என்ன குறையோ என்ன நிறையோ!

இசை ரசிகர்களுக்கு வணக்கம்.

இன்றைய பாடல் ஒரு சிறப்புப் பாடல். அது எந்தளவுக்கு சிறப்பு என்பதை அறிய முழுதும் படியுங்கள்.

இசைப்பாவில் கண்ணன் பாடல்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. ஆனால் இதில் உள்ள சிற்ப்பு தனிரகம். பலகாலம் தமிழ்த் திரையுலகில் பாடல்கள் எழுதிவந்த கவிஞர் அறிவுமதி ஒருகட்டத்தில் திரைப்பாடல்களே எழுதுவதில்லை என ஒதுங்கிவிட்டார்.

மந்திரப்புன்னகை (2010) படம் மூலமாக மறுபிரவேசம் செய்தார். அதிலும் இந்த பாடலுக்கு இன்னொரு சிறப்பு இருபொருள்.
பாடலைக் கேட்கையில் முழுமையாக கண்ணன் பாட்டு என்றுதான் தோன்றும்.  அது ’அ’ண்ணன் பாட்டு!
பாட்டில் கண்ணனை அண்ணனாக மாற்றினால் பாடலின் மொத்த பொருளும் மாறும்.
 Sudha Ragunathan
இதே பாடல் குறித்து கானாபிரபா எழுதிய கட்டுரையில் இருந்து சில வரிகள்..
சாஸ்திரிய சங்கீத உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் பலர் திரையிசை உலகுக்கு வந்து தம் தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வது காலாகாலமாக நடந்து வரும் சமாச்சாரம். ஆனால் அதற்கும் கூட நல்லதொரு தருணம் வாய்க்கவேண்டும் என்பதற்கு நல்ல உதாரணம் பாடகி சுதா ரகுநாதன். இன்றைய நிலையில் சாஸ்திரிய சங்கீதப் பரப்பில் சுதா ரகுநாதன் ஒரு சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையில்லை. உள்ளூரில் மட்டுமன்றி தமிழர்கள் பரந்து வாழும் வெளிநாடுகளிலும் இவருக்கான பரந்துபட்ட ரசிகர் வட்டம் இருப்பதே அதற்குச் சான்று.
சுதா ரகுநாதனையும் திரையிசை உலகம் விட்டுவைக்கவில்லை. இசைஞானி இளையராஜா (இவன்), தேனிசைத் தென்றல் தேவா (கல்கி), வாரணம் ஆயிரம் (ஹாரிஸ் ஜெயராஜ்) என்று சுதா ரகுநாதனின் குரலைத் திரையிசைப்பாடல்களில் முன்னணி இசையமைப்பாளர்கள் இவர்கள் பொருத்திப்பார்த்தார்கள். உண்மையில் அவர்களுக்கெல்லாம் கட்டுப்படாத இந்தக் குரல் இலாவகமாக, கச்சிதமாகப் பொருந்திப் போனது என்னவோ இந்த ஒரு பாடலில் தான் என்பேன். அந்தப் பாடல் தான் “மந்திரப் புன்னகை” படத்தில் வரும் “என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்”இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களில் இன்னும் ரசிகர்களால் முன்னோ தூக்கி நிறுத்திப் பாராட்டப்பட வேண்டிய இசையமைப்பாளர் வித்யாசாகர் என்பேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வித்யாசாகர் இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று சீசனுக்கு சீசன் வந்து போகும் நிலை இவருடையது. இவரைக் கச்சிதமாகப் பயன்படுத்தக் கூடிய இயக்குனர்களில் கரு.பழனியப்பனும் ஒருவர். பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், (இன்னும் வெளிவராத)சதுரங்கம், தற்போது வெளியாகியுள்ள மந்திரப்புன்னகை போன்ற படங்களில் இந்தக் கூட்டு எவ்வளவு தூரம் சிறப்பாக அமைந்திருக்கின்றது என்பதற்கு அந்தப் படங்களின் பாடல்களே சான்றாக விளங்கி நிற்கின்றன. இவர்களோடு இன்னொரு முக்கியமானவர், அவர் தான் பாடலாசிரியர் அறிவுமதி. ஒரு நீண்ட அஞ்ஞாதவாசம் இருந்து மீண்டவருக்கு ஒரு அறிமுகமாக இப்படம் கிட்டியிருக்கின்றது. அறிவுமதியைப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கின்றார் வித்யாசாகர். மெட்டுக்குப் பாட்டெழுதும் பெரும்பான்மைச் சூழலில் பாடல்வரிகளுக்கு மெட்டமைக்கும் சவாலை வித்யாசாகர் ஏற்கும் போது அறிவுமதி போன்ற கவிஞர்களின் பாடல்வரிகள் தான் அந்தச் சவாலுக்கு உறுதுணையாக வளைந்து கொடுத்து இசை வளையத்துக்குள் கட்டுப்பட்டுவிடுகின்றன.
****************
இந்த பாடல் – கேட்டதும் பிடிக்கும்!

