தேவனின் கோவில்

இசை வணக்கம்.

பாடல் குறித்து எழுத்தாளர் சுகா சொன்னது முதலில்:

‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் ‘தேவனின் கோயில்’ பாடல், வெளிவந்த நாளிலிருந்து தொடர்ந்து என்னைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையில்லை. நானாக அந்தப் பாடலைக் கேட்பது போக, டீச்சரைப் போல யாராவது ஒருவர் தேவனின் கோயிலுக்குள் இழுத்துச் சென்று விடுவர். சிலசமயங்களில் காரணமேயில்லாமல் சில பாடல்கள், நாள் முழுதும் நம் மனதைச் சுற்றி வருவது போல , ஒருநாள் ‘தேவனின் கோயில்’ பாடலைத் தொடர்ந்து நாள்முழுக்க முணுமுணுத்துக் கொண்டேயிருந்தேன். சொல்லிவைத்தாற்போல நண்பர் விக்கி, நெதெர்லேண்ட்ஸிலிருந்து ஃபோனில் அழைத்தார்.

‘சுகா, குருவி சேக்குற மாரி துட்டு சேத்து, குட்டியானை கணக்கா ஒரு பியானோ வாங்கியிருக்கென்’.

‘வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா, விக்கி?’.

‘பொறவு? அதே சோலிதானெ!’.

‘தேவனின் கோயில் வாசிச்சு பாருங்க’ .

சிலநொடிகள் மௌனம். ‘விக்கி, விக்கி. லைன் கட் ஆயிட்டா?’

‘என்ன சுகா இது அநியாயம்? அந்தப் பாட்டப் பத்திப் பேசத்தானெ ஒங்களக் கூப்பிட்டென். ரைட் ஹேண்ட் நோட்ஸ்லாம் ப்ராக்டிஸ் பன்ணிட்டென். லெஃப்ட் ஹேண்ட்ல பாஸ் கிதார் நோட்ஸ்தான் கைய ஒடிக்கி. எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல் வாசிச்சிருவ்வேன்னுதான் நெனைக்கென்’.

என்னைப் போலவே திருநவேலிக்காரரான விக்கி, வயலினும், பியானோவும் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர். ’தேவனின் கோயில்’ பாடலின் பாஸ்கிதார் பகுதிகளை ஒரு மாதத்தில் வாசித்து விடுவேன் என்று விக்கி சொன்னதில் அர்த்தமில்லாமலில்லை. பொதுவாகவே இளையராஜாவின் பாடல்களின் ஆதார அஸ்திவாரமே, பாஸ்கிதார்தான். ஒட்டுமொத்தப் பாடலின் கட்டுமானத்தையும் தாங்கிப் பிடிக்கும் பாஸ்கிதாரின் அற்புதமான வாசிப்பை ‘தேவனின் கோயில்’ பாடல் முழுவதும் நாம் கேட்கலாம். சினிமா பாட்டு கேட்பது தெய்வக்குற்றம் என்கிற அளவுக்கு கொள்கைப்பிடிப்புடைய கிறிஸ்டோஃபர் ஸார்வாள் தனது கிதார் பயிற்சியின் போது ‘தேவனின் கோயில்’ பாடலின் கிதார் பகுதிகளை, ரகசியமாக ரசித்து வாசித்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்.

‘ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேமப்ரியம் ப்ரேமவஸ்யப்ரேமம்’ என்று இளையராஜாவின் குரலில் அந்தப் பாடல் துவங்கும் போதே கணேசண்ணனின் கண்கள் கலங்கத் துவங்கும். சொல்லியிருந்த ’விவா டீ’ கைக்கு வரவும், கொஞ்சமும் கூச்சப்படாமல் தரையில் உட்கார்ந்து பாடலைக் கேட்க ஆரம்பிப்பான். பாட்டு முடிந்த பிறகுதான் கண்களைத் திறப்பான். ‘அண்ணாச்சி, இன்னொரு மட்டம் இந்தப் பாட்ட போடுங்களென்’ என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டு, என்னிடம் ‘தம்பி, இன்னொரு விவா டீ சொல்லென்’ என்பான்.

‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’.

ஆனாலும் அன்று மாலையே, ‘சதனுக்குப் போவோமா? தேவனின் கோயில் கேட்டுட்டு வருவோம்’ என்பான்.

கணேசண்ணன் சொன்னது போல, தேவனின் கோயில் பாடலோடு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரது பங்களிப்பும் அந்தப் பாடலை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. சித்ராவின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கை ‘தேவனின் கோயில்’ பாடல் ஆற்றியிருக்கிறது. மிக சன்னமான தொனியில் இந்தப் பாடலைப் பாடத் துவங்கும் அவர், இரண்டாவது சரணம் முடியும் இடமான ‘நானோர் கண்ணீர்க் காதலி’ என்னும் போது குரல் உடைந்து, அதேசமயம் ஸ்ருதிவிலகாமல் பாடி, கேட்பவரைக் கலங்க வைக்கிறார். அந்த சமயத்தில் முழுமையாக தமிழைப் புரிந்து கொண்டு பாடக்கூடியவராக சித்ரா இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ‘நானொரு சோக சுமைதாங்கி’ என்ற வரியிலும், ’கேட்டால் தருவேன் என்றவன் நீயே, கேட்டேன் ஒன்று தந்தாயா’ என்ற வரியிலும் அவரது குரலிலுள்ள உணர்ச்சியை கவனித்தால், ‘யாருப்பா சொன்னா அது மலையாளத்துப் பிள்ளன்னு? அது நயம் தமிளச்சில்லா’ என்று அடித்துச் சொல்லி விடலாம்.

 

இதுபோல ‘வாடி என் கப்பக்கிழங்கே’ பாடலாசிரியராகவே அதிகமாக அடையாளம் காட்டப்பட்டுவரும் கங்கை அமரனின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று ‘தேவனின் கோயில்’.

கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான பயிற்சியில் உள்ள ஒரு பெண் காதல்வயப்படுகிறாள். காதலனுடன் இணைய முடியவில்லை. இதை பாடலின் முதல் வரியிலேயே எவ்வளவு எளிமையாகச் சொல்லிவிடுகிறார்! ‘தேவனின் கோயில் மூடிய நேரம், நான் என்ன கேட்பேன் தெய்வமே!’. காதலனுடன் இணைய முடியாத காதலியை, ‘பிரிந்தே வாழும் நதிக்கரை போல, தனித்தே வாழும் நாயகி’ என்கிறார், கங்கை அமரன். துக்கத்தின் விளிம்பில் நின்று அவள் தன்னைப் பற்றி ’ஒருவழிப்பாதை என் பயணம்’ என்று பாடியபடியே, ’இணைவது எல்லாம் பிரிவதற்காக, இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக, மறந்தால்தானே நிம்மதி’ விரக்தியின் உச்சத்தைச் சொல்கிறார்.

‘தேவனின் கோயில்’ பாடலின் இசையமைப்பை எடுத்துக் கொண்டால் அதன் மெட்டைச் சொல்வதா, வாத்தியங்களின் அமைப்பைச் சொல்வதா, அதன் தாளத்தைச் சொல்வதா, எதைச் சொல்வது என்று புரியவில்லை. மிக எளிமையாகச் சொல்வதாக இருந்தால் இது ஒரு சோகப்பாடல். ஆனால் பாடலின் துவக்கத்தைக் கேட்டால் ‘ப்ரேமம் ப்ரேமாதி’ என நவீனமான முறையில் பல்குரல் பதிவாக இளையராஜாவின் குரல் கேட்கிறது. பிறகு சித்ரா ’தேவனின் கோயில்’ எனத் துவங்கும் போதே நம் மனம் கனக்கத் துவங்குகிறது. ’இங்கு என் ஜீவன் தேயுதே’ என்னும் வரியில் தேயு . .தே என்கிற ஒரு வார்த்தையில், பின்னால் வர இருக்கும் இசை பூகம்பத்தை நமக்கு சொல்லாமல் உணர்த்திவிடுகிறார், இளையராஜா.

