நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் – பாரதி

முதலில் இசைப்பா ஒரு லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன்.

செப்டம்பர் என்றால் பாரதியார், விவேகானந்தர் என்று பலரின் நினைவு வரும்.

இசைப்பாவில் இந்த வருட செப்டம்பர் மாதம் பாரதியுடன் இணைந்து உலா வரப்போவது எம்.எஸ்.எஸ். பாட்டுக்கென்று பிறந்தவர் பாரதி என்றால் பாடுவதற்கென்று பிறந்தவர் எம்எஸ். பாரதியின் பாடல்கள் எம்எஸ் அவர்களின் தேன் குரலில்  புது உற்சாகம் புது அர்த்தம் கொடுப்பவை அல்லவா?

bharathi artஎம்எஸ் அவர்கள் பதினோரு மொழிகளில் பாடிய பாடல்களில் தமிழ் பாடலாக இடம் பெறுவது தான் பாரதியின் இந்த பாடல் – ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்’.

பாடுபவர்களுக்கு எப்போதுமே மொழி ஒரு பிரச்னையாக இருப்பதில்லை. தங்களது ‘பாவம்’ மூலம் எந்தப் பாட்டையும் ரசிக்க வைத்துவிடுவார்கள். இந்தியா போன்று பல மொழிகள் பேசும் ஒரு நாட்டில் பிறந்த எம்எஸ் எப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக, தமிழ் பாட்டுக்களைப் பாடுபவராக மட்டும் இருக்க முடியும்? அவரது இசைக்கு இமயம் முதல் குமரி வரை ரசிகர்கள் இருக்கிறார்களே. உலகம் முழுக்க அவரது இசைக்கு மயங்குமே.

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வியப்பு அளிக்கும் விஷயத்தை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பாரதிக்கும் எம்எஸ்எஸ் – க்கும் சிந்தனை செயல் இவற்றில் இருக்கும் ஒற்றுமை இந்தப் பாடலில் தெரிவதுதான் அந்த வியப்பான விஷயம்.

இந்திய பாடகர்களில் யாருக்குமே கிடைக்காத ஒரு வெகுமதியாக உலக அமைதிக்காக, நல்லிணக்கத்திற்காக எம்எஸ் ஐக்கிய நாடுகள் சபையில் பாடினார். இந்தக் கருத்தையே பாரதியும் இந்தப் பாடலில் ‘வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்தரெல்லாம்’ என்று கூறுகிறார்.

MS amma

அதுமட்டுமல்ல – கவிதை எழுதியவரின் உள்ளக்கிடக்கையும், பாடியவரின் உள்ளக்கிடக்கையும் ஒன்றாக இருக்கிறது பாருங்கள்: ‘காணி நிலம் வேண்டும்’ என்று கேட்டார் பாரதி. பராசக்தி மறுத்துவிட்டாள். ஆனால் இந்தப் பாட்டில் பாரதி கேட்டதை பாரதிக்கு மட்டுமில்லாமல், எம்எஸ்எஸ்-க்கும் சேர்த்து வாரி வழங்கிவிட்டாள் சக்தி! என்ன அற்புதம் இது!

தமிழில் இருக்கும் ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை செய்திருக்கும் அற்புதம் இது.

இந்த வரிகளைப் பாருங்கள் :

வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொரு ளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன் .

 ‘எள்ளத்தனைப் பொழுதும்
பயனின்றி இராதெந்தன் நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்….’ 

இருவருக்கும் பொழிந்தே விட்டாள்சக்தி. பாட்டை அனுபவிப்போம், வாருங்கள்

பாடலாசிரியர் : மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி
இசையமைப்பு : (தெரியவில்லை)

நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப்பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம் இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ.
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல்லாம்
தஞ்சமென்றே யுரைப்பீர் அவள் பேர் சக்தி
ஓம் சக்தி , ஓம் சக்தி, ஓம்

நம்புவதேவழி என்ற மறைதன்னை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டெந் நேரமும் “சக்தி” யென்றாலுனைக்
கும்பிடுவேன் மனமே .
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி .
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.

வெள்ளை மலர்மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய்!
தெள்ளு கலைதமிழ் வாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்துடுவேன் .

எள்ளத் தனைப்பொழு தும்பய னின்றி
யிராதென்றன் நாவினிலே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி , வேல்சக்தி,
வேல்சக்தி வேல்சக்தி வேல்!