படம்: மந்திரப்புன்னகை
பாடலாசிரியர்: அறிவுமதி
இசை: வித்யாசாகர்
பாடியவர்: சுதா ரகுநாதன்

கண்ணா….! கண்ணா….!

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

(என்ன குறையோ..)

நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான்
கண்ணில் மழைத் துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்த கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே!

(என்ன குறையோ…)

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் வரலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழிகேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையால் உலகினை அணைப்பான்

அந்த கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா மனமே!

 இன்றோடு இசைப்பாவுக்கு வயது இரண்டு..

முதலாம் ஆண்டு –சின்னக் கண்ணன்

இப்போது என்ன குறையோ? என்ன நிறையோ.. எங்களிடம் சொல்லலாமே!

இணைப்பு –

கானாபிரபாவின் முழுமையான பதிவைப்படிக்க

கண்ணனின் வண்ணப்படம் -வரைந்தது -ஷண்முகவேல் -வெண்முரசு -நீலம் –அத்தியாயம்-38

புல்லாய் பிறவி தர வேணும்…..

தமிழகத்தின் மிகப் பெரும் பாக்கியம் – கம்ப ராமாயணம் என்ற ராம காதை. கண்ணனைப் பாட, வில்லிபுத்தூரார் பாரதம் எழுதினாலும், அது ஏனோ சோபித்து விளங்கவில்லை. தென்னகத்தில் கண்ணன், கர்நாடக இசை வழி வலம் வர திருவுள்ளம் கொண்டான் போலும். ஊத்துக்காடில் பிறந்த வேங்கட சுப்பையரை ஆட்கொண்டான். அவரது கீர்த்தனங்கள் ஒலிக்காத மேடைகளே இல்லை என்பது சத்தியம். அலைப்பாயுதே கண்ணா… பாடல்களைக் கேட்காத செவிகளே உலகில் இல்லை என சொல்லலாம்.

கண்ணனைப் பாட இவரைப் போல் எவருள்ளார் ?

கொஞ்சல், கெஞ்சல், வேண்டுதல், ரசித்தல், அவதானிப்புகள் என கண்ணனை இவர் அணுகாத பரிமாணங்களே இல்லை என நிச்சயம் சொல்லலாம். பாரதிக்கு முன்பே கண்ணனை எளிய தமிழில், எழில் மிகு நாயகனாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பாரதியே இவரது கீர்த்தனைகளை முழுமையாக உள்வாங்கி கொண்டு, கண்ணன் கவிகள் பாடி இருப்பான் என்று நான் எண்ணமிடுவது உண்டு.

அவரின் பிரபலமான பாடல்கள் பல இருப்பினும், மேடைகளில் அதிகம் இடம்பெறாத பாடலை இங்கே முதலில் அறிமுகம் செய்கிறோம். புதுக்கவிதை வடிவில் அவரது ஆசையை அடுக்கிறார். தமிழ் மொழிக்கு உரிய அழகான அடுக்குகளில், இவரது பாடல்கள் அமையும். கேட்டும் / படித்தும் பார்த்து ரசிக்க கூடிய பாடலிது. செஞ்சுருட்டி ராகம், ஆதி தாளம். உருகி உருகி, மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் சுதா ரகுநாதன். தமிழ் சொற்கள் அனைத்தும் சரியான, உச்சரிப்புடன் காதில் ஒலிக்கின்றன. வேகம் குறையாமல், பொங்கும் உற்சாகம் அவர் குரலில் இனிக்கிறது.

Sri Krishna with flute 9

பாடல்: புல்லாய் பிறவி தர வேணும்
பாடலாசிரியர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
பாடியவர்: சுதா ரகுநாதன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
இசை: தெரியவில்லை

பல்லவி :

புல்லாய் பிறவி தர வேணும் கண்ணா

புனிதமான பலகோடி பிறவி தந்தாலும்
பிரிந்தாவனமிதில் ஒரு புல்லாய்….

