காற்றில் வரும் கீதமே…

இசை பிரியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே என்றொரு தமிழ்த் திரைப்படப் பாடல் வரி உண்டு. ‘புஷ்பேஷு ஜாதி’ என்றொரு சொற்றொடர் வடமொழியில் உள்ளது. அதன் பொருள் பூக்களில் உயர்ந்தது ஜாதி என்பதாகும். இந்தப் பாடலில், தலைவன் தலைவியை சாதிமல்லிப் பூச்சரமே என்கிறான். மலர்களில் உயர்ந்த மலர் போன்றவள் நீ என்று சொல்லிவிட்ட பிறகு வருகிற அதற்கு அடுத்த வரி இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சங்கத் தமிழ் பாச்சரமே என்கிறான். தமிழே இனிமை, சங்கத்தமிழ் அதனினும் இனிமை. அப்படிப்பட்ட சங்கத்தமிழில் இயற்றப்பட்ட பாடல் நீ, அதுவும் ஒரு பாடல் இல்லை, பல பாடல்களைக் கொண்ட சரம் நீ என்கிறான்.

குழலுடன் கண்ணன்அருமையான ஓசை நயம் கொண்ட, கேட்பதர்க்கினிய ராகத்தில் அமைந்த சங்கத் தமிழ் பாடல்களுக்கு இணையான பாடல்கள் சில தமிழ் திரைப்படங்களில் அமைந்து விடுவது உண்டு. ஒருநாள் ஒரு கனவு என்கிற ஓரிருநாள் மட்டுமே ஓடிய ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வளமையான வரிகள் கொண்ட ‘காற்றில் வரும் கீதம்’ என்கிற பாடல் நான் மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடல்களில் சேரும்.

சொட்டும் பக்திரசமாகட்டும், பைந்தமிழ் வரிகளாகட்டும், செவிக்கினியதோர் மதுரமான ராகமாகட்டும்…. எல்லா விதங்களிலும் இப்பாடல் ஒரு அற்புதமான தமிழ்ப் பாசுரத்திற்கு நிகரானது.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இளையராஜாவின் வேறு சில குறிப்பிட தகுந்த பாடல்கள் : அம்மா என்றழைக்காத… *மன்னன் ; சுந்தரி கண்ணால் ஒரு சேதி… *தளபதி. பாடல் உருவான விதம், ராஜாவும் வாலியும் மேற்கொண்ட உரையாடல் சுவையானது. நீங்களும் கேளுங்கள் :

கதையின் நாயகி கதாநாயகனின் இல்லத்துக்கு முதல் முறையாக வருகிறாள். பக்தனின் பாடல் கேட்டுத் தாழ் திறந்த ஆலய மணிக் கதவைப்போல் ஒரு பாடலோடு திறக்கிறது கதாநாயகனின் வீடு. ஒரு பாடலைக் கடனே என்று பாடாமல் இறைவனுக்கும் நமக்குமான பரிபாஷையே இசைதான் என்கிற உணர்வோடு, பாடலில் லயித்து ஆத்மார்த்தமாகப் பாடுவதை, பெரியோர் ‘நாத உபாசனை’ என்பார்கள். அப்படி இசையையே இறையாக எண்ணி வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்து இருக்கறது இப்பாடல். கண்ணனை வர்ணிக்கத் துவங்கினாலும் இப்பாடல் இசை என்கிற கண்ணனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள பாலத்தை சொற்களால் அலங்கரிக்கிறது.

பாடலாசிரியர்: வாலி
படம்: ஒரு நாள் ஒரு கனவு 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி 
ராகம் : கல்யாணி

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

கவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் ஆக்கியோர்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம், ஷ்ரேயா கோஷல் மற்றும் பவதாரணி ஆகியோர். இறுதியில் வரும் கல்யாணி ராகத்தின் ஆலாபனை  மட்டுமே ரசிக்க.  பாடலின் சுட்டி கீழே:

இசைப்பா முதலாம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்கிறோம். அதன் பொருட்டு சிறந்த பாடல்களின் சிறப்பு வரிசை இந்த பாடலுடன், இனிப்பு தீபாவளியுடன், இளையராஜாவுடன், இன்ப வாலியுடன், இசையுடன், இறையுடன் தொடங்குகிறது !

மேலும் உங்கள் வரவுக்கு நன்றி. தளம் மேம்பட உங்கள் கருத்துகளை சொல்லலாமே. நீங்களும் பங்கு பெறலாம், பகிரலாம் 🙂