 

இன்னுமொரு இனிய தமிழ் பாவுடன் விரைவில் இணைவோம்.

சுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா!

இசை வணக்கம்.

ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாடல்களை ரசிப்பார்கள். நாங்கள் தும்கூரில் இருந்தபோது என்னுடன் ஆசிரியை ஆக இருந்த  தோழி உமா ‘கேளடி கண்மணி’ படத்தில் வரும் ‘நீ பாதி, நான் பாதி’ பாடலை எப்படி ரசிப்பார் தெரியுமா?

அவர் சொல்வார்: ‘இந்தப் பாடலை ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று அந்த ‘கண்ணே’ வை அப்படியே காற்றில் ஊதி விடுவதுபோலப் பாடுவார். அது அப்படியே மிதந்து கொண்டு நிற்கும்’ இப்படிக் கூட பாடலை ரசிக்க முடியுமா என்று என்னை வியப்பில் ஆழ்த்தியவர் உமா. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் தவறாமல் இவரை நினைத்துக் கொள்ளுவேன்.

பொதுவாக பாடல் பாடும்போது கடைசி வார்த்தையை கொஞ்சம் இழுத்தாற்போல பாடி முடிப்பார்கள். இந்தப் பாடலில் ஜேசுதாஸ் அப்படி இழுக்காமல் அந்த வார்த்தையை அப்படியே விட்டுவிடுவார். மிகத் திறமை வாய்ந்த, இசையை தன் வசம் கொண்டு வர ரொம்பவும் கடுமையாக உழைத்த ஒருவருக்கு மட்டுமே இது சாத்தியம்.

இவரைப் போலவே குரலை தன் வசப்படுத்தி, தன் பாட்டு மூலம் கேட்பவர்களை தன்வயப்படுத்தும் இன்னொரு பாடகர்  நான் மிகவும் ரசிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் திரு ஹரிஹரன்.

இன்றைய இசைப்பாவில் நான் பகிரப்போகும் பாடல் ‘சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா’ பாடல். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் வரும் பாடல் இது. பின்னணி இசை எதுவுமில்லாமல் வெறும் சுருதி மட்டும் ஒலிக்க ஹரிஹரன் பாடியிருப்பார். பாடும் பாட்டில் பாவத்தையும் கொண்டு வருவதில் இவருக்கு நிகர் இவரே.

பாடலின் ஆரம்பத்தில் குழைவான குரலில் ஆரம்பிக்கும் பாடல். போகப்போக வார்த்தைகளின் பொருளுக்குத் தகுந்தாற்போல குரலை ஏற்றியும், இறக்கியும் பாடும் அழகே அழகு. ‘சாத்திரம் பேசுகிறாய், கண்ணம்மா, (குழையும் குரல்) சாத்திரம் ஏதுக்கடி? (குரல் விரிய ஆரம்பிக்கும்.) ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி? (குரலின் முழு வீச்சில் பாடுவார்) மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் (குரல் இறங்கும்) காத்திருப்பேனோடி இதுபார் கன்னத்தில் முத்தம் ஒன்று (காத்திருக்காமல் கொடுத்தே விட்டாரோ என்று தோன்றும்!)

இப்படி ஒரு பாடலை ரசிக்க சொல்லித் தந்த என் தோழி உமாவிற்கு இந்தப் பாடலை தீபாவளிப் பரிசாக அளிக்கிறேன்.

சின்ன வயதில் நாங்கள் இந்தப் பாடலை வேறு ஒரு ராகத்தில் எங்கள் அம்மாவிடம் கற்றிருக்கிறோம். அந்த வயதில் எனக்கு இந்தப் பாடலில் மிகவும் பிடித்த வரிகள்

‘பட்டுக் கருநீல புடவை பதித்த நல்வயிரம்’

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

இன்றைக்கும் எப்போதாவது நகரத்தை விட்டு வெளியிடத்தில் போய் நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்க்கும்போது இந்த வரிகள் நினைவுக்கு வரும்.

பாடல்: சுட்டும்விழி சுடர் தான் கண்ணம்மா
எழுதியவர்: மகாகவி பாரதியார்
இசை: A.R. ரஹ்மான்|
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாடியவர்: ஹரிஹரன்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

இசைப்பா +

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 1811-ல் வெளியான பிரபலமான sense and sensibility நாவலின் தழுவிய வடிவம் என்றொரு கருத்து உண்டு.