அனுபல்லவி :

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது, ஆதலினால்
கல்லாய் பிறவி தர வேணும், கண்ணா,
கமலா மலரினைகள் அணைய, எனது உள்ளம்,
புலகித முற்றிடும் பவ மத்திடுமென

சரணம் :

ஒரு கணம் உன் பதம்
படும் எந்தன் மேலே
மரு கணம் நான் உயர்வேன்
மென் மேலே
திருமேனி என் மேலே
அமர்ந்திடும் ஒரு காலே,
திருமகளென  மலரடி பெய்துன்னை

தொடர்ந்த ராதைக்கு
இடம் தருவேனே,
திசை திசை எங்கினும் பரவிடும்
குழலிசை மயங்கி வரும்
பல கோபியருடனே

சிறந்த ரசமிது நடம் நீ ஆடவும்,
ஸ்ருதியோடு லயம் கலந்து பாடவும்,
திளைப்பிலே வரும் களிப்பிலே,
எனக்கு இணை யாரென மகிழ்வேனே !

தவமிகு சுரரொடும்முனிவரும் இயலா,
தனித்த பெரும் பேரு அடிவேனே,
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும்,
இறைவனே யமுனைத் துறைவனே
எனக்கு ஒரு புல்லாய்….

இந்த பாடலை, இசைப்பாவின் மூத்த பதிவர்: ரஞ்சனி அவர்களுக்கு Dedicate செய்கிறோம். சுதா ரகுனாந்தனின் தீவிரமான ரசிகை அவர்கள்.

மீண்டும் ஒரு இனிய கீதத்துடன் சீக்கிரம் இணைவோம்.

கண்டநாள் முதலாய்

இசை வணக்கம். விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

எங்கள் ஊரில் (பெங்களூர்) வருடாவருடம் ஸ்ரீராம நவமி கச்சேரிகள் நடக்கும். ஃபோர்ட் ஹை ஸ்கூல் மைதானத்தில் – ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை; ஒரு மாதம் – ஒன்றரை மாதம் தினமும் காலை, பிற்பகல், சாயங்காலம் என்று மூன்று வேளை.

Sudha Ragunathanநமக்கு தமிழ் வருடம் பிறப்பதற்கு முன் இங்கு யுகாதி பிறந்துவிடும். அதேபோல ஸ்ரீராம நவமியும் முன்னாலேயே வந்துவிடும். எங்களவர் எனக்கு பாஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார். நம் ஊர் பிரபலங்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா ரகுநாதனின் கச்சேரியை தவறவே விடமாட்டேன். இன்னொன்று விஷயமும் நடக்கும். ஒரு கச்சேரிக்கு வருபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு இடங்களில் பாடுவார்கள். நான் திருமதி சுதாவை விடாமல் அவர் எங்கு பாடுகிறார்  என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டு தொடருவேன்.

ஒருமுறை அவரிடம் போய் என் டயரியில் ஆட்டோகிராப் வாங்கினேன். அவர் என்னைப்பார்த்து, ‘நேற்று காயன சமாஜத்தில்  (Gayana Samaj) நடந்த என் கச்சேரிக்கு வந்திருந்தீர்கள் இல்லையா?’ என்றார். ‘ஆமாம், நாளை சேஷாத்ரிபுரத்திற்கும் வருகிறேன்’ என்றேன். வாய்விட்டு சிரித்தார்.

முதல் முறை அவர் ‘ப்ரம்ம ஒகடே’ பாடியதைக் கேட்டு அசந்து போய்விட்டேன். என்ன குரல்! என்ன ஒரு லயிப்பு! கண்களை மூடிக் கொண்டு ‘ப்ரம்ம ஒகடே…!’ என்று உச்சஸ்தாயியில் ஆரம்பித்தால் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அமைதியாகி அந்த ப்ரம்மத்தில் கலந்து விடுவார்கள்.

இந்த இசைப்பாவில் எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா பாடும் ‘கண்டநாள் முதலாய்…’ பாடல் உங்களுக்காக. அவரின் அறிமுகப் பாடலே, தமிழகத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகனுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி.

ராகம்: மதுவந்தி
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்
பாடியவர் : சுதா ரகுநாதன்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்…)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
(கண்ட நாள் முதலாய்…)

நான் ரசிக்கும் திருமதி சுதா ரகுநாதன் உங்களையும் மெய்மறக்க செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

இசைப்பா + 
சுதா ரகுநாதன் அவர்களின் குரு, புகழ் பெற்ற பாடகி, சங்கீத கலாநிதி : எம்.எல்.வசந்தகுமாரி ஆவார்

மேலும் இனிய பாடல்கள் இடம் பெற உள்ளன. உங்கள் கருத்துக்களை, விருப்பங்களை எங்களுக்கு சொல்லாமே.

பி.கு :
கூகிள் பிள்ஸ்சில், இந்த பதிவு பகிரப்பட்ட பொழுது, வாசு பாலாஜி அவர்கள், இதே பாடலை தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன் பாடி இருப்பதை பகிர்ந்துக் கொண்டார். அவருக்கு நன்றி. இதோ அந்த பாடல், அருமையான குரலில் உங்கள் செவிகளுக்கும் :