. அவற்றுள் இப்பாடல் தலையாது என்றே நான் கருதுகிறேன். பேக்பைப்பர் பின்னால் செல்லும் எலிகளைப் போல நான் ராஜாவின் பாடல்கள் பின்னால் அலைகிறேன். விளக்கின் சுடரைப்போல இப்பாடல் சதா என் நினைவுகளில் அலைந்து கொண்டிருக்கிறது.

படம்: ஹேராம்
பாடல்: இசையில் தொடங்குதம்மா
பாடலாசிரியர்: இளையராஜா
இசை: இளையராஜா
பாடியவர்: அஜய் சக்ரபர்த்தி 

இசையில் தொடங்குதம்மா  
விரக  நாடகமே
வசந்தம் கண்டதம்மா
வாடும் வாலிபமே

வசந்த கோலங்களை
வானின் தேவதைகள்
கண்டு ரசிக்க
வந்து கூடிவிட்டார்
இங்கு நமக்கு ஹோ..
(இசையில்..)

தேய்ந்து வளரும்
தேன் நிலாவே 
மண்ணில் வா
தேய்ந்திடாத  தீபமாக  
ஒளிர வா

வானத்தில்.. வானத்தில் மின்னிடும்
வைரத்தின் தாரகைத் தோரணங்கள்
பூமிக்கு கொண்டு வா

(இசையில்..)

நாளில் பாதி இருளில் போகும்
இயற்கையில் வாழ்வில்
பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே… உயிர்களே
உயிர்களே உலகிலே இன்பத்தை
தேடி தேடி கிரஹத்துக்கு வந்ததே

(இசையில்..)

ஒரு முறை பார்த்திபன் சொன்னார் ‘பழையன கழிதல் – என்கிற விஷயம் துளியும் பொருந்தாது ராஜாவின் பாடல்களுக்கு மட்டுமே’ என்று. அதை அனுபவபூர்வமாக உணர்த்துகிற பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த வாரம் ராஜாவின் பிறந்தநாள். அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமே! கவிஞர்  வாலி அவரைப் பற்றிச் சொன்ன வரிகளை இங்கே தந்திருக்கிறேன்.

‘உன் தேகமெல்லாம் ராகம்..! உன் நாளமெல்லாம் தாளம்..! உன் குருதியெல்லாம் சுருதி..! நீ இசைஞானி இல்லை இசைமேனி..!– வாலி