பாடல் பிடித்திருக்கிறதா? இவையும் உங்களுக்குப் பிடிக்கக் கூடும்

என்ன சொல்லப் போகிறாய்?

இசைப்பாவில் இதுவரை பதிவான இதர ரஹ்மான் பாடல்கள்

கண்டநாள் முதலாய்

இசை வணக்கம். விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

எங்கள் ஊரில் (பெங்களூர்) வருடாவருடம் ஸ்ரீராம நவமி கச்சேரிகள் நடக்கும். ஃபோர்ட் ஹை ஸ்கூல் மைதானத்தில் – ஒரு நாள் இரண்டு நாட்கள் இல்லை; ஒரு மாதம் – ஒன்றரை மாதம் தினமும் காலை, பிற்பகல், சாயங்காலம் என்று மூன்று வேளை.

Sudha Ragunathanநமக்கு தமிழ் வருடம் பிறப்பதற்கு முன் இங்கு யுகாதி பிறந்துவிடும். அதேபோல ஸ்ரீராம நவமியும் முன்னாலேயே வந்துவிடும். எங்களவர் எனக்கு பாஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார். நம் ஊர் பிரபலங்கள் எல்லோரும் இங்கு வருவார்கள். எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா ரகுநாதனின் கச்சேரியை தவறவே விடமாட்டேன். இன்னொன்று விஷயமும் நடக்கும். ஒரு கச்சேரிக்கு வருபவர்கள் அடுத்தடுத்த நாட்களில் வேறு வேறு இடங்களில் பாடுவார்கள். நான் திருமதி சுதாவை விடாமல் அவர் எங்கு பாடுகிறார்  என்று செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டு தொடருவேன்.

ஒருமுறை அவரிடம் போய் என் டயரியில் ஆட்டோகிராப் வாங்கினேன். அவர் என்னைப்பார்த்து, ‘நேற்று காயன சமாஜத்தில்  (Gayana Samaj) நடந்த என் கச்சேரிக்கு வந்திருந்தீர்கள் இல்லையா?’ என்றார். ‘ஆமாம், நாளை சேஷாத்ரிபுரத்திற்கும் வருகிறேன்’ என்றேன். வாய்விட்டு சிரித்தார்.

முதல் முறை அவர் ‘ப்ரம்ம ஒகடே’ பாடியதைக் கேட்டு அசந்து போய்விட்டேன். என்ன குரல்! என்ன ஒரு லயிப்பு! கண்களை மூடிக் கொண்டு ‘ப்ரம்ம ஒகடே…!’ என்று உச்சஸ்தாயியில் ஆரம்பித்தால் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அமைதியாகி அந்த ப்ரம்மத்தில் கலந்து விடுவார்கள்.

இந்த இசைப்பாவில் எனக்கு மிகவும் பிடித்த திருமதி சுதா பாடும் ‘கண்டநாள் முதலாய்…’ பாடல் உங்களுக்காக. அவரின் அறிமுகப் பாடலே, தமிழகத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகனுடன் தொடங்குவதில் மகிழ்ச்சி.

ராகம்: மதுவந்தி
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்
பாடியவர் : சுதா ரகுநாதன்

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி

வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட நாள் முதலாய்…)

நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை

கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
(கண்ட நாள் முதலாய்…)

நான் ரசிக்கும் திருமதி சுதா ரகுநாதன் உங்களையும் மெய்மறக்க செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

இசைப்பா + 
சுதா ரகுநாதன் அவர்களின் குரு, புகழ் பெற்ற பாடகி, சங்கீத கலாநிதி : எம்.எல்.வசந்தகுமாரி ஆவார்

மேலும் இனிய பாடல்கள் இடம் பெற உள்ளன. உங்கள் கருத்துக்களை, விருப்பங்களை எங்களுக்கு சொல்லாமே.

பி.கு :
கூகிள் பிள்ஸ்சில், இந்த பதிவு பகிரப்பட்ட பொழுது, வாசு பாலாஜி அவர்கள், இதே பாடலை தஞ்சாவூர் எஸ்.கல்யாணராமன் பாடி இருப்பதை பகிர்ந்துக் கொண்டார். அவருக்கு நன்றி. இதோ அந்த பாடல், அருமையான குரலில் உங்கள் செவிகளுக்கும் :