புல்லாய் பிறவி தர வேணும்…..

தமிழகத்தின் மிகப் பெரும் பாக்கியம் – கம்ப ராமாயணம் என்ற ராம காதை. கண்ணனைப் பாட, வில்லிபுத்தூரார் பாரதம் எழுதினாலும், அது ஏனோ சோபித்து விளங்கவில்லை. தென்னகத்தில் கண்ணன், கர்நாடக இசை வழி வலம் வர திருவுள்ளம் கொண்டான் போலும். ஊத்துக்காடில் பிறந்த வேங்கட சுப்பையரை ஆட்கொண்டான். அவரது கீர்த்தனங்கள் ஒலிக்காத மேடைகளே இல்லை என்பது சத்தியம். அலைப்பாயுதே கண்ணா… பாடல்களைக் கேட்காத செவிகளே உலகில் இல்லை என சொல்லலாம்.

கண்ணனைப் பாட இவரைப் போல் எவருள்ளார் ?

கொஞ்சல், கெஞ்சல், வேண்டுதல், ரசித்தல், அவதானிப்புகள் என கண்ணனை இவர் அணுகாத பரிமாணங்களே இல்லை என நிச்சயம் சொல்லலாம். பாரதிக்கு முன்பே கண்ணனை எளிய தமிழில், எழில் மிகு நாயகனாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பாரதியே இவரது கீர்த்தனைகளை முழுமையாக உள்வாங்கி கொண்டு, கண்ணன் கவிகள் பாடி இருப்பான் என்று நான் எண்ணமிடுவது உண்டு.

அவரின் பிரபலமான பாடல்கள் பல இருப்பினும், மேடைகளில் அதிகம் இடம்பெறாத பாடலை இங்கே முதலில் அறிமுகம் செய்கிறோம். புதுக்கவிதை வடிவில் அவரது ஆசையை அடுக்கிறார். தமிழ் மொழிக்கு உரிய அழகான அடுக்குகளில், இவரது பாடல்கள் அமையும். கேட்டும் / படித்தும் பார்த்து ரசிக்க கூடிய பாடலிது. செஞ்சுருட்டி ராகம், ஆதி தாளம். உருகி உருகி, மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் சுதா ரகுநாதன். தமிழ் சொற்கள் அனைத்தும் சரியான, உச்சரிப்புடன் காதில் ஒலிக்கின்றன. வேகம் குறையாமல், பொங்கும் உற்சாகம் அவர் குரலில் இனிக்கிறது.

Sri Krishna with flute 9

பாடல்: புல்லாய் பிறவி தர வேணும்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பாடியவர்: சுதா ரகுநாதன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
இசை: தெரியவில்லை

பல்லவி :

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா

புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….

அனுபல்லவி :

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென

சரணம் :

ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென  மலரடி பெய்துன்னை

தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே

சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !

தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்….

இந்த பாடலை, இசைப்பாவின் மூத்த பதிவர்: ரஞ்சனி அவர்களுக்கு Dedicate செய்கிறோம். சுதா ரகுனாந்தனின் தீவிரமான ரசிகை அவர்கள்.

மீண்டும் ஒரு இனிய கீதத்துடன் சீக்கிரம் இணைவோம்.