பல்லவி முழுதும் தாளம் ஏதுமில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலின்முதல் இடையிசை (First interlude) தேவாலய மணியின் ஓசையுடன் துவங்கும் போதே, படம் பார்க்காமலேயே நம் கண்கள் முன்னால் காட்சி விரிகிறது.

இப்படி ஒரு சோகப்பாடலுக்கு இளையராஜா அமைத்திருக்கும் தாளம், சற்றே துள்ளலானது. வழக்கமாக சோகரசம் தொனிக்கும் பாடலென்றால் பண்டிட் பாலேஷுக்கு ஃபோன் செய்து, ‘செவன் டூ ஒன் வந்திருங்க பாலேஷ்ஜி’ என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து சொல்லி விடுவார்கள். அவரும் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பும் போதே தானும் மூக்கைச் சிந்தி, தன் ஷெனாயுக்கும் மூக்கைச் சிந்தச் செய்து கைக்குட்டையால் துடைத்து, அழைத்துச் செல்வார். ‘பாலேஷ்ஜி, ஒரு நாலு பார் ஹைபிட்ச்ல வாசிச்சு ஃபில் பண்ணிருங்க’ என்பார்கள்.

ஆனால் ‘தேவனின் கோயில்’ பாடலில் ஷெனாய்க்கு வேலையில்லை. இது போன்ற சோக கீதங்களில் கிட்டத்தட்ட ஷெனாயின் வேலையைச் செவ்வனே செய்திடும் புல்லாங்குழலும் நவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்விரு வாத்தியங்களின் வேலையையும் இந்தப் பாடலில் கிதார் எடுத்துக் கொள்கிறது. முதல் இடையிசையின் முடிவில் ’நானொரு சோக சுமைதாங்கி’ என்று பாடலின் மிக முக்கியமான பகுதியை சித்ரா துவக்குவதற்கு வசதியாக ’இந்தா புடிச்சுக்கோ, மகளே’ என்று தளம் அமைத்துக் கொடுக்கிறது, கிதார். பாடலின் துவக்கத்தில் பலகுரல்களாக ஒலித்த இளையராஜாவின் குரல், இரண்டாவது இடையிசையில் தெம்மாங்காக உச்சஸ்தாயியில் உற்சாகமாக ஒலிக்கிறது. ஆனால் எந்த வகையிலும் அந்த துள்ளலொலி பாடலின் மைய உருவைக் குலைக்கவில்லை. இது போன்ற நம்ப முடியாத இசை ஆச்சரியங்களெல்லாம் இளையராஜாவிடம் மட்டுமே சாத்தியம்.

ஒருநாள் திரைப்பட இயக்குனரும், நடிகருமான நண்பர் அழகம்பெருமாள் சொன்னார்.

‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’.

இந்த முறை, இப்படி ஒரு கட்டுரை எழுதிவிடும் அளவுக்கு என்னை ‘தேவனின் கோயிலுக்குள்’ கொண்டு போய் விட்டு, கதற வைத்தது யார் என்று தீவிரமாக யோசித்து, சற்று சிரமப்பட்டே விடையைக் கண்டுபிடித்தேன். அது வேறு யாருமல்ல. நானேதான்.

மேலும்: http://solvanam.com/?p=22579

Ilayarajaa ang gangaiamaran

பாடல்: தேவனின் கோவில்
படம்: அறுவடை நாள்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா

ப்ரேமம் ப்ரேமாதிப் ப்ரேமப்பிரியம் ப்ரேம வஷ்யப் ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதிப் ப்ரீத்தித்த ப்ரேமம் ப்ரீத்திவஷ்ய ப்ரீத்தம்
ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம் ப்ரீத்தம்
குமம் கும்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா மமஜீவனம் மமஜீவனம் மமஜீவனம்
மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மமஜீவிதம் மமஜீவிதம் மமஜீவிதம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!

தேவனின் கோவில் மூடிய நேரம்
நானென்ன கேட்பேன் தெய்வமே?
இன்று என் ஜீவன் தேயுதே!
என் மனம் ஏனோ சாயுதே!

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி!

இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி!

(தேவனின் கோவில்)

ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?

ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர்க் கண்ணீர்க் காதலி!

(தேவனின் கோவில்)

இன்னுமொரு இனிய பாடலோடு மீண்டும் இணைவோம்.

அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்!

இசை ரசிகர்களுக்கு வணக்கம்,

தொடர்ந்து இசைப்பா தளத்தின் பார்வைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நூறு பாடல்கள் என்கிற இலக்கை நெருங்கும் இவ்வேளையில் பாடலாசிரியர் இயக்குனர்,இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் பாடல் முதன்முறையாக இசைப்பாவிற்குள் வருகிறது.

raaja-amaranஇசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் சகோதரர் என்கிற அறிமுகத்தையும் தாண்டி என்றைக்கும்  நிலைத்திருக்கும் பாடல்களையும், படங்களையும் தந்திருக்கிறார் கங்கை அமரன். சின்னத்தம்பி படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையிருக்காது. 90 களில் ரஹ்மான் வருகைக்கு முன்னர் ராஜாவின் வெற்றிப் படங்களுள் சின்னத்தம்பிக்கு பெரிய இடம் உண்டு.

படத்தின் அனைத்து பாடல்களுமே இன்றைக்கும் ரசிக்கக்கூடிய பாடல்களே! கங்கை அமரன், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என இப்பாடலுக்குள் ஒரு பெரும்படையே இருக்கிறது. ஆனாலும் யாரும் தனித்துத் தெரியாத பாடல்.

பாடலில்

கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு!

என்றொரு வரி வருகிறது. பாட்டும் அப்படியே கட்டப்பட்டிருக்கிறது. சந்திர-சுந்தரி-மந்திர; ராணி-தேனீ-மேனி; அதரம்-சிதறும்; நாசி-ராசி; இப்படி எக்கச்ச்சக்கமாக சந்தச்சுவை மிளிர பாடல் இயல்பாக செவிக்குள் பாய்கிறது.

அதரம் என்றால் உதடு என்று பொருள் என்பது கூடுதல். இயல்பாகச் செல்லும் பாடல் வரிகளும், பாலசுப்ரமணியம் அதைப் பாடும் விதமும்,  தபேலாவைத் தாண்டி  புல்லாங்குழலும், வயலினுமாக போட்டி போட்டு ஈர்க்கும் இசையும் பாடலுக்குத் தேவையான உணர்ச்சிகளை அள்ளி வழங்குகின்றன. கேட்டு மகிழுங்கள்.

 

படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர்: கங்கை அமரன்

செம்பவள முத்துக்களை
சேத்து வச்ச சித்திரமே!
தங்க வள(ளை) வைர வள(ளை)
போட்டிருக்கும் முத்தினமே!
வாய் மலர்ந்து நீ சிரிச்சா,
காத்திருக்கும் அத்தனையும்!
நீ வளர்ந்து பாத்திருந்தா,
தோத்துவிடும் இத்தனையும்!!

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே!
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே!

முழு சந்திரன் வந்ததுபோல்
ஒரு சுந்தரி வந்ததென்ன?
ஒரு மந்திரம் செஞ்சதுபோல்
பல மாயங்கள் தந்ததென்ன?
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

பூவடி அவ பொன்னடி
அதத் தேடிப் போகும் தேனீ!
தேனடி அந்த திருவடி
அவ தேவலோக ராணி!
தாளம்பூவு வாசம் வீசும் மேனியோ?
அந்த ஏழுலோகம் பார்த்திராத தேவியோ?

இரத்தினம் கட்டின பூந்தேரு
உங்களப் படைச்ச தாரு!
என்னிக்கும் வயசு மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு!
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம் பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நெனப்பு சிதறும்!
ஏலப் பூவு கோலம் போடும் நாசிதான்!
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்!

மொட்டுக்கள் என்னைக்கு பூவாச்சு?
சித்திரம் பெண்ணென ஆச்சு!
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு!
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

இசைப்பாவில் உங்களுக்கு விருப்பமான பாடல்கள் கருத்துகளாக வரவேற்கப்படுகின்றன.